Zoom செயலி: காணொளி கூட்டங்களில் அதிக நேரத்தை செலவிடும் பயனர்கள்

ஸூம்

பட மூலாதாரம், ZOOM

படக்குறிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் சரியாக தூங்கக் கூட முடியாதவராக இருந்தார் அப்ரணா
    • எழுதியவர், வில் ஸ்மேல்
    • பதவி, பிபிசி வணிக செய்தியாளர்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வேலை அதிகமாக இருந்ததால், ஸூம் நிர்வாகிகள், உறங்கச் செல்வதற்குக் கூட, சுழற்சி முறையில் செல்ல வேண்டியிருந்தது என்று அபர்ணா பாவா கூறுகிறார்.

"எங்களுடைய மேலதிகாரி மற்றும் நான், ஏப்ரல் மாதத்தில் சுழற்சி முறையில் உறங்கி ஓய்வெடுக்கச் சென்றோம். அது பைத்தியகாரத்தனமாக இருந்தது" என்று அமெரிக்க காணொளிக்காட்சி நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக (சி.ஓ.ஓ) இருக்கும் அபர்ணா பாவா கூறுகிறார்.

இன்று ஸூம் நிறுவனம் ஒரு பழக்கப்பட்ட பெயராக மாறியுள்ளது.

"இது பைத்தியம் பிடித்தது போலிருந்தது, உறங்கச் செல்ல ஒரு நேரமும் இடமும் இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் கடமைப்பட்டிருப்பதை உணர்கிறேன். இந்த சேவையை வழங்கக்கூடிய அளவுக்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்" என்கிறார் அவர்.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஸூம் என்கிற பெயரை பலரும் கேட்டிருக்கமாட்டார்கள். ஆனால், 2012ஆம் ஆண்டில் சிலிக்கான் வேலியில் ஸூம் நிறுவனம் தொடங்கப்பட்டிருந்தது. மிகவும் வெற்றிகரமாக வியாபாரத்தை வளர்த்திருந்தாலும், ஸூம் பற்றி பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று கூறுவது மிகையல்ல.

நம்மில் பெரும்பாலானோர் அலுவல் ரீதியிலான வேலைக்கோ அல்லது நம் தனிப்பட்ட வாழ்க்கையிலோ, வீடியோ அழைப்புகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பிரச்னை எழுந்தது.

டிசம்பர் 2019-ன் இறுதியில், 'நாங்கள் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறோம்' என நினைத்தேன், சராசரியாக தினமும் 10 மில்லியன் பேர் பங்கேற்பாளர்களாக ஸூமை பயன்படுத்தி வந்தார்கள். 2020 ஏப்ரல் மாதத்தில், தினசரி 300 மில்லியன் பேர், பங்கேற்பாளர்களாக ஸூம் செயலியைப் பயன்படுத்தினார்கள். அன்றிலிருந்து இன்று வரை அதே அளவில் பயனர்கள், ஸூமை பயன்படுத்தி வருகிறார்கள்" என்கிறார் அபர்ணா.

ஸூம்

பட மூலாதாரம், ZOOM

பிபிசி திரட்டிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மற்ற காணொளி அழைப்புகள் மற்றும் கான்பரன்சிங் போட்டியாளர்களைக் காட்டிலும், ஸூம் நிறுவனத்தில் பயனர்கள் அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனம், டீம்ஸ் என்கிற சேவையை வழங்கி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் டீம்ஸ் சேவையை, தினசரி 115 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறது.

கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்கிற சேவையை வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், தினசரி சராசரியாக 235 மில்லியன் பேர் தனது மீட்டிங் சேவையை பயன்படுத்தியதாக கூகுள் கூறுகிறது. அந்த வகையில், காணொளி காட்சி சேவையை வழங்கும் நிறுவனங்களில், கூகுள் மீட் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஃபேஸ்புக் அதன் மெசஞ்சர் ரூம்ஸ் காணொளி காட்சி சேவை பயனர்கள் விவர எண்களை வெளிப்படுத்தவில்லை. ஆனால் பொதுவாக, மெசஞ்சரில் தினசரி வீடியோ அழைப்புகள், இப்போதும் மொத்தம் 150 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளன என்று ஃபேஸ்புக் கூறியிருக்கிறது.

ஸூம் முதலிடத்தைப் பிடித்தது எப்படி?

"சரியான நேரத்தில் சரியான நிறுவனமாக இருந்தது, எளிமையாக பயன்படுத்த முடிவது, 'ப்ரீமியம்' வணிக மாதிரி மற்றும் தரமற்ற இணைய இணைப்புகளை கையாளும் வலுவான தொழில்நுட்பம் ஆகியவைதான் வெற்றிக்கான முக்கிய காரணங்கள் என நினைக்கிறேன்," என்கிறார் தொழில்நுட்ப வலை தளமான ஐடிஜி கனெக்டில் பங்களிப்பு ஆசிரியராக இருக்கும் மார்ட்டின் வீட்ச்.

"இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் எழுந்த போது, அதைத் தீர்க்க ஸூம் நிறுவனம் சிறப்பாகவும் விரைவாகவும் செயல்பட்டது. இந்த பாதுகாப்பு பிரச்சனையால் பல நிறுவனங்கள் ஸூமின் பயன்பாட்டை தடை செய்வதை நாம் கண்டோம். ஆனால் ஸூம் விரைவாக பதிலளித்தது, மேலும் இந்த சிக்கல்களைத் தீர்க்க, அதன் முதலீட்டையும் அர்ப்பணிப்பையும் இரட்டிப்பாக்கியது" என்கிறார் சி.சி.எஸ் இன்சைட் என்கிற ஆராய்ச்சி குழுவின் தொழில்நுட்ப ஆய்வாளர் ஏங்கலா அஷெண்டன்,

2020 வசந்த காலத்தில், ஸூம் நிறுவனத்தில் கணிசமாக பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதும், எந்த தடையுமின்றி இயங்கியது. அதற்கு ஸூம் நிறுவனத்தின் அமைப்பு கட்டுமானத்துக்கு தான் நன்றி கூற வேண்டும். ஸூம் நிறுவனம் க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குகிறது. இதன் முக்கிய செயல்பாடுகள், உலகின் பல மூலைகளில் இருக்கும் சர்வர் மையங்களில் நடக்கின்றன.

"கொரோனாவுக்கு முன், தன் நீண்ட கால இலக்குகளை கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்தது. எனவே ஏற்கனவே 19 சர்வர் மையங்களை வைத்திருந்தது ஸூம். அப்போதைக்கு ஸூம் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்த பயனர்கள் எண்ணிக்கைக்கு இது அதிகம் தான். அதோடு, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, உலகின் பல பகுதிகளில் இருக்கும் ஆயிரக் கணக்கான சர்வர்களை, வெறும் ஐந்து மணி நேரத்துக்கு முன் தெரிவித்துவிட்டு பயன்படுத்தத் தொடங்கும் விதத்தில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தது" என கூறுகிறார் அபர்ணா.

எனவே திடீரென ஸூம் நிறுவனத்தின் சேவையை நிறைய பேர் பயன்படுத்தத் தொடங்கும் போதும், ஸூம் நிறுவனத்தால் உடனடியாக தன் சேவையை விரிவுபடுத்த முடிந்தது.

பல்வேறு புதிய பயனர்கள், தங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கவும், நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும் ஸூம் சேவையைப் பயன்படுத்தினார்கள்.

அலுவலக வேலைகளில் வெறுமனே காணொளி கூட்டங்களுக்கு மட்டும் இது பயன்படுத்தப்படவில்லை. வேலைக்கு ஆட்களை எடுப்பது, வேலையில் இருந்து ஆட்களை நீக்குவது, பார்ட்டி சந்திப்புகள் என எல்லாவற்றுக்கும் ஸூம் பயன்படுத்தப்பட்டது.

நம்மில் பலரும் தொடர்ந்து வீட்டில் இருந்தே வேலை செய்யவிருக்கிறோம். குறைந்தபட்சம் அடுத்த கொஞ்ச காலத்துக்காவது வீட்டில் இருந்து வேலை செய்வோம். எனவே காணொளி காட்சி முறையில் சந்திப்புகள் நடப்பது எதிர்காலத்தில் எப்போதும் இருக்கும் என்கிறார் அபர்ணா.

மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்

பட மூலாதாரம், MICROSOFT TEAMS

வேலைகளின் எதிர்காலம் நிரந்தரமாக மாறிவிட்டது. எங்களின் பல வாடிக்கையாளர்கள் ஹைப்ரிட் மாடலில் அலுவலகத்தை நடத்துவோம் என்கிறார்கள். இன்னும் சில நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை வாரத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வீட்டில் இருந்து வேலை பார்க்கச் சொல்வோம், சுமாராக 2 - 3 நாட்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யச் சொல்வோம் எனக் கூறினார்கள் என்கிறார் அபர்ணா பாவா.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பது பலருக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கலாம். நம்மில் சிலருக்கு இன்னும் காணொளிக் காட்சி மூலம் கூட்டங்களில் பங்கெடுப்பது பயத்தை ஏற்படுத்தவதாக இருக்கலாம்.

அப்படி பலரையும் காணொளி காட்சி முறையைச் சிறப்பாகப் பயன்படுத்த, பலருக்கு உதவி இருப்பதாக வணிக உளவியலாளரான ஸ்டுவர்ட் டஃப் கூறுகிறார்.

அதிகம் காணொளி காட்சி பயன்படுத்துவதை Zoom Fatigue என்கிறார்கள். நாம் ஒருவருடன் தொடர்புகொள்ள, எழுத்து, காணொளி, செல்போன் அழைப்பு , நேரடியாக முகம் பார்த்துப் பேசுவது என நான்கு முறைகளில் தான் தொடர்புகொள்ள முடியும்.

இதில் முகம் பார்த்துப் பேசுவது தான் மிகச் சிறந்தது. இந்த வரிசையில் காணொளிக்காட்சி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை காணொளிக் காட்சியைப் பயன்படுத்தும் போது, வீடியோ ஒரு நல்ல வழிமுறையாக இருக்காது என்கிறார் டஃப்.

கெட்டி

பட மூலாதாரம், Getty Images

நிறுவனங்கள், அலுவலக காணொளிக் கூட்டத்தை குறைவாகவும், ஊழியர்கள் மனம் விட்டு பேசும் யதார்த்தமான காணொளிக் கூட்டங்களைக் அதிகமாகவும் நடத்த வேண்டும் என்கிறார் டஃப். அலுவல் ரீதியிலான காணொளி கூட்டத்துக்கு வரும் போது தன்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களை தெளிவாக பேச வைக்கிறேன் என்கிறார் டஃப்.

காணொளி அழைப்புகள் மற்றும் காணொளிக்காட்சி சந்திப்புகளை அதிகம் பயன்படுத்துவது சிலருக்கு பிரச்னையாக இருக்கலாம். என்பதை ஆமோதிக்கிறார் அபர்ணா. ஸூம் ஃபேடிக் (Zoom Fatigue) என்பது உண்மை தான், ஆனால் அது ஸூம் நிறுவனத்தின் தவறல்ல என்கிறார்.

நீங்கள் உங்கள் வாழ்கையில் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வப் போது மின் திரைகளைப் பார்ப்பதில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பிரச்னை, எல்லா நிறுவன ஊழியர்களைப் போல, ஸூம் ஊழியர்களையும் பாதித்தது. எங்களுக்கும் அதே பிரச்னைகள் இருக்கின்றன என்கிறார் ஸூம் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.

ஸூம்

பட மூலாதாரம், ZOOM

படக்குறிப்பு, அபர்ணா

எங்கள் ஊழியர்களின் மன நலத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். என்றார்.

ஸூமில் அடிப்படை சேவைகள் இலவசம். ஒரு கட்டத்துக்குப் பிறகு நிறுவனங்கள் பணம் செலுத்தினால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம். இதோடு இன்னும் சில வசதிகளும் இருக்கின்றன.

"இந்த ஆண்டில், ஸூம் நிறுவனம் வணிக ரீதியாக இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் போதும், கொரோனாவால் கொண்டாடும் மனநிலையில் நிறுவனம் இல்லை. இது ஒரு வருத்தமான காலகட்டம். உலகமே ஒரு பெரிய சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு கொண்டாடப் பிடிக்காது," என்கிறார் அபர்ணா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :