நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை யாருக்கு?
- எழுதியவர், ஷகீல் அக்தர்
- பதவி, பிபிசி உருது செய்தியாளர்
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், எருமை, கோழி மற்றும் ஆடு போன்ற இறைச்சி வகைகளின் வியாபாரம் ஏறக்குறைய முடங்கிவிட்டது.

பட மூலாதாரம், AL KABEER.COM
ஒரு கணிப்பின்படி, மாநிலத்தில் இறைச்சி வியாபாரம் சுமார் 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும், இந்தத் தொழில், ஏறக்குறைய ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் பாரதீய ஜனதா கட்சியின் "இறைச்சிக் கொள்கை" தான் பேசுபொருளாகிவிட்டது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதும், "சட்டவிரோத" இறைச்சிக் கூடங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று பாரதீய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
இதற்கு முன்னர் பாரதீய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இல்லாத போது, அரசின் உதாசீனம், ஊழல், திறமையின்மை போன்ற காரணங்களால் பல இறைச்சிக்கூடங்கள், தங்கள் விருப்பம்போல் செயல்பட்டன.

பட மூலாதாரம், AL KABEER.COM
சிறு நகரங்கள் மற்றும் நகரங்களில் நீண்ட காலமாகவே, இறைச்சிக் கடை வைப்பதற்கான உரிமம் இல்லாத சிறு வியாபாரிகள் தனியார் இடங்களில் பல்வேறு வகையான இறைச்சிகளையும் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
நவீன இறைச்சிக் கூடங்களை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை என்பதோடு, அதிக முதலீடு தேவைப்படுபவை.
இதனால், அரசு புதிய மற்றும் நவீன இறைச்சிக் கூடங்களை அமைப்பதை தவிர்த்தது. சட்டவிரோத முறையில் நடத்தப்படும் இறைச்சி வியாபாரத்திற்கு எதிராக அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்ததால் அவை மறைமுக ஊக்கம் பெற்றன.
கடந்த தசாப்தத்தில் மாநிலத்தில் பெரிய அளவிலான நவீன கருவிகளை கொண்ட இறைச்சிக்கூடங்கள் தொடங்கப்பட்டு, ஆண்டொன்றுக்கு சுமர் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இறைச்சி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
சட்டத்தில் மாற்றம்
தற்போது, உத்தரப்பிரதேசத்தில் நவீன இறைச்சிக்கூடங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்திலும், நாட்டிலும் ஏற்பட்டிருக்கும் நிலைமையை பார்க்கும்போது, இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுவது, ஏதோ குற்றச் செயல் செய்வதைப் போன்ற தோற்றம் ஏற்படுவதாக இறைச்சி ஏற்றுமதியாளர்கள் கூறுகிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தை அடுத்து, ஜார்கண்டிலும் சில இடங்களில் இறைச்சி விற்பனைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்து அமைப்புகளும், அனைத்துவிதமான இறைச்சி விற்பனைக்கும் தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன.
மறுபுறம், குஜராத் சட்டப்பேரவையில் ஏற்கனவே இருந்த சட்டம் திருத்தப்பட்டு, புதிய மசோதாவின் கீழ், மாட்டை கொல்பவர்களுக்கு ஏழு ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மாட்டை கொண்டு செல்லும் வாகனங்கள் நிரந்தரமாக பறிமுதல் செய்யப்பட்டு, அவ்வாறு கொண்டு செல்பவர்களுக்கு பல லட்ச ரூபாய் அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
மாநிலத்தில் ஏற்கனவே மாடுகள் கொல்லப்படுவதற்கு தடை இருப்பதுடன், அது திறம்பட அமல்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் இறைச்சிதான் என்று மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters
மாமிச உணவு உண்பவர்கள் வன்முறையாளர்கள், கொடூரமானவர்கள், தூய்மையற்றவர்கள் என்றும், சைவ உணவு உண்பவர்கள் சுத்தமானவர்கள், சிறந்தவர்கள், நேர்மையானவர்கள் என்ற உணர்வு இங்கு நீண்டகாலமாக பரப்பப்பட்டு வருகிறது.
இந்துக்கள், அசைவ உணவுப் பிரியர்கள்
பொதுவாக நம்பிக்கைக்கு மாறாக, இந்தியாவில் இந்துக்களில் பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் தான். அதேபோல, முஸ்லிம், கிறித்துவ மற்றும் சீக்கியர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களும் அசைவ உணவு பிரியர்கள் தான்.
உண்பது காய்கறியா அல்லது இறைச்சியா என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம், அது ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமை, சுதந்திரம்.
எந்தவொரு ஜனநாயக நாட்டிலும், ஒரு சமூகத்தின் எண்ணங்களை, விருப்பங்களை, பிற பிரிவினரின் விருப்பங்களில் திணிக்க முடியாது.
யார் என்ன சாப்பிடவேண்டும், என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை அரசு முடிவு செய்ய முடியாது. இந்த விவாதம் எருமை, ஆடு இறைச்சியுடன் நின்றுவிடவில்லை.

பட மூலாதாரம், Thinkstock
இனிவரும் நாட்களில் மீன் சந்தை, முட்டை விற்பனை என பிடி இறுகும். ஜனநாயகத்தில் பெரும்பான்மையின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படும்.
அரசு தனது பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் எந்தவொரு முடிவையும் எடுக்கமுடியும். ஆனால், எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும், குடிமகனின் தனிப்பட்ட உரிமைகளை யாரும் பறிக்கமுடியாது.
எந்தவொரு ஜனநாயக அரசும், ஒரு சமூகத்தின் மத நம்பிக்கைகளை, பிற சமூகத்தின் மீது கட்டாயப்படுத்தி திணிக்கமுடியாது. அதை பொறுத்துக் கொள்ளமுடியாது.
மக்கள் எதை சாப்பிடலாம், எதை உடுக்கலாம், எப்படி சிந்திக்கலாம் என்று ஜனநாயக அரசு முடிவு எடுக்கமுடியாது.
ஜனநாயகத்தில் தனிமனிதர்களின் சுதந்திரமே மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
இந்தச் செய்தியும் உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தலாம்:
மெட்ரோ ரயிலில் ஆண்குறி இருக்கை!
ஆண்குறியும், நெஞ்சும் புடைத்திருக்கும் பாணியில் அமைக்கப்பட்ட இந்த இருக்கை, பெண் பயணிகளால், அனுபவிக்கப்படும் பாலியல் தொந்தரவுகளை குறிப்புணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், YOUTUBE
கூடுதல் செய்தி:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












