தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு: என்ன காரணம்?

ஸ்டாலின்

பட மூலாதாரம், DAILYTHANTHI

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காலையில் சந்திக்கவிருப்பதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூறாவளி பிரசாரத்தை தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் 10 நாட்கள் தி.மு.க.வை சேர்ந்த 1,600 நிர்வாகிகள், 16 ஆயிரம் கிராமங்களில், கிராம சபை கூட்டத்தை நடத்த உள்ளனர். அதில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு, தமிழக அரசின் தோல்விகள் குறித்தும் விளக்கமாக தெரிவிக்க இருக்கின்றனர். மேலும், அ.தி. மு.க.வுக்கு எதிரான மக்களின் தீர்மானத்தில் கையெழுத்து வாங்க இருக்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க இருக்கிறார். அப்போது, அ.தி.மு.க. அரசின் தவறுகளையும், ஊழல் பட்டியலையும், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் கவர்னரிடம் அவர் வழங்க இருக்கிறார் என்று தினத்தந்தி செய்தி கூறுகிறது.

Banner

ஜன.9ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு: பாஜவின் பகிரங்க மிரட்டல் குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

அதிமுக திமுக

பட மூலாதாரம், DINAKARAN

அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் அறிவிப்பை அக்கட்சி மேலிடம் வெளியிட்டுள்ளதன் பின்னணி தொடர்பான தகவல்களை தினகரன் நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றவர்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் தொடர்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கடும் காரசார விவாதத்துக்கு பிறகு அதிமுக அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 9ம் தேதி(சனிக்கிழமை) காலை 8.50 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும். கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழோடும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும், தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது என்று தினகரன் நாளிதழ் செய்தி கூறுகிறது.

Banner

பொது வெளியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லைதமிழக அரசு அறிவிப்பு

கடற்கரை

பட மூலாதாரம், DINAMANI

கடற்கரைகள், சாலைகள் போன்ற பொது வெளிகளில் வரும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:கரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காத்து அவா்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆங்கிலப் புத்தாண்டு: வரும் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி கொண்டாட்டங்கள் நடைபெறுவது வாடிக்கை. இவற்றில் பொது மக்கள் அதிகளவில் பங்கேற்பார்கள்.

அதுபோன்று வரும் புத்தாண்டை ஒட்டி, கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொது மக்கள் அதிகமான அளவில் கூட நேரலாம்.இதன் காரணமாக, இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வெளிநாடுகளில் கரோனா நோய்த் தொற்றானது இப்போது மீண்டும் பரவி வரும் சூழலில் தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் உள்ள உணவகங்கள் வழக்கம் போன்று செயல்படும்.ஆனால், இந்த இடங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி இரவு நடத்தப்படும் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது. அனைத்து கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என்பதால் டிசம்பா் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாள்களில் பொது மக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி கூறுகிறது.

Banner

பிரிட்டனில் பரவும் புதியவகை கரோனா வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை; அரசு எச்சரிக்கையுடன் இருக்கிறது: ஹர்ஷ்வர்த்தன் தகவல்

ஹர்ஷ் வர்தன்

பட மூலாதாரம், ANI

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸின் பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, மத்திய அரசு விழிப்புடன் எச்சரிக்கையுடன் இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு நேற்று இரவு முதல் விதித்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பிரிட்டனில் பரவி வரும் கரோனா வைரஸின் புதிய வகையால் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப் பட வேண்டுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஹர்ஷவர்த்தன் பதில் அளிக்கையில் "மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாக கரோனா வைரஸ் சூழலை கையாள்வது குறித்து அரசு நன்கு அறிந்துள்ளது. அரசு மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருப்பதால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை.

இந்த கற்பனை சூழல், கற்பனைப் பேச்சு, கற்பனையான அச்சம் ஆகியவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள். ஒவ்வொன்றையும் பற்றி அரசு முழுமையாக அறிந்துள்ளது. என்னிடம் நீங்கள் கேட்டால், இதில் அச்சம் கொள்வதற்கு எந்தவிதமான காரணம் இல்லை" எனத் தெரிவித்துள்ளதாகக் கூறுகிறது இந்து தமிழ் திசை செய்தி.

Banner

பயோஎன்டெக் - ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், TNIE

பயோஎன்டெக், ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் தெரிவித்துள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு 27 நாடுகளில் அந்த நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளின் முதல் டோஸ் போடப்படும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளுக்கு பிரிட்டனும், அமெரிக்காவும் ஒப்புதல் வழங்கிய நடவடிக்கை, வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் வேகம் காட்டும் அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றிய அரசுகளுக்கு கொடுத்து வருகிறது.

அங்கு கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ், வேகமாக பரவிவருவதும் ஒன்றிய நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது. ஆனால், தற்போதைய வைரஸ் எதிர்ப்பு மருந்து மிகவும் வலிமையானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியர்களுக்கு பாதுகாப்பான வகையில் வலிமையான தடுப்பூசி மருந்துகள் கிடைக்க பரிந்துரை செய்த தெரிவித்திருப்பதை தீர்க்கமான நடவடிக்கை என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வூர்சூலா ஃபொண்டெர்லயன் தெரிவித்துள்ளதாக அந்த நாளிதழ் செய்தி மேலும் கூறுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :