'பசு பாதுகாவலராக ஒரு முஸ்லிம் இருக்க முடியாதா? '
- எழுதியவர், நிதின் ஸ்ரீவாத்சவ்,
- பதவி, பிபிசி செய்தியாளர்
தலைநகர் தில்லியின் கொளுத்தும் வெயிலில், துர்க்மான் கேட்டுக்கு எதிரே உள்ள தெருவில் நடுத்தர வயது இஸ்லாமியர் ஒருவரை பின் தொடரும் பயணம் இது.

இடப்புறமாக பார்த்தால், வெறிச்சோடிப் போய் கிடக்கும் ஒரு கல்லறை, அது ஒரு பெண்ணின் கல்லறை. இடைக் காலத்தில் தில்லியில் ஆட்சி புரிந்த ஒரே பெண்ணரசி ரஜியா சுல்தான் இங்குதான் புதைக்கப்பட்டார்.
முப்பது அடி தொலைவில் ஹனுமான் கோவில் உள்ள தோட்டம், அங்கு செல்வதற்காக காலணிகளை கழற்றிவிட்டேன்.
முதலில் அந்த இஸ்லாமியர் உள்ளே சென்றார். கோயில்பூசாரிக்கும், அங்கிருந்தவர்களுக்கும் அவர் பரிச்சயமானவராக இருந்தார்.
அங்கிருந்து சில படிகள் கீழே இறங்கிச் சென்றால் ஒரு மாட்டுக் கொட்டகை தென்பட்டது. அங்கு 20-25 மாடுகள் இருந்தன.
நான் பின் தொடர்ந்தவரின் பெயர் தில்தார் ஹுசைன் பேக். அவர் மாடுகளின் அருகே சென்று அவற்றை தடவிக் கொடுத்துக் கொண்டே, தீவனம் கொடுக்கத் தொடங்கினார்.
இதற்கு என்ன காரணம்?
இது, அந்த இரண்டையும் விட என்னை நன்றாக அடையாளம் கண்டு கொள்கின்றன என்று கூறும் தில்தார், நான் படிக்கட்டில் இருந்து இறங்கியதும் முதலில் இதன் அருகில் தான் செல்வேன் என்கிறார்.
பழைய தில்லியில் வசிக்கும் பிலால் மற்றும் அஹ்மத் என்ற இரு முஸ்லிம் இளைஞர்களும் அப்போது அங்கு வந்து சேர்ந்தனர். ஹனுமான் ஆலயத்தின் பிரசாதத்திற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
தில்தாரின் விசிடிங் கார்டில் "முஸ்லிம் மாடுகள் பாதுகாப்பு அணி" என்று காணப்பட்டது. மாடுகளை பாதுகாப்பதில் நீங்கள் இணைவதற்கு முக்கிய காரணம் என்ன? இது அரசியலா? இல்லை அதற்கு அப்பாற்பட்டதா? என்ற கேள்விகளை என்னால் கேட்காமல் தவிர்க்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
"பசு வதை செய்வதாக முஸ்லிம் சமுதாயத்தின் மீது இருக்கும் குற்றச்சாட்டை நீக்கவேண்டியது ஒரு இஸ்லாமியனாக எனது முதல் கடமை. இது குறித்து என் சமுதாயத்தினரிடமும் பேசவேண்டும்" என்று பதிலளித்தார் தில்தார்.
முஸ்லிம் தலைவராக உருவெடுக்கவேண்டும் என்பதற்காக செய்யும் தந்திர நடவடிக்கையா இது? என்றும் கேட்டேன்.
அல்லாவின் அருளால் எனக்கு எந்தவித குறையுமில்லை. தேவையான அனைத்தும் என்னிடம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பசு பாதுகாப்பு பற்றி பேசியபோது முதலில் அனைவரும் என்னை கேலி செய்தார்கள். உறவினர்களும், நண்பர்களும் எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சந்தேகப்பட்டு, அதை என்னிடமே கேட்கவும் செய்தனர்.
ஆனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை என்கிறார் திலால். "என்னைப் போன்ற 50-55 இஸ்லாமியர்கள் என்னுடன் இணைந்திருக்கிறார்கள், இன்னும் பலர் எங்களுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்".
தில்தாரின் மனம் திறந்த பேச்சில் நேரம் போனதே தெரியவில்லை, மாட்டுக் கொட்டகையின் இறுதிப் பகுதிக்கே வந்துவிட்டோம். இருந்தாலும் அவர் நடு-நடுவே கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டேயிருந்தார். சிறிது நேரத்தில் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வரவேண்டும் என்ற கடமையில் இருந்தும் அவர் கவனம் சிதறவில்லை.

"ஹனுமான் கோயில் தோட்டத்திற்கு கடந்த 10-15 ஆண்டுகளாக வருகிறேன். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக மாடுகள் வெட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டபோது, மாட்டுக்கறி உண்பதை தவிர்க்கலாம் என்று நான் மக்களிடம் சொல்ல ஆரம்பித்தேன்". "மத உணர்வுடன் தொடர்பில்லாத எருமை போன்ற பிற வகை மாமிசங்களை சாப்பிடலாமே" என்று கேட்டாராம் திலால்.
அது சரி, நீங்கள் மாமிசம் சாப்பிடுவீர்களா? வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகள் குடும்பத்தினர் அசைவ உணவு சாப்பிட மாட்டார்களா? என்று கேட்டேன்.
நானும், குடும்பத்தினரும் சிக்கன் சாப்பிடுபவர்கள்தான். நாள்தோறும் ஐந்து முறை தொழுகை செய்யும் முஸ்லிம் நான். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மத நம்பிக்கைக் கொண்டவர்கள்தான். "நான் முஸ்லிமாக இருந்தால் பசு வதைக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடாதா என்ன?" என்று கேட்கிறார் தில்தார் ஹுசைன்.
தேர்தல் களத்தில்
2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோற்றுப் போனாலும், தில்தார் ஹுசைனுக்கு அதில் வருத்தமில்லை. ஏன் தெரியுமா? தில்லியில், கைவண்டி இழுக்கும் தொழிலாளர்கள் அளித்த அமோக ஆதரவை நினைத்து பெருமைப்படுகிறார் தில்தார் ஹுசைன்.
தொழிற்சங்கங்களால் முன்னிறுத்தப்படும் சில இஸ்லாமியர்களின் பட்டியலில் நீங்கள் வரவில்லையா என்று நான் கேட்டேன்.
நான் எந்தவொரு கட்சியையோ, இயக்கத்தையோ சார்ந்தவன் இல்லை. அப்படி இருந்திருந்தால் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருப்பேன். சுயேச்சையாக போட்டியிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் பசுக்களுடன் மதரீதியாக பிணைக்கப்பட்டு, அவற்றை வெட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால், அது தொடர்பாக சட்டம் உருவக்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் மாடுகளை பாதுகாப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். வேறு எந்த காரணமும் இல்லை என்கிறார் தில்தார்.
சிறுபான்மை சமுதாயத்தினர்
" பசு பாதுகாவலர்களின் தொல்லையால், சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் அவநம்பிக்கை அதிகரித்திருக்கிறதா? பிடித்த உணவை உண்ண அவர்களுக்கு உரிமை இல்லையா? "
சிறிது இடைவெளி விட்டு, ஆனால் நீண்ட ஒரு பெருமூச்சுடன் தில்தார் சொன்ன பதில் இது, "சிலர் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மற்றவர்களை பயமுறுத்தி தங்கள் வியாபாரத்தை நடத்துகிறார்கள். வன்முறையால் அச்சுறுத்துகிறார்கள்".

பட மூலாதாரம், Getty Images
"நான் அவர்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான். அனைவரும் இணைந்து தான் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். அவர்கள் செய்வது தவறு தான். பசுவை கொல்வதை இந்துக்கள் எதிர்த்தால், அதை ஏற்றுக் கொள்வதும் மிகபெரிய விசயம் இல்லை. மாட்டுக் கறி சாப்பிடவேண்டாம், ஆட்டுக்கறி சாப்பிடலாம், சிக்கன் சாப்பிடலாம்" என்று சொல்கிறார் தில்தார் ஹுசைன்.
"மூன்று மணியாகிவிட்டது, குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வரவேண்டும் என்று வீட்டில் இருந்து போன் வந்துவிட்டது. "ஹனுமான் கோ.ல் பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள், நான் இருபது நிமிடத்தில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார் தில்தார் ஹுசைன்.
இப்போது நான் ஒரு கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறேன். "ஹுசைன் போன்ற சிலரின் குறிக்கோள் இவர் சொன்னதாகத்தான் இருக்குமோ?" என்பது தான் அந்தக் கேள்வி.
பின்வரும் செய்திகளில் நீங்கள் ஆர்வம் காட்டலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












