சனிப்பெயர்ச்சி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், அரசியல் பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரியில் அனுமதி - நாராயணசாமி

பட மூலாதாரம், Getty Images
(பிபிசி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
சனிப்பெயர்ச்சி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
"பண்டிகை காலம் என்பதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் மற்றும் சனிப்பெயர்ச்சி வருகிறது. இந்த சமயத்தில் புதுச்சேரி மாநில ஆட்சியர் அவர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பை காட்டி ஒரு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். அதில், புதுச்சேரியில் விழாக்கள் நடத்தக்கூடாது, ஹோட்டல்களில் கேளிக்கைகள் நடத்தக்கூடாது என்று குறிப்பிட்டு அதற்கு அனுமதி கிடைக்காது என்று கூறியிருக்கிறார். அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பானது பொதுவான தீர்ப்பு. அது மருத்துவமனைகளில், தீ விபத்து ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் சமயங்களில் சில விதிமுறைகள் கூறி இருக்கின்றார்கள். அதற்கும், கொரோனா தொற்றிற்கும் பெரிய அளவில் உடன்பாடு கிடையாது."
"கிறிஸ்துமஸ் விழாக்கள் வழக்கம் போல் நடத்தப்படும். இரவு நேரங்களில் கிறிஸ்தவ சமயத்தினர் பிரார்த்தனை செய்ய எந்தவித தடையும் கிடையாது. பொங்கல் விழாக்களில் மக்கள் முறையாக கொண்டாடலாம். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை விதிமுறைகளை கடைபிடித்து ஹோட்டல்களில் 200 பேர்கள் இருக்கலாம். புதுச்சேரி கடற்கரையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசங்களை அணிந்து கொண்டு புத்தாண்டு பண்டிகை கொண்டாடலாம். அதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. தடை விதிப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. கடைப்பிடிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விதிமுறைகள், சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது. இந்த இரண்டு விதிமுறைகள் காவல் துறையினர் முறையாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது," என்றார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
மேலும், "அரசு மற்றும் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்துவதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. இதில் எத்தனை நபர்கள் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனைகள் கிடையாது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது எத்தனை ஆயிரம் பேர்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் ஓர் அறையில் கூட்டம் நடத்தும்போது மட்டும் குறைந்த அளவில் கூட்டம் இருக்க வேண்டும். எனவே அனைத்து பண்டிகைகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித தடையும் கிடையாது, தடை விதிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை துறையில் மூலமாக இந்த உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறோம்," என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா மும்பை கிளப்பில் கைது - என்ன நடந்தது?

பட மூலாதாரம், SURESH RAINA FB
இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை நைட் கிளப்பில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா விதிகளை மீறி கிளப்பில் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மும்பை விமான நிலையம் அருகே உள்ள கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா, குரு ரந்தாவா, பாலிவுட் நடிகர் சூசன் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த விடுதியில் கொரோனா விதிகளை மீறியதாகக் கூறி ஏழு கிளப் ஊழியர்கள் உள்பட 34 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சாஹர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும் பின்னர் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பணியில் இருந்த அரசு ஊழியருடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, ஆபத்தை விளைவிக்கும் தொற்றுப்பரவல் வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்தி பொது இடத்தில் கூடியது உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்டம், பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் டிசம்பர் 22ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதிவரை எவ்வித பொது நிகழ்ச்சிகளையும் நடத்த அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா திரிபு அறிகுறி காரணமாக உலகின் பல நாடுகள் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ள நிலையில், வர்த்தக தலைநகரான மும்பையில் கடுமையான கட்டுப்பாடுகளை அங்குள்ள அம்மாநில அரசும் மாநகராட்சியும் விதித்துள்ளன.

கொரோனா புதிய திரிபு: டெல்லி வழியாக சென்னை வந்த பயணிக்கு கொரோனா தொற்று?

பட மூலாதாரம், J RADHAKRISHNAN FB
லண்டனில் இருந்து சென்னைக்கு டெல்லி வழியாக வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேபோல, லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 15 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் புதிய திரிபு வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்நாட்டுடன் ஆன விமானம், கப்பல் போக்குவரத்து தொடர்புகளை இந்தியா, துபை மற்றும் ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை காலையில் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "லண்டன் பயணி ஒருவரின் சளி மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகே அந்த நபருக்கு இருப்பது கொரோனா புதிய வகை கொரோனா திரிபுவா என்பது தெரியவரும்" என்று தெரிவித்தார்.
"கொரோனா பரிசோதனை முடித்துக் கொண்டவர்கள் வீடுகளுக்குச் செல்ல தடையில்லை. ஏற்கெனவே பலரும் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு பிறகே விமான பயணத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்," என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
"தமிழகத்தில் கொரோனா வைரஸ் இருப்பவர்களை கண்டறிய அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 5 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிந்து கொள்ளளாம். தொற்று இல்லை என தெரிய வந்தால் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுப்பி வைக்கப்படுவார்கள். தொற்று இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்," என்று ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
லண்டனில் இருந்து சென்னைக்கு தற்போது நேரடியாக விமானங்கள் இல்லை என்றாலும் வேறு நகரங்கள் வழியாக சென்னை வந்த பயணிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கையாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் யாரும் அச்சப்பட வேண்டாம். வாட்ஸ் அப் ஃபார்வர்டு தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. ஆக்கப்பூர்வ முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்," என்று ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த 3 பெண்கள் உள்பட 8 பேரும், உள்நாட்டு முனையத்திற்கு வந்த 2 குழந்தைகள், பெண் உள்பட 7 பேரும் விமான நிலையத்தில் தனியாக தங்கவைக்கப்பட்டனர். பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்
- தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு: என்ன காரணம்?
- டெல்லி எல்லையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி - என்ன நடந்தது?
- கொரோனா வைரஸ் புதிய திரிபு: கையை மீறிப்போகிறதா நிலைமை?
- சனி - வியாழன் நேர்க்கோட்டில் வரும் அதிசயம்: இன்று எப்போது தெரியும்? வெறும் கண்களால் காண இயலுமா?
- பாஜகவுக்கு தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் வந்த சிக்கலா?
- நேபாளத்தில் அரசியல் சிக்கல்: நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












