முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியை கைது செய்ய உத்தரவிட்ட துருக்கி

துருக்கி ராணுவக் கிளர்ச்சி

பட மூலாதாரம், Burak Kara/Getty Images

படக்குறிப்பு, துருக்கியில் கடந்த ஆண்டு ராணுவ அதிகாரிகள் சிலர் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டவுடன் அவர்கள் விட்டுச் சென்ற ராணுவ வாகனம் மீறி ஏறிக் கொண்டாடும் மக்கள்.

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் முன்னாள் அலுவலர் கிரஹாம் ஃபுல்லரைக் கைது செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது துருக்கி.

கடந்த ஆண்டு துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட அரசு கவிழ்ப்பு முயற்சிக்கு ஃபெதுல்லா குலென் என்ற முஸ்லிம் மதகுரு காரணமாக இருந்தார் என்று துருக்கி குற்றம்சாட்டுகிறது.

இவரோடு அமெரிக்காவின் தேசிய உளவு நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கிரஹாம் ஃபுல்லர் தொடர்புகொண்டிருந்தார் என்று குற்றம் சாட்டிய துருக்கி அவரைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

துருக்கி குடியரசின் அரசாங்கத்தை கவிழ்க்க ஃபுல்லர் முயற்சி செய்ததாக கைது வாரண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபெதுல்லா குலென்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துருக்கியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னணியில் இருந்ததாக அந்நாட்டினால் சந்தேகிக்கப்படும் முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலென்

நாடு கடத்தப்பட்டு தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மதகுரு குலெனுடைய வலைப்பின்னலே கடந்த ஆண்டு ராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ஏற்பாடு செய்ததாக துருக்கி கூறுகிறது. அதை அவர் மறுத்து வருகிறார்.

அவரோடு தொடர்பில் இருந்ததாக கூறி 50,000 பேர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர, 2016 ஜூலை 15 முதல் அரசு மற்றும் தனியார் துறைப் பணிகளில் இருந்து 1.5 லட்சம் பேர் இடைநீக்கம் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :