கேரள வெள்ளம்: மீட்பு பணியில் வியக்க வைக்கும் 5 கதாநாயகிகள்
- எழுதியவர், விஷ்ணு ப்ரியா, நியாஸ் அஹமது
- பதவி, பிபிசி
கதாநாயகர்களாகவே யாரும் பிறப்பதில்லை. காலம் கதாநாயகர்களை தீர்மானிகிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஒருவர் எவ்வாறு எதிர்கொள்கிறார்? அந்த சூழ்நிலையில் அவர் பங்களிப்பு என்ன? என்பதை காலம் மிக கவனமாக பதிவு செய்து எதிர்காலத்துக்கு சொல்கிறது. அப்படி கேரள வெள்ளமும் சிலரை எதிர்கால சமூகத்துக்கு அடையாளம் காட்டி இருக்கிறது.
அவர்களில் சில பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்த தகவல்களை இங்கே பகிர்கிறோம்.
'கேரளாவின் மகள்'

பட மூலாதாரம், Facebook
சமீபத்தில் முகநூலில் அதிகம் கிண்டலுக்கு உள்ளானார் ஹனான் ஹமீத் . தன் படிப்புக்கு நிதி திரட்டுவதற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் மீன் விற்கும் இவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. சமூகஊடகம் என்றால் அனைத்து வினைகளும் இருக்கத்தானே செய்யும்? சிலர் இவரை கிண்டல் செய்தார்கள்.'விளம்பரத்திற்காக செய்கிறார்', 'ஆடம்பரமாக தெரிகிறார், கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லை என்பது பொய்' என்று கிண்டல் செய்தார்கள். ஆனால், பலர் அவரை பாராட்டதான் செய்தார்கள். காதி அவரை தனது விளம்பர தூதுவராக நியமித்தது. கேரள முதல்வர் அவரை அழைத்து பேசினார். அதன்பின், 'கேரளாவின் மகள்' என்று ஹனான் அறியப்பட்டார். இவர் கேரள வெள்ள நிவாரணத்திற்கென ஒன்றரை லட்சம் நிதி அளித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், "நான் வாழ்க்கையில் துயரத்தை மேற்கொண்ட போது,பலர் எனக்கு தாராளமாக உதவி செய்தார்கள். இப்போது அவர்கள் துயரில் இருக்கிறார்கள். அவர்களின் துயரை துடைப்பது என் கடமை. இந்த நிதியையும் மக்களிடமிருந்து திரட்டிதான் தருகிறேன்" என்று கூறி உள்ளார்.
தேச எல்லைகள் கடந்து அனைவரும் இவரை உச்சி முகர்ந்து வருகின்றனர்.

'நீங்கள் வரலாறு படைக்கிறீர்கள்'
மாவட்ட ஆட்சியர் என்றவுடன் நம் மனக்கண்ணில் சில காட்சிகள் விரியும்தானே? உடன் எப்போதும் டவாலி இருப்பார்? மடிப்பு களையாத உடை அணிந்து இருப்பார் என... ஆனால், அவை அனைத்தையும் உடைத்து... முகாம்களில் மக்களுடன் மக்களாக நிற்கிறார் திரிவனந்தபுர மாவட்ட ஆட்சியர் வாசுகி. முகாம்களில் உள்ள தன்னார்வலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களை 'ஓ' போட கோருகிறார், நம்பிக்கையாக பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறார்.
அவர், "நீங்கள் வரலாறு படைத்து கொண்டிருக்கிறீர்கள். மலையாளிகளால் என்ன செய்ய முடியும் என்பதை வெளி உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறி உள்ளார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு

'மக்களிடம் செல்'
சமூக ஊடகத்தில் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார் சுசிலா ஆனந்த். வெள்ளத்தில் சிக்கிய பெண்களுக்கு தேவையான பொருட்களை சேகரித்து அனுப்புவதில் அதிக கவனம் செலுத்துகிறார் சுசிலா.

பட மூலாதாரம், Facebook
"பெண்களுக்கு தேவையான பொருட்களை சேகரித்து அனுப்புவதில் நம்மை போன்றோருக்கே மிகப்பெரிய கவனமின்மை இருக்கிறது.பெண்களுக்கு தேவையான (நாப்கின்களை தவிர)பிரத்யேக பொருட்களில் கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கை களத்தில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. அவரவர் வீடுகளில் உள்ள பெண்களிடம் இப்போதேனும் கேட்டால் அவர்கள் சொல்லுவார்கள்." என்கிறார் சுசிலா.
சமூக ஊடக ஒருங்கிணைப்புடன் மட்டும் நின்றுவிடாமல் களத்திற்கும் செல்கிறார் சுசிலா ஆனந்த்.

'எதுவும் தடையில்லை'
"மரத்தில் எஞ்சியிருக்கும் கடைசி இலைக்கு பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா? வாய்க்கும். உச்சிவெயிலில் தரையில் ஒரு சிற்றெறும்பு நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம். காற்றில் ஆடியபடி தொடர்ச்சியாக எறும்பின் பாதையில் நிழலிட அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம். ஆட்டத்தின் உச்சத்தில் இலை மரத்தை விட்டு அகலலாம். அப்போதும், ஓர் குடையாய் எறும்பின் மேலேயே விழ வாய்த்தால், தாய் வந்து குட்டியை ஒளித்ததற்காக கண்சிவக்க கோபிக்கும் வரை அந்த இருப்பு தொடருமானால், அதுவே பெருமகிழ்ச்சி." - இது மலையாள கவிஞர் வீரன்குட்டியின் கவிதை. இப்படியான ஒரு நிகழ்வு கேரள வெள்ள நிவாரண விஷயத்தில் நிகழ்ந்திருக்கிறது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அட்சயா எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர், பிறவியிலேயே அவருக்கு இதய பிரச்சனை. கடந்த ஆண்டு உடனடியாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, சில அமைப்புகள் இவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். மீண்டும் இந்த ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நவம்பரில் அறுவை சிகிச்சைக்கு நாளும் குறிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அதற்கு சிறுக சிறுக இவரது பெற்றோர்கள் நிதி திரட்டி இருக்கிறார்கள். இந்த சூழலில் கேரள மக்களின் துயரத்தை கேள்விபட்ட இவர், மருத்துவ செலவுக்காக வைத்திருந்த தொகையிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை அளித்து இருக்கிறார்.

'கனவை அர்ப்பணித்தல்'
அவள் பெயர் அனுப்ரியா. விழுப்புரத்தை சேர்ந்த அவளுக்கு வயது எட்டு. அவளுக்கு ஒரு கனவு இருந்தது. அந்த வயதிற்கே உரிய எளிமையான கனவுதான் அது. மிதிவண்டி வாங்க வேண்டும். செம்மண் புழுதியில் அந்த மிதிவண்டியில் உலாவ வேண்டும். நன்கு மிதிவண்டி பழகியபின் அந்த மிதிவண்டியில் தன் பெற்றோரை வைத்து அழைத்து செல்ல வேண்டும் என்பதுதான் அந்த கனவு. அதற்காக சிறுக சிறுக தன் உண்டியலில் காசை சேர்த்தாள். 8,846 ரூபாய் வரை சேர்ந்துவிட்டது. அப்போதுதான் அவளுக்கு தன் தந்தை மூலம் கேரளா வெள்ளம் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் தெரிய வந்தது. உடைந்து போனாள். கொஞ்சமும் யோசிக்காமல் தன் கனவை தானே கலைத்து தான் சேமித்து வைத்திருந்த தொகையை வெள்ள நிவாரணத்திற்கு அனுப்பினாள்.

பட மூலாதாரம், FACEBOOK.COM/ARUN.RATHINAM.5
இவரை பாராட்டி ஹீரோ நிறுவனம் மிதிவண்டி வழங்கி இருக்கிறது.
நாங்கள் சில பெண்களையும் சிறுவர்களையும் மட்டும் இங்கே பகிர்ந்து இருக்கிறோம். இன்னும் வெளியே தெரியாமல், தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பலரும் தங்களாலான உதவிகளைச் செய்து வருகிறார்கள். அரசே செல்ல முடியாத இடத்திற்கு கூட, நிவாரண பொருட்களுடன் செல்கிறார்கள். குறிப்பாக மீனவர்கள். கேரள முதல்வர் கூறியது போல அவர்களின் பணி நிச்சயம் மகத்தானதுதான்.
கேரள வெள்ள நிவாரணத்தில் களத்தில் நிற்கும், உங்களுக்கு தெரிந்த சில பெண்களை இந்த கட்டுரைக்கு பின்னூட்டமாக ஃபேஸ்புக்கிலும் , ட்வீட்டரிலும் இடுங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












