"விராட் கோலிதான் உலகின் மிகச்சிறந்த வீரர்" - முன்னாள் இங்கிலாந்து கேப்டன்
இங்கிலாந்து இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியதை தொடர்ந்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான் என பாராட்டியிருக்கிறார்.

பட மூலாதாரம், Philip Brown
டிரென்ட் பிரிட்ஜில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் எடுத்தார். கோலி உதவியால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 352/7 எடுத்தது. இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக விதிக்கப்பட்டுள்ளது.
'' நிறைய சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் ஆனால் விராட் அவர்களையெல்லாம் விட மூன்று வடிவங்களிலும் தனித்து நின்று இந்த சகாப்தத்தின் மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திலும் அவர் மிகச்சிறப்பாக விளையாடும் திறனை பெற்றுள்ளார்''
இந்த தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் விராட் கோலி 93 ரன்கள் எடுத்திருந்தபோது அவரை அவுட் ஆக்குவதற்கான வாய்ப்பை தவறவிட்டதால் கோலியால் இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தை எடுக்க முடிந்தது. ஆறு இன்னிங்ஸில் 440 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பேர்ஸ்டோ எடுத்திருக்கும் ரன்களை விட கோலி இரண்டு மடங்கு அதிகமாக எடுத்துள்ளார்.

பட மூலாதாரம், AFP
29 வயது கோலியின் ஆட்டமானது 2014-ல் அவர் இங்கிலாந்துக்கு வந்து ஆடிய விதத்தில் இருந்து தற்போது முற்றிலும் மாறான முறையில் இருக்கிறது. நான்கு வருடத்திற்கு முன்பு நடந்த இத்தொடரில் 10 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த ரன்கள் 134 மட்டுமே. ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்த அதிகபட்சம் 39 ரன்கள்தான்.
இத்தொடரில் இதுவரை அதிக ரன் குவித்த வீரர்கள்
'' இந்த தொடரில் கோலி சரியாக பந்துகளை கணித்து, அடிக்காமல் விட வேண்டிய பந்துகளை விட்டுவிடுகிறார். அவர் தனது ஆட்டபாணி குறித்து நன்றாக பயிற்சி செய்துகொண்டு தெளிவான திட்டத்துடன் வந்திருப்பதாக எனக்குத் தெரிகிறது '' என்கிறார் வான்.
'' அவர் வியப்பான ஒரு வீரர் . இங்கிலாந்து மைதானங்களில் உள்ள சூழ்நிலைகளில் அவரால் பேட்டிங் செய்ய முடியுமா? என பொதுவாக கேள்விகள் இருந்தது. ஆனால் எனக்கு இப்போது அந்த சந்தேகம் இல்லை. அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அவர்தான் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஒரு நம்பவேமுடியாத வீரர்'' எனக் கூறியுள்ளார் வான்.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரரை விட இந்திய அணியின் கேப்டன் கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு படி மேலே என மதிப்பிடவேண்டும் என நினைப்பதாக இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் பால் ஃபாப்ரேஸ் தெரிவித்துள்ளார்.
'' அவர் தன்னை வளர்த்துக்கொண்டு அற்புதமாக இத்தொடரில் விளையாடி வருகிறார். விராட் கோலி விளையாடும் விதத்தை பார்ப்பது அருமையானதாக உள்ளது. அவர் உயர்தர வீரர் மேலும் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறார்.''
''அவர் குவித்துள்ள ரன்களுக்கு தகுதியானவராக இருக்கிறார். அவர் தனது விக்கெட்டை வீழ்த்த நிறைய வாய்ப்புகளை தந்தார் என எங்களது பௌலர்கள் வாதிடலாம். ஆனால் அவர் உயர்தரமான கிரிக்கெட் விளையாடுகிறார்.''
''நல்ல வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும் என நான் பெரிய அளவில் நம்புகிறவன். விராட் கோலி விளையாடும் விதத்தை எங்களது வீரர்கள் கவனிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார் துணை பயிற்சியாளர் பால் ஃபாப்ரேஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












