விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

(பிபிசி தமிழ் இணைய பக்கத்தில் நேயர்கள் அதிகம் படித்த செய்திகளின் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்.)

இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியிலும் அதன் அண்டை மாநில எல்லைகளிலும் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் செவ்வாய்க்கிழமை 27ஆம் நாளை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், திங்கட்கிழமை மாலையில் 65 வயது விவசாயி நிரஞ்சன் சிங் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் தர்ன்தர்ன் என்ற பகுதியைச் சேர்ந்த அவர் ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விஷம் அருந்தும் முன்பாக அவர் தனது தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அதை சரிபார்க்கும் பணியும் சம்பவம் தொடர்பாக அந்த விவசாயியின் வாக்குமூலத்தை பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் கூறினார்கள்.

டெல்லியில் வாரக்கணக்கில் தொடரும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட சீக்கிய மத போதகர் சந்த் ராம் சிங், கடந்த வாரம் சிங்கு எல்லை பகுதியில் தற்கொலை செய்து கொண்டார். விவசாயிகள் போராட்டம் தீர்வின்றி தொடருவதால் அவர் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல, கடந்த சனிக்கிழமை 22 வயது இளைஞர் ஒருவர், டெல்லி போராட்ட பகுதியில் இருந்து சொந்த மாநிலமான பஞ்சாபுக்கு திரும்பிய பிறகு தற்கொலை செய்து கொண்டார். விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சுமார் 10 சங்கங்கள் அரசின் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்திருந்தாலும், விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து அரசின் சட்டங்கள் தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் சட்டத்தை திரும்பப்பெறப் போவதில்லை என்று உறுதிகாட்டி வரும் மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களின் பிரதிதிநிதிகளை திங்கட்கிழமை தொடர்பு கொண்ட இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனிப்பட்ட முறையிலும் அதிகாரிகள் மூலமும் பேசியிருக்கிறார்.

Banner

அரசியல் பேனர், கொடி கம்பங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் - விவாதமாகும் கோவை இளைஞரின் மரணம்

பேனர்

கோவை மாவட்டத்தில் கட்சிக்கொடி நடும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம், அரசியல் கட்சிகளின் பேனர் கலாசாரம் மற்றும் சாலைகளில் கொடி கம்பம் நடுவது தொடர்பான விவாதத்தை தீவிரமாக்கியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை மேட்டுப்பாளையம் அருகே ராமம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் வரவிருந்தனர். அவர்களை வரவேற்பதற்காக பேனர் வைக்கும் பணிகளுக்கும், சாலை ஓரங்களில் கட்சிக்கொடி நடும் பணிக்கும் கூலித்தொழிலாளிகள் சிலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரான 19 வயது இளைஞர் ராகுல், 10 அடி உயரமுள்ள இரும்புக் கம்பியை கொடியாக நட்டு வைக்க முயன்ற போது மேலே இருந்த மின்சார வயரில் அந்த கம்பி உரசியதால், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்க இருந்த அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கட்சிக்கொடி கம்பம் நடமுயன்றபோது ஏற்பட்ட சம்பவம் என குறிப்பிடாமல், பந்தல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி ராகுல் உயிரிழந்ததாக வழக்கை பதிவு செய்துள்ளனர்.

Banner

ரஜினி அரசியல்: அறிவிப்பால் ஸ்டாலினுக்கு பயமா? குஷ்புவுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி

உதயநிதி

பட மூலாதாரம், UDHAYANITHI STALIN TWITTER

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அறிவிப்பால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி எதிர்வினையாற்றியிருக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரையில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வரும் உதயநிதி, கடலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய முதல் பயணத்தில் நான் பேசினாலே கைது செய்தனர். குறிப்பாக முதல் கட்ட பிரசாரத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து, அரங்கில் கூட்டம் நடத்துமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் தற்போது தமிழக முதலமைச்சர் பிரசாரம் தொடங்க வேண்டும் என்பதற்காகவே, கொரோனா தளர்வுகளை அரசு அறிவித்திருக்கிறது"," என்று கூறினார்.

ரஜினியின் அரசியல் வருகையை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கூறியது குறித்து உதயநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? ரஜினிகாந்த் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர். திமுக தலைவருடன் நட்பு பாராட்டக் கூடியவர். நாங்கள் அவரைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, மதுரை ஊமச்சிகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே. பாஜக படிப்படியாக மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது" என்று கூறினார்.

Banner

கொரோனா வைரஸ்: பிரிட்டனில் இருந்து விமானங்கள் வருகை, புறப்பாடுக்கு இந்தியா திடீர் தடை

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் பிரிட்டனில் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

அயர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை நிறுத்தியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இந்த கால கட்டத்தில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தடை கட்டுப்பாடுக்கு முன்பே பிரிட்டனில் இருந்து பயணிகள் இந்தியாவுக்கு ஒருவேளை வருகை தந்திருந்தால், அவர்கள் ஆர்டிபிசிஆர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் இந்திய அரசு கூறியுள்ளது.

Banner

பெண்களை தரம் தாழ்த்தும் சொற்கள் பயன்பாடுக்கு எதிராகத் தொடங்கிய வித்தியாச முயற்சி

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு வாக்குவாதம் சண்டையாக மாறத் தொடங்கும் போதெல்லாம், தரம் தாழ்ந்த சொற்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விவாதம் அல்லது சண்டை நடக்கும்போது கூட, பெண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களே பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விஷயம்.

இதுபோன்ற கெட்ட வார்த்தைகளை மக்களின் அகராதியிலிருந்து அகற்றுவதற்காக, இரண்டு பெண்கள் 'த காலி ப்ராஜக்ட்' என்ற திட்டத்தைத் தொடங்கினர். இதன் மூலம் தரம் தாழ்ந்த சொற்களை விடுத்து வேறு வழியில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தச் செய்வதே இதன் நோக்கம்.

இந்த திட்டத்துடன் தொடர்புடைய மும்பையைச் சேர்ந்த நேஹா தாக்கூர் கூறுகையில், ஓவர் தி டாப் (OTT) ஊடகத்தில் கூட ஆன்லைனில் வரும் பெரும்பாலான தொடர்களில், மொழி ஆளுமை மோசமடைந்து வருவதை நாங்கள் காண்கிறோம். இளைஞர்களிடமோ மக்களிடமோ இது போன்ற சொற்களைப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் கருத்து கேட்டபோது, "அதில் என்ன தவறு? ஒரு வேடிக்கைக்குத் தானே என்பதாகவே அவர்களின் பதில் இருந்தது." என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

Banner

சனி - வியாழன் சேர்க்கை: பல நூறுஆண்டுகளுக்குப் பிந்தைய அதிசயத்தை காணும் உலகம்

சூரிய குடும்பத்தின் சனி - வியாழன் ஆகிய கோள்கள் பூமியில் மனிதர்களின் பார்வை கோணத்தில் மிகவும் அருகே தோன்றி நேர்க்கோட்டில் இருப்பது போன்ற அரிய வானியல் நிகழ்வு, திங்கட்கிழமை (டிசம்பர் 21) மாலை 6 மணி முதல் 7 மணிவரை நிகழ்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி, இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த அரிய நிகழ்வை பார்க்க முடிந்ததாக வானியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் சூரிய அஸ்தமனத்தின் தென்மேற்கு திசையில் இந்த அரிய நிகழ்வு தென்பட்டதாக கூறிய வானியல் நிபுணர்கள், அந்தந்த பகுதியில் உள்ள வானிலையைப் பொறுத்து இந்த வானியல் அதிசயத்தை பைனாகுலர் உதவியுடனோ கோளரங்க தொலைநோக்கி மூலமோ பார்க்க முடிந்ததாக தெரிவித்தனர்.

சென்னையில் பிர்லா கோளரங்கம், டெல்லியில் நேரு கோளரங்கம், ஜந்தர் மந்தரில் உள்ள வானியல் கோளரங்கம், பெங்களூருவில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் ஆகியவற்றில் இந்த அரிய நிகழ்வை சமூக இடைவெளியுடன் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Banner

பாஜக நோக்கித் தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகள் குடைச்சலானதா?

பிரசாந்த் கிஷோர்

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகியவற்றில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்துள்ளனர் என்கின்றன ஊடகச் செய்திகள்.

மேற்கு வங்கத்தின் மித்னாபூரில் நடந்த ஒரு கூட்டத்தில் இவர்கள் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி., மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

சமீப கால அரசியல் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய கட்சித் தாவல்களில் ஒன்று இது.

இந்தக் கட்சித் தாவல்களில் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி. கட்சித் தாவிய எம்.எல்.ஏ.க்களில் அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர் சுபேந்து அதிகாரியும் ஒருவர். இவர் ஒரு காலத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவர்.

மேற்கு வங்கத்தை 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஏற்கெனவே மிகவும் பலவீனமாகிவிட்ட நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு இப்போது அந்த மாநிலத்தின் அரசியல் வண்ணத்தில் பெரிய மாறுதலைக் கொண்டுவருமோ என்று அரசியல் விமர்சகர்கள் வலுத்த சந்தேகம் கொள்கிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :