யுக்ரேன் சண்டையில் ரஷ்ய மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டதாக தகவல்

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், மேட் மர்ஃபி
- பதவி, பிபிசி நியூஸ்
ரஷ்யாவின் உயர்மட்ட ராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ் என்பவர் யுக்ரேனின் டோன்பாஸ் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
டோன்பாஸ் பகுதியில் உள்ள யுக்ரேனிய குடியிருப்பு ஒன்றின் மீது தலைமையேற்று தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டதாக ரோசியா 1 என்ற அரசு ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
'டோனட்ஸ்க் மக்கள் குடியரசு' என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்ட பகுதியில் இருந்து குடுசோவ் படைநடத்திச் சென்றதாக அந்த செய்தியாளர் அலெக்சாண்டர் ஸ்லாட்கோவ் கூறியுள்ளார். ஆனால், இந்த செய்தி குறித்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் கூறவில்லை.
"போதிய கர்னல்கள் இல்லையோ என்று கூறும்படியாக, ஜெனரலே படையினரை வழிநடத்திச் சென்றார்" என்று ஸ்லாட்கோவ் டெலிகிராம் சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.
"ஆனால், மறுபுறம் ரோமன் குடுசோவ் மேஜர் ஜெனரல் நிலை அதிகாரி என்றபோதும், அவர் மற்றவர்களைப் போலவே ஒரு கமாண்டர் மட்டுமே" என்றும் கூறப்பட்டுள்ளது.
எந்த சூழ்நிலையில் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டார் என்ற விவரங்களைத் தராமல், அவர் கொல்லப்பட்டதை யுக்ரேன் ராணுவமும் உறுதி செய்துள்ளது.


ரஷ்யாவின் இரண்டாவது மூத்த ராணுவ அதிகாரியும், 29வது ராணுவப் பிரிவின் கமாண்டருமான லெப்டினென்ட் ஜெனரல் பெர்ட்னிக்கோவ் கடந்த வார இறுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் புரளி பரவிய நிலையில் ரோமன் குடுசோவ் மரணம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மரணம் பற்றிய செய்திகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
இறந்த ரஷ்யத் தளபதிகள் எத்தனை பேர்?
யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பை மேலும் முன்னோக்கி கொண்டு செல்லும் முனைப்போடு, மேலும் மேலும் ரஷ்யப் படைத் தளபதிகள் போர்க் களத்துக்கு பலவந்தமாக அனுப்பப்படுகிறார்கள். இதுவரை இந்தப் போரில் தங்கள் நான்கு மூத்த ராணுவத் தளபதிகள் இறந்ததாக ரஷ்யா உறுதி செய்துள்ளது.
ஆனால், இதுவரை 12 ரஷ்ய ஜெனரல்களைக் கொன்றுள்ளதாக யுக்ரேன் கூறுகிறது. குறைந்தபட்சம் 7 மூத்த ரஷ்ய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Reuters
ஆனால், பல ரஷ்ய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக வரும் செய்திகள் தொடர்பில் குழப்பங்கள் உள்ளன. தாங்கள் கொன்றதாக யுக்ரேன் படையினர் கூறிய மூன்று ராணுவத் தளபதிகள் உயிரோடு இருப்பதாக பின்னர் செய்திகள் வெளியாயின.
இறுதிச் சடங்கு நடக்கும் வரை தெரியாத தளபதி மரணம்
ராணுவத் தளபதிகள் மரணத்தை ரஷ்யா அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வது அரிதாகவே நடக்கும். மேஜர் ஜெனரல் விளாதிமிர் ஃப்ரோலோவ் கொல்லப்பட்டது குறித்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஏப்ரல் மாதம் அவரது இறுதிச் சடங்கு நடக்கும் வரையில் அரசு ஊடகத்தில் செய்தி வரவே இல்லை.
அமைதிக் காலத்தில்கூட ராணுவ மரணங்களை ராஜ ரகசியமாக வகைப்படுத்துகிறது ரஷ்யா. யுக்ரேனில் நடந்துவரும் சண்டையில் கொல்லப்பட்ட படையினர் குறித்த தகவல்களை ரஷ்யா மார்ச் 25 முதல் மேம்படுத்தவே இல்லை.
கடைசியாக மேம்படுத்திய செய்தியில், பிப்ரவரி 24ம் தேதி யுக்ரேன் மீது அதிபர் விளாதிமிர் புதின் போர் அறிவித்ததில் இருந்து 1,351 ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
யுக்ரேன் ராணுவ உளவு அதிகாரிகள் குழு ஒன்று ரஷ்ய அதிகாரிகளை குறிவைத்துக் கொல்லும் பணியை மேற்கொண்டிருப்பதாக யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியின் நெருங்கிய வட்டத்தில் உள்ள அதிகாரிகள் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையிடம் தெரிவித்தனர்.
"உயர்மட்டத் தளபதிகள், பைலட்டுகள், பீரங்கிப்படை கட்டளைத் தளபதிகள் ஆகியோரை அவர்கள் குறிவைக்கிறார்கள்," என்று அதிகாரிகள் கூறினர். குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள் மூலமாகவோ, பீரங்கிகள் மூலமாகவோ இப்படி இலக்குவைக்கும் அதிகாரிகளைத் தாக்குவதாகவும் அவர்கள் கூறினர்.
கடந்த மாதம் இது தொடர்பில் யுக்ரேனுக்கு அமெரிக்கா உளவுத் தகவல்களை வழங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டது. இதன் மூலமாக யுக்ரேன் பல ரஷ்ய ராணுவ அதிகாரிகளை இலக்கு வைக்க முடிந்தது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













