தமிழக தேர்தல் களம் 2021: அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் முற்றும் உரசலுக்கு என்ன காரணம்?

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி

பட மூலாதாரம், @AMIT SHAH TWITTER PAGE

படக்குறிப்பு, நவம்பர் மாதம் அமித் ஷா தமிழகம் வந்தபோது அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்தார்.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவகாரத்தில், அ.தி.மு.க, பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்டு வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த கூட்டணியில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.கவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிதான் இருப்பார் என அக்கட்சியின் சார்பில் அக்டோபர் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது.

சில நாட்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது, அவர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், "அ.இ.அ.தி.மு.க. - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி நீடிக்கும்" என அறிவித்தனர். ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷா அது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், "கூட்டணி தொடர்பாக பா.ஜ.கவின் நாடாளுமன்ற குழுவே அறிவிக்கும்," என்று பா.ஜ.க தலைவர்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை அரியலூரில் பா.ஜ.கவின் கூட்டமொன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன், "வரும் சட்டமன்றத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணி தொடரும். ஆனால், யார் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பா.ஜ.கவின் தேசிய தலைமைதான் முடிவுசெய்யும்" என்று தெரிவித்தார்.

எல். முருகன்
படக்குறிப்பு, எல். முருகன்

தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை அதிமுக தொடங்கி விட்ட நிலையில், முருகனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அ.தி.மு.கவைச் சேர்ந்த அன்வர் ராஜா போன்ற தலைவர்கள் முருகனின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். அக்கட்சியைச் சேர்ந்த புகழேந்தியோ, "மாநில தலைவர் பதவியிலிருந்து எல் முருகனை பா.ஜ.க. தலைமை நீக்க வேண்டும்," என்று கோரியிருக்கிறார்.

இதற்குப் பிறகு தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை பேசிய எல். முருகன், "அ.தி.மு.கவின் முடிவை நாங்கள் ஏற்கவில்லை என தெரிவிக்கவில்லை. அ.தி.மு.கவின் முடிவை எங்களது தேசிய தலைமை ஏற்று அறிவிக்கும் என்றுதான் கூறினேன்" என்று விளக்கமளித்தார்.

முதல்வர் வேட்பாளர் குறித்த விவகாரம் ஒருபுறமிருக்க கூட்டணி குறித்து பா.ஜ.க அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது முதல்வரும் துணை முதல்வரும் கூட்டணி குறித்து உறுதிசெய்து அறிவித்தனர். இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்துவிட்டது.

இருந்தபோதும் பா.ஜ.கவைச் சேர்ந்த மாநில தலைவர்கள் அவ்வப்போது இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்துவதுபோலப் பேசினாலும், பா.ஜ.கவின் தேசிய தலைமை இதனை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அக்கட்சியின் நாடாளுமன்ற குழுவே இது குறித்து முடிவெடுக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வளவு பிரச்னைக்கும் காரணம், தொகுதிகளைப் பிரிப்பதில் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே ஓர் உடன்பாடு ஏற்படாததுதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

"அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க குறைந்தது 40 இடங்களையாவது எதிர்பார்க்கிறது. ஆனால், அ.தி.மு.க. 20 இடங்களுக்கு அதிகமாகக் கொடுக்க விரும்பவில்லை. தங்களுக்குத் திருப்தியான அளவுக்கு இடங்கள் கிடைக்கும்வரை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியை ஏற்பது குறித்து பா.ஜ.க. ஒன்றும் சொல்லாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் முற்றும் உரசல்: என்ன காரணம்?

பட மூலாதாரம், Arun karthick

படக்குறிப்பு, கோப்புப்படம்

"தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இடம்பெற்றிருப்பதாகச் சொன்னாலும் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அ.தி.மு.கதான் தலைமை வகிக்கிறது. ஆகவே, அக்கட்சி முடிவுசெய்யும் இடங்களைத்தான் பா.ஜ.க பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்," என்கிறார் அவர்.

"ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் பேசியதைக் கவனிக்க வேண்டும். கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. அ.தி.மு.கவின் கொள்கைப்படிதான் நாங்கள் நடப்போம் என்று சொல்லியிருக்கிறார். மேலும் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் முடியாத நிலையிலேயே அ.தி.மு.க. தனது பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டது. தற்போதைய சூழலில் பா.ஜ.கவால் ரஜினிகாந்த் பக்கமும் செல்ல முடியாது. ஆகவே, இந்த இழுபறி சிறிதுகாலம் நீடிக்கலாம்" என்கிறார் ப்ரியன்.

இதற்கிடையில், எல். முருகனின் பேச்சுக்கு அ.தி.மு.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆற்றிய எதிர்வினை இரு கட்சிகளுக்கிடையில் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

புகழேந்தியின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவன், "கூட்டணியை சீர்குலைக்கும் சக்திகளோடு புகழேந்தி போன்றவர்கள் கைகோர்த்துள்ளனரோ என சந்தேகிக்க தோன்றுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமை குறித்து பேசுவதற்கு புகழேந்தி போன்றவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அ.தி.மு.கவின் தலைமை இவர்களைப் போன்றவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கும் என எதிர்பார்க்கிறேன்" என கூறியிருக்கிறார்.

ஆனால், இரு கட்சிகளுக்கிடையிலும் எந்த பிரச்னையும் இல்லை; அறிவிக்கும் முறைகளில்தான் வேறுபாடு என்கிறார் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

நாராயணன் திருப்பதி
படக்குறிப்பு, நாராயணன் திருப்பதி

"அ.தி.மு.க தன்னுடைய முதல்வர் வேட்பாளரை முறைப்படி அறிவித்திருக்கிறது. ஆனால் கூட்டணி என்று வரும்போது, கூட்டணியில் உள்ள எல்லோரும் இணைந்துதான் கூட்டணியின் வேட்பாளரை அறிவிக்க முடியும். அ.தி.மு.க. தே.ஜ. கூட்டணியில் இருக்கிறது. தே.ஜ.கூட்டணி அதை முறைப்படி அறிவிக்கும். இதைத்தான் முருகன் கூறினார். இதைப் புரிந்துகொள்ளாமல், ஏதோ எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டோம் என்பதுபோல ஒரு தவறான புரிதலை உருவாக்கியது ஊடகங்கள்தான். அதற்கான எதிர்வினையாக புகழேந்தி பேசியிருக்கிறார். ஆனாலும் இன்னொரு கட்சியின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று சொல்வது சற்று அதிகமான விஷயம். ஆகவே ஊடகங்களில் வரும் செய்திகளின் உண்மை அறிந்து எதிர்வினை ஆற்ற வேண்டும்" என்கிறார் நாராயணன் திருப்பதி.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை இந்த சர்ச்சை குறித்துப் பெரிதாகப் பேச விரும்பவில்லை. "அ.தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிதான். அதற்கு மேல் இதில் சொல்வதற்கு ஏதுமில்லை" என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன்.

பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இம்மாத இறுதியில் சென்னைக்கு வரவிருக்கிறார். அப்போது பல்வேறு விஷயங்கள் தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :