குஜராத்தில் தலித்துகளின் மீசையும் ஜீன்சும் மற்றவர்களை உறுத்துகிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரியங்கா தூபே
- பதவி, பிபிசி
வரவிருக்கும் குஜராத் மாநில தேர்தல் தனக்கு முக்கியமானது இல்லை என்று சொல்லும் குணால் மஹேரியா, தலைநகர் காந்திநகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வசிப்பவர்.
லிம்போத்ரா கிராமத்தில் தலித் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் குணாலின் கருத்துப்படி, ஆட்சியில் இருப்பது பாரதிய ஜனதா கட்சியோ, காங்கிரசோ, தலித் மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை.
அவரின் விரக்திக்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் இருப்பது உண்மைக்கதை, அவர் நேரடியாக பாதிக்கப்பட்ட சம்பவம்..
"நண்பனை சந்தித்துவிட்டு வீடு திரும்பி வந்துக்கொண்டிருந்த அந்த இரவு வேளையை மறக்கவேமுடியாது. நடந்து கொண்டிருந்த நான் பின்புறமிருந்து மோட்டர்பைக் வரும் ஓசையை கேட்டேன். பைக்கில் வந்தவர் எங்கள் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் இருக்கும் ஆதிக்க சாதியினர் குடியிருப்பை சேர்ந்த பரத் வாகேலா".
"சாலையோரமாக ஒதுங்கி நடந்த என்னருகே வந்து பைக்கால் மோதினார். நான் சற்று நகர்ந்துவிட்டேன். சற்று தூரம் சென்ற அவர் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு, ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த எனக்கு அவர் முன்பு பேசும் தைரியம் எப்படி வந்தது என்று கேட்டார்".
இதைச் சொல்லிவிட்டு மெளனமாகிவிட்டார் குணால். இரண்டு அறைகள் கொண்ட தனது வீட்டில் தந்தையுடன் அமர்ந்திருந்த குணால், கையில் இருக்கும் மொபைலை நோண்டுவதும், தரையை பார்ப்பதுமாக இருக்கிறார்.
மேல் சாதியினருடன் மோதல்கள்
சிறிது நேரத்திற்கு பிறகு கமறிய குரலில் மீண்டும் பேசுகிறார், 'சண்டை போட எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு விலகிச் செல்ல முற்பட்டேன். ஆனால், அவர், தன்னுடைய பைக்கை என் முன்னால் நிறுத்தி நான் செல்வதை தடுத்தார்'.
"பைக்கில் இருந்து தடியை எடுத்த பரத் வாகேலா, என்னை திட்டிக்கொண்டே அடிக்கத் தொடங்கிவிட்டார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்னை காப்பாற்ற செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. என்னை சாதிப்பெயரை சொல்லி வசை பாடினார் அவர்".

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேரின் மீது நடைபெற்ற தாக்குதல்களில் குணால் மீதான தாக்குதலும் ஒன்று. காலோல் காவல்நிலையத்தில் பரத் வாகேலா மீது இந்திய தண்டனைச் சட்டம் 323-வது பிரிவு மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்கான சட்டம்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்று பரத் வாகேலா மற்றும் அவரது நண்பர்களிடம் அறிவுறுத்திவிட்டு சென்றதைத் தவிர காவல்துறையினர் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
"சம்பவத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்த என்னை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அப்பா அழைத்துச் சென்றார். எனக்கு ஏற்பட்டிருந்த படுகாயங்களை பார்த்த அரசு மருத்துவமனை மருத்துவர், காவல்துறையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னதால்தான் காவல்நிலையத்தில் புகாரளித்தோம். ஆனால் விசாரணை இன்னமும் முடியவில்லை.
லிம்போதராவில் வசிக்கும் பீயூஷ் பர்மர் மற்றும் திக்ன் மேஹ்ரியா மீதும் இதே போன்ற தாக்குதல் செப்டம்பர் 25ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. 21 வயது பீயூஷும், 17 வயது தீக்னும் கிராமத்தில் நடைபெற்ற கார்பா திருவிழாவிற்கு சென்றிருந்தார்கள்.
"கிராமத்தில் இருக்கும் தாக்கூர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தலித்துகள் திருவிழாவிற்கு வருவது பிடிக்கவில்லை. மீசை வைத்த தலித் இளைஞர்கள், சட்டையும் ஜீன்சையும் அணிந்து கொண்டு டிப்-டாப்பாக வந்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அன்று வார்த்தைகள் தடித்தாலும், நிலைமை மோசமாகவில்லை. ஆனால் அடுத்த நாள், தலித்துகளுக்கு பேசும் தைரியம் எப்படி வந்தது என்று கூறி தாக்குதல் நடத்தப்பட்டது".

பட மூலாதாரம், Getty Images
குணால் கூறுகிறார், "திக்ன் பள்ளிக்கு செல்லும்போதும், பீயூஷ் வேலைக்கு செல்லும் வழியிலும் அவர்களை மறித்து அடித்தார்கள். காயமடைந்த திக்ன் 11ஆம் வகுப்பு பரிட்சையைக் கூட எழுதமுடியவில்லை. அதற்கு சில தினங்களுக்கு பிறகு அக்டோபர் மூன்றாம் தேதியன்று என்மீது தாக்குதல் நடத்தினார்கள்".
புகாரை திருப்பி வாங்குமாறு அச்சுறுத்தல்
கத்தியால் திக்ன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, அவர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தார்கள். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட அழுத்தத்தால் சில நாட்களிலேயே புகார் திரும்ப வாங்கப்பட்டது.
"பிளேடால் தாக்கப்பட்ட பிறகு மிகவும் பயந்து போயிருந்த திக்ன் குடும்பத்தினருக்கு புகாரை திரும்பப்பெறவேண்டும் என்று வந்த அழுத்தத்தால் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்" என்கிறார் குணாலின் அப்பா ரமேஷ் பாய்.
லிம்போதராவில் தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு காரணம் என்ன? பதிலளிக்கிறார் குணால்.
"கிராமத்தில் ஆதிக்க சாதி மக்களிடம் கூலி வேலை செய்து பிழைத்துவந்தோம். இப்போது நாங்கள் அனைவரும் வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பதால், அவர்களிடம் வேலைக்கு செல்வதில்லை, அது அவர்களுக்கு பிடிக்கவில்லை".
குணால் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தில் வேலை செய்கிறார், அவரது தந்தை ரமேஷ் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார்.
"நாங்கள் மீசை வைத்திருப்பதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நாங்கள் ஜீன்சும், சட்டையும் போடுவது அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. எங்கள் வருமானத்தில் நிம்மதியாக உண்டு உறங்குவது அவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறது. நாங்கள் அவர்களை அண்டி, அவர்களுக்கு கீழே அடிமையாக வாழவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் இப்படி செய்கிறார்கள்".
லிம்போத்ராவில் தலித் இளைஞர்கள் மீதான சாதியவாதத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில், "சாதியவாதத்திற்கு எதிராகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும்" என்ற ஹேஷ்டேக்குடன் "நானும் தலித்" என்ற பிரசாரம் தொடங்கியுள்ளது.
ஒரு சிலர் தாங்கள் மீசையுடன் இருக்கும் புகைப்படங்களை முகப்பு படங்களாக வைத்துள்ளனர். மேலும் #MrDalit மற்றும் #DalitWithMoustache போன்ற ஹேஷ் டேக்குகளை டிவிட்டரில் பயன்படுத்தியுள்ளனர்.
தலித் சமூகத்தினர் மீசை வைத்திருப்பது ஆதிக்க சாதியினரை எரிச்சலூட்டுகிறது என்றால் தலித் சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் மீசை வளர்க்க வேண்டும் என்றும் சமூக தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதிலும் இருந்து தலித் இளைஞர்கள் தங்கள் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

பட மூலாதாரம், PIYUSH PARMAR
சமூக ஊடகங்கள்
"சமூக ஊடகங்களில் எனக்கு கிடைத்த ஆதரவு எனக்கு தெம்பூட்டுகிறது. இருந்தாலும், தினசரி வாழ்க்கையை நான் தனியாகத்தானே எதிர்கொள்ளவேண்டும்? நான் எப்படி தனியாக அலுவலகத்திற்கு செல்வேன் என்று சமூக ஊடகங்களில் பதிவிடும் யாராவது கேட்பார்களா என்ன? செல்லும் வழியில் யாராவது என்னை கொலை செய்துவிட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
மனதளவில் முழுவதுமாக உடைந்து போயிருக்கும் குணால், மன அழுத்தத்தில் இருப்பதாக சொல்கிறார். "எப்போதும் பயத்துடனும், வருத்தத்துடனும் இருக்கிறேன். தேர்வுகளை சரியாக எழுத முடியவில்லை, தீபாவளியை கொண்டாட முடியவில்லை. எங்கள் வீடே சோகத்தில் மூழ்கியிருக்கிறது".
வாழ்க்கையே மாறிவிட்டது என்று கூறும் அவர், "தினமும் காலைவேளைகளில் 5 கிலோமீட்டர் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் நான், தற்போது அதை நிறுத்திவிட்டேன். மாலையில் வீட்டிற்கு வர நேரமானால் பெற்றோர் பதைபதைத்து போகின்றார்கள். அலுவலகத்திற்கு சென்றாலும் பயமாக இருக்கிறது. எங்கள் சொந்த கிராமத்திலேயே கைதிகளைப்போல வாழ்கிறோம்".

பட மூலாதாரம், Facebook
குஜராத் தேர்தலுக்கும் இந்த இளைஞனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் ஜிக்னேஷ் மேவானி என்பவரின் பெயரை சொன்னதுமே குணால் இவ்வாறு கூறுகிறார், "ஜிக்னேஷ் எங்களுகு நிறைய உதவிகள் செய்தார். எனக்கு போன் செய்த அவர், பயப்படாதே, நான் உனக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று ஆறுதல் சொன்னார். அவரிடம் இருந்து எங்களுக்கு ஆதரவு கிடைத்தாலும், அரசியலிலோ அல்லது தேர்தலிலோ எங்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை.
மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால் இரண்டு கட்சிகளாலும் எங்களுக்கு எந்தவித உதவியும் இல்லை. எனவே இந்த நாட்டில் தலித்துகளுக்கு தேர்தலால் எந்த நன்மையும் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.
குஜராத் மாநில மக்கள்தொகையில் தலித்துகள் ஏழு சதவிதம் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் அரசியலில் அழுத்தம் ஏற்படுத்தும் நிலையை எட்டவில்லை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














