தலித் மீதான தாக்குதல் பற்றி பேச அனுமதி மறுப்பு? எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் மாயாவதி

பட மூலாதாரம், Getty Images
தலித் சமுதாயத்தினர் மீதான தாக்குதல் பற்றி பேச நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படுவதில்லை எனக்கூறி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ராஜிநாமா செய்தார்.
மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை தொடங்கியதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைப் பற்றி குரல் எழுப்ப மாயாவதி முற்பட்டார்.
இதையடுத்து அவர் பேச மூன்று நிமிடங்களுக்கு மட்டுமே மாநிலங்களவையை வழிநடத்திய துணைத் தலைவர் பி.ஜே. குரியன் அனுமதி அளித்தார்.
ஆனால், மாயாவதி பேசி முடிக்கும் முன்பே அவரது பேச்சை பாதியிலேயே இடைநிறுத்தம் செய்ய மாநிலங்களவை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த மாயாவதி, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டினார்.
பின்னர் அவர் மாநிலங்களவையில் இருந்தும் வெளிநடப்பு செய்தார்.
இதைத்தொடர்ந்து, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனை அவரது அறையில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் மாயாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,`நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாழத்தப்பட்டோர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை மாநிலங்களவையில் எழுப்ப எனக்கு உரிய நேரம் அளிக்கப்படவில்லை. பேச வாய்ப்பு இல்லாதபோது எம்.பி. ஆக இருப்பதில் என்ன பயன் உள்ளது? அதனால் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்` என்றார்.
இதையடுத்து தனது ராஜிநாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீது அன்சாரிக்கு மாயாவதி அனுப்பி வைத்தார்.
மாயாவதியின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டதா என்பது குறித்து மாநிலங்களவை செயலகம் செவ்வாய்க்கிழமை மாலை வரை உறுதிப்படுத்தவில்லை.
மாயாவதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிவடைகிறது.
மாநிலங்களவையில் மாயாவதி, முன்காத் அலி, அசோக் சித்தார்த், சதீஷ் சந்திர மிஸ்ரா, ராஜாராம், வீர் சிங் ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர். மக்களவையில் அக்கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை.
பிற செய்திகள்:
- சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? கேள்வி எழுப்பியதால் டிஐஜி ரூபா பணியிட மாற்றமா?
- 67 வயது பெண்ணின் கண்ணில் 27 காண்டாக்ட் லென்ஸ்கள்
- குறுஞ்செய்திகளை அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி!
- 40 நிமிடங்கள் நாடித்துடிப்பில்லாமல் தவித்தவர் உயிர் பிழைத்த அதிசயம்
- பசு பக்தி என்ற பெயரால் நடக்கும் படுகொலைகளை ஏற்க முடியாது: மோதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












