நரேந்திர மோதி: "பணியாளர் வர்க்கத்தை உருவாக்கிய ஆங்கிலேய கல்வி முறையில் மாற்றங்கள் தேவை"

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (08/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

"ஆங்கிலேயர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியாளர் வர்க்கத்தை உருவாக்கும் வகையில் இந்தியாவில் கல்வி முறையை அறிமுகப்படுத்தினர்; அதில் இன்னும் நிறைய மாற்றம் தேவைப்படுகிறது" என்று பிரதமர் நரேந்திர மோதி பேசியதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் மாநாடு, வாரணாசியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதனை தொடங்கிவைத்து பிரதமர் மோதி பேசியதாவது:

"இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காக மட்டுமே கல்வி முறை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் தங்களுக்கான வேலைகளை செய்யும் பணியாளர்களை உருவாக்கும் வகையில் இந்தியாவில் ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்தினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நமது கல்வி முறையில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இன்னும் ஏராளமான மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.

நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் வகையில் நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.

இந்திய மொழிகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. உலகின் கல்வி மையமாக இந்தியா உருவாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்" என தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் முன்மொழிந்த திட்டத்தை ஐ.எம்.எஃப் ஏற்றது

சர்வதேச நாணய நிதியம்

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை முன்மொழிந்த திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நிதி அமைச்சகம் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்.

இப்போதும் பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் மட்டத்திற்கு வந்துள்ளது. விரைவில் இணக்கம் காணப்படும். கொள்கை திட்டம் குறித்த பேச்சுக்கள் அடுத்ததாக ஆரம்பிக்கப்படும். அதேபோல் விரைவில் உடன்படிக்கைக்கு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் சுயாதீனம், சட்டம் ஒழுங்கு உறுதிப்பாடு மற்றும் ஊழல் செயற்பாடுகளை நிறுத்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் கூறிய விடயங்களாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியம் இது குறித்து முரண்பாடுகளை ஏற்படுத்தவில்லை. ஆகவே, இதில் பிரச்னைகள் ஏற்படப்போவதில்லை.

கடன் மீள் கட்டமைப்பு குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது, ஆரம்பகட்ட பேச்சுகளாக இவை அமைந்துள்ளன. எனினும் பணியாளர் மட்ட பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்த பின்னர் அடுத்தகட்டமாக இவற்றில் கவனம் செலுத்தப்படும். ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவுவது ராஜபக்ஷ குடும்பத்திற்கு உதவுவது போன்று என சர்வதேச மத்தியில் தோற்றம் - கிரியெல்ல

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இலங்கைக்கு உதவுவது ராஜபக்ஷ குடும்பத்திற்கு உதவுவது போன்றது என்ற நிலைப்பாடு சர்வதேசத்தின் மத்தியில் எழுந்துள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல தெரிவித்ததாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், "நியூயார்க்கில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கையை இல்லாமல் செய்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தில் 50 சதவீதத்திற்கும் அதிக உரிமத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே கொண்டுள்ளன.

இந்நிலையில், உலக நாடுகளின் மத்தியில் இலங்கைக்கு உதவுவது ராஜபக்ஷ குடும்பத்திற்கு உதவுவதைப் போன்றது என்ற நிலைப்பாடும் தோற்றம் பெற்றுள்ளது.

அதுமாத்திரமின்றி, முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட பல உலக நாடுகளையும் இந்த அரசாங்கம் பகைத்துக் கொண்டுள்ளது. அதன் காரணமாகவே, சர்வதேச உதவிகள் கிடைப்பதில் இந்தளவுக்கு தாமதம் ஏற்படுகிறது.

எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாமல் சர்வதேசத்திடமிருந்து எந்த உதவிகளையும் எதிர்பார்க்க முடியாது. காரணம் கிடைக்கப் பெறும் நிதி உதவிகள் முறையாக மக்களை சென்றடையுமா என்ற சந்தேகம் சர்வதேசத்தின் மத்தியில் நிலவுகிறது" என தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: