அரசியல் பேனர், கொடி கம்பங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் - விவாதமாகும் கோவை இளைஞரின் மரணம்

- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை மாவட்டத்தில் கட்சிக்கொடி நடும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம், அரசியல் கட்சிகளின் பேனர் கலாசாரம் மற்றும் சாலைகளில் கொடி கம்பம் நடுவது தொடர்பான விவாதத்தை தீவிரமாக்கியிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை மேட்டுப்பாளையம் அருகே ராமம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் வரவிருந்தனர். அவர்களை வரவேற்பதற்காக பேனர் வைக்கும் பணிகளுக்கும், சாலை ஓரங்களில் கட்சிக்கொடி நடும் பணிக்கும் கூலித்தொழிலாளிகள் சிலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரான 19 வயது இளைஞர் ராகுல், 10 அடி உயரமுள்ள இரும்புக் கம்பியை கொடியாக நட்டு வைக்க முயன்ற போது மேலே இருந்த மின்சார வயரில் அந்த கம்பி உரசியதால், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்க இருந்த அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கட்சிக்கொடி கம்பம் நடமுயன்றபோது ஏற்பட்ட சம்பவம் என குறிப்பிடாமல், பந்தல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி ராகுல் உயிரிழந்ததாக வழக்கை பதிவு செய்துள்ளனர்.
இது குறித்த விளக்கத்தை பெற சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது உரிய விளக்கம் கிடைக்கவில்லை.
நடந்த சம்பவம் தொடர்பாக ராகுலின் நண்பரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர், கட்சிக்கொடி நடும்போதே உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறினார்.
"ராகுலும் நானும் நண்பர்கள் தான். கொரோனா காரணமாக எனக்கு கல்லூரி வகுப்புகள் இல்லாததால் ராகுலோடு சேர்ந்து பந்தல், பேனர் மற்றும் கொடி கட்டும் வேலைக்கு சென்று வந்தேன். விபத்து நடந்தபோது அவன் இரும்பு கம்பியில் கொடியை கட்டி நட்டு வைக்க முயன்றான். அப்போது மேலே தாழ்வாக தொங்கிய மின்சார வயரில் கையில் வைத்திருந்த இரும்பு கம்பி உரசியதில் அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவன் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என நடந்தவற்றை அவரது நண்பர் விவரித்தார்.
உயிரிழந்த இளைஞர் தாசாம்பாளையம் பகுதியில் தனது தாயோடு வசித்து வந்துள்ளார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே வாழ்வாதாரத்திற்காக பந்தல் அமைப்பது, பேனர் வைப்பது மற்றும் கட்சிக்கொடி நடுவது போன்ற கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அதிமுகவின் மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் தெரிவிக்கையில், கட்சிக்கொடி நட்டு வைக்க முயன்றபோது வாலிபர் உயிரிழந்ததை முற்றிலுமாக மறுத்தார்.
"அரசு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யும்போது மின்சார வயர் பட்டதில் அங்கு வேலை செய்த நபர் உயிரிழந்துள்ளார். இது ஒரு எதிர்பாராத விபத்து தான். கட்சிக்கொடி நடும்போது உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறுவது தவறான தகவல். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் விபத்துக்கான அரசின் காப்பீட்டு தொகை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்." என கூறுகிறார்.
சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் கூறிய தகவல்களை முற்றிலுமாக மறுக்கின்றனர் மினி கிளினிக் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்த சுகாதாரத்துறையினர்.
"அரசு விழாவிற்கும், உயிரிழப்பு ஏற்பட்ட இடத்திற்கும் இடையில் சுமார் 2 கி.மீ தூரம் உள்ளது. விழா நடக்கும் பகுதிக்கு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அதற்கான விளம்பர ஏற்பாடுகளை செய்யும்போது தான் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும், அப்பகுதியில் வெறும் பத்து அடி உயரத்தில் தான் மின்சார கம்பி இருந்துள்ளது" என சுகாதாரத்துறையை சேர்ந்த நம்பத்தகுந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் பேனர் மற்றும் கட்சிக்கொடிகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுகவைச் சேர்ந்த சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்.
"அதிமுகவினரால் அம்மா மினி கிளீனிக் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வரவேற்பு அளிக்கிறோம் என்ற பெயரில், கோவை மாநகரில் மசக்காளிபாளையம், லட்சுமிபுரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 50 க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் நடக்கின்ற நடைபாதையில் போக்குவரத்திற்கு இடையூறாக, பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு பேனர்கள் வைத்து கட்டி உள்ளார்கள். மேலும் பல இடங்களில் கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்க தார் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி இதுபோன்ற செயல்களில் கோவையில் உள்ள அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்"
"கடந்த 2017ம் ஆண்டு, கோவை மருத்துவக் கல்லூரி அருகே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக விதிமீறி வைக்கப்பட்ட அதிமுக வினரின் கட்-அவுட்டால் ரகு என்ற இளைஞர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட பொதுநல மனு மீது பிறப்பித்த உத்தரவுப்படி கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட்களையும், பேனர்களையும் வைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்."
"மேலும் கோவை ,கோல்ட்வின்ஸ் பகுதியில் அதிமுக வினரின் கொடிக்கம்பம் விழுந்து தடுமாறிய ராஜேஸ்வரி என்ற இளம்பெண் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அந்த பெண்ணின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. நீதிமன்றம் தொடர்ந்து எச்சரித்தும் கூட, கோவையில் அவைகள் மதிக்கப்படாத நிலை தொடர்கின்றது. அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கைகள் தான் இத்தகைய துயரச் சம்பவங்களுக்கு காரணமாகும்."
"உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும், இதற்கு காரணமான கட் அவுட்களையும், பேனர்களையும் உடனே அகற்றுவது மட்டுமின்றி, சட்டத்தை மீறி பேனர்களை அமைத்த அதிமுக வினர் மீது போலீசார் பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
பேனர்கள் வைப்பது மற்றும் சாலையின் நடுவே கொடிக்கம்பங்கள் நடுவதில் கட்சிபேதமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபடுவதாக தெரிவிக்கிறார் சமூக ஆர்வலர் கதிர்மதியோன்.
"விளம்பர பேனர்கள் மற்றும் சாலைகளில் கட்சிக்கொடி நடுவது குறித்து நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது. ஆனால், அவற்றை அதிமுக, திமுக உட்பட எந்த கட்சியினரும் கடைபிடிப்பதில்லை. குறிப்பாக, சாலை ஓரங்களிலும், சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளிலும் கொடிக்கம்பங்கள் ஊன்றுவது தான் பல்வேறு விபத்துகள் ஏற்பட காரணமாகிறது" என்கிறார் இவர்.

தொடரும் சம்பவங்கள்
கோல்டுவின்ஸ் பகுதி அருகே சாலையில் இருந்த கட்சி கொடி விழுந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் விபத்தில் சிக்கிய சம்பவத்தின் அடிப்படையில் கதிர்மதியோன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
"பேனர் மற்றும் கொடிக்கம்பம் வைத்து மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள விதிகளை காரணம் காட்டி இந்த கலாச்சாரம் தொடர்கிறது. சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் உரிய அனுமதி பெறாமல் பேனர் வைத்ததாக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற விதிகளை சுட்டிகாட்டி தண்டனைகளில் இருந்தும் தப்பித்துக்கொள்கின்றனர்."
"இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க, பேனர் மற்றும் கொடிக்கம்பம் வைக்கும் கலாச்சாரத்தை கைவிடுவோம் என அரசியல் கட்சிகள் உறுதியாக முடிவு செய்ய வேண்டும். மேலும், பேனர் மற்றும் கொடிக்கம்பங்களால் விபத்து ஏற்படுத்தும் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மூன்று முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்தும் கட்சியை தடை செய்யும் அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் தலைவர் கதிர்மதியோன்.
மேட்டுப்பாளையத்தில் மின்சாரக் கம்பி உரசி உயிரிழப்பு ஏற்பட்ட விபத்தில் மின்சாரக்கம்பி தாழ்வாக இருந்ததை சீர்செய்யாத மின்வாரியத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
பிற செய்திகள்
- சனி - வியாழன் நேர்க்கோட்டில் வரும் அதிசயம்: இன்று எப்போது தெரியும்? வெறும் கண்களால் காண இயலுமா?
- பாஜகவுக்கு தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் வந்த சிக்கலா?
- நேபாளத்தில் அரசியல் சிக்கல்: நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












