ரஜினி அரசியல்: அறிவிப்பால் ஸ்டாலினுக்கு பயமா? குஷ்புவுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி

பட மூலாதாரம், Udhayanithi Twitter
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அறிவிப்பால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி எதிர்வினையாற்றியிருக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரையில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வரும் உதயநிதி, கடலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அங்குள்ள தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய அவர், பிறகு உள்ளூர் மீனவர்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய முதல் பயணத்தில் நான் பேசினாலே கைது செய்தனர். குறிப்பாக முதல் கட்ட பிரசாரத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து, அரங்கில் கூட்டம் நடத்துமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் தற்போது தமிழக முதலமைச்சர் பிரசாரம் தொடங்க வேண்டும் என்பதற்காகவே, கொரோனா தளர்வுகளை அரசு அறிவித்திருக்கிறது"," என்று கூறினார்.
ரஜினியின் அரசியல் வருகையை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கூறியது குறித்து உதயநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? ரஜினிகாந்த் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர். திமுக தலைவருடன் நட்பு பாராட்டக் கூடியவர். நாங்கள் அவரைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
மதுரையில் குஷ்பு எழுப்பிய கேள்விகள்

பட மூலாதாரம், Manoj
முன்னதாக, மதுரை ஊமச்சிகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, "ஆண்டுதோறும் பொங்கல் பரிசு கொடுப்பதுதான் புதிது இல்லை. அதை தேர்தல் நேரத்தில் கொடுப்பதாக எதிர்கட்சிகள் விமர்சிப்பது சரியானது அல்ல" என கூறினார்.
உலகம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலங்களில், பொருளாதார பின்தங்கிய குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு ரூ.,2,500 வழங்குவது தவறல்ல என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேசவில்லை, விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் திமுக - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களின் பிரச்னைகளை பேசவில்லை. டெல்லியில் தற்போது நடந்து வரும் போராட்டங்கள், எதிர்கட்சிகளின் தூண்டுதலால் நடக்கின்றன என்று குஷ்பு குற்றம்சாட்டினார்.
"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே. பாஜக படிப்படியாக மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது" என்று குஷ்பு கூறினார்.
"சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிருவேனா இல்லையா என எனக்கு தெரியாது. எம்.எல்.ஏ சீட்டுக்காக நான் கட்சியில் இல்லை. அதிமுக, பாஜக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பேசி முடிவை அறிவிப்பார்கள்" என்று குஷ்பு தெரிவித்தார்.
பிற செய்திகள்
- கொரோனா வைரஸின் புதிய வடிவம்: பிரிட்டனில் மீண்டும் கட்டுப்பாடுகள், பயணத் தடை விதிக்கும் நாடுகள்
- சனி - வியாழன் நேர்க்கோட்டில் வரும் அதிசயம்: இன்று எப்போது தெரியும்? வெறும் கண்களால் காண இயலுமா?
- பாஜகவுக்கு தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் வந்த சிக்கலா?
- நேபாளத்தில் அரசியல் சிக்கல்: நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












