கொரோனா வைரஸ்: முடக்கநிலைக்குப் பிந்தைய வாழ்க்கை - சீன மக்கள் பணிக்கு திரும்பியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லு-ஹே லியாங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கோவிட்-19 நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் சமூக அளவில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால் சீனாவில் முடக்கநிலை முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மக்கள் பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
ஆகவே, வாழ்க்கை எப்படி இருக்கும்? சீனப் புத்தாண்டை ஒட்டி தனது சொந்த நகருக்குச் செல்ல, ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரில் இருந்து காவோ டிங் புறப்பட்டபோது, பழைய நண்பர்களை சந்திக்கப் போவது குறித்தும், திருவிழா போன்ற சாப்பாடு சாப்பிடப் போவது குறித்தும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
அப்போது தெருக்களில் பலரும் முகக்கவச உறைகள் அணிந்திருக்கவில்லை என்றும், தானும் அதை அணியவில்லை என்றும் அந்தப் பெண் தெரிவித்தார். கோவிட்-19 என குறிப்பிடப்பட்ட புதிய வைரஸ் அபாயகரமானது என்றும், அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெளிவாகி, முழுமையான முடக்கநிலை ஜனவரி 23 ஆம் தேதிஅமல் செய்யப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக அவர் மாகாணத் தலைநகரில் இருந்து புறப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty images
வுஹான் நகரில் இருந்து மேற்கில் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யிச்சாங் என்ற நகரில் தன் பெற்றோர்களுடன், 34 வயதான காவோ 68 நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. அந்த நகரில் 40 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ``நாங்கள் வீட்டிலேயே இருப்போம். தினமும் அலுவலர்கள் வந்து எங்கள் உடல் வெப்ப நிலையை பரிசோதிப்பார்கள்'' என்று அவர் தெரிவித்தார். ``குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுதல், எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல், பேசிக் கொண்டிருத்தல் என நன்றாக இருந்தது. என் சகோதரி மற்றும் அவருடைய கணவர் குடும்பத்தினருடன் சேர்ந்து நாங்கள் எட்டு பேர் இருந்தோம்'' என்று அவர் கூறினார்.
``ரயிலில் ஏராளமானோர் இருந்தனர். எல்லோரும் முகக்கவச உறை அணிந்திருந்தனர்'' என்று தனது முதல் பயணம் பற்றி அவர் தெரிவித்தார். அது தவிர, பெரும்பாலான மக்கள் செல்போனில் மூழ்கிவிட்டிருந்தனர். வழக்கமான நிலையைக் காண முடிந்தது. எதுவுமே மாறவில்லை என்பது போல தெரிந்தது. ஆனால், பணி செய்யும் இடத்தில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது.
பணப் பிரச்சனைகள்
வுஹானில் மிகவும் பிரபலமான ஷாப்பிங் பகுதிகளில் ஒன்றான சீனாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான வாண்டா குழுமத்தில் செயல்பாட்டு மேலாண்மைப் பிரிவில் காவோ பணியாற்றுகிறார். சர்வதேச மற்றும் உள்நாட்டு பிராண்ட்களின் விற்பனை நிலையங்கள் மிகுந்த, சுஹே ஹான்ஜியே என்ற அந்த தெருவில் வியாபாரம் மந்தமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
அந்தப் பகுதி வளர்ச்சியில் முதலீடு செய்துள்ள அந்த நிறுவனத்துக்காக, அங்கே எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பதைக் கணக்கிட வேண்டியது காவோவின் பணிகளில் அடங்கும். ``2019ல் எங்கள் வளாகத்துக்கு தினமும் 60 ஆயிரம் பேர் வந்தார்கள். இப்போது தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே வருகிறார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.
காவோவின் வேலை கடினமானதாகவும், பிசியானதாகவும் இருந்தாலும், இரவு 9 மணிக்கும் அவர் பணியில் இருக்கிறார். வார இறுதி நாட்களில் அவர் வீட்டில் இருந்து வேலை பார்க்கிறார். விடுபட்ட வேலைகளை அப்போது செய்து முடிக்கிறார். உள்ளூரில் உள்ள வியாபாரிகளுடன் தொடர்பு கொண்டு, காலியாக இருக்கும் இடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டியதும் அவருடைய பணிகளில் அடங்கும்.
இன்னும் மூடாமல் செயல்படும் நிறுவனங்களைப் பொருத்த வரையில், மீண்டும் நோய்த் தொற்று பரவலை அதிகரித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. வுஹானில் உணவகங்கள் இரவு 7 மணிக்கு மூடப்படுகின்றன. உள்ளே அமர்ந்திருக்க யாரும் அனுமதிக்கப் படுவதில்லை. அந்த நேரத்துக்குப் பிறகு மிகச் சிலர் தான் வெளியில் இருக்கிறார்கள். மாறாக காவோவின் அலுவலகம் மதிய உணவு மற்றும் இரவு உணவுகளுக்கு ஆர்டர்கள் தருகிறது.
அலுவலகத்தில் புதிய விதிகள்
பிப்ரவரி மாதத்தில், சீனாவில் மில்லியன் கணக்கானவர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றியுள்ளனர். பலருக்கும் அது புதிய அனுபவமாக இருந்தது. இப்போது எல்லோரும் அலுவலகப் பணிக்குத் திரும்பாவிட்டாலும், சிலர் திரும்பிவிட்டனர். பொருளாதார செயல்பாடுகள் குறைவாகவே உள்ள நிலையில், சிரமத்தில் இருக்கும் சில நிறுவனங்கள் வேலை நேரத்தையும், ஊதியத்தையும் குறைத்து வருவதாகக் கூறப்படுகிறது. காவோ ட்டிங் பணிபுரிவதைப் போன்ற மற்ற இடங்களில், தங்களுடைய வியாபாரத்தை பழைய நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியாக, முன்பைவிட அதிக நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது.

மக்களின் செலவிடும் போக்கை ஊக்குவிப்பதற்காக வார இறுதியில் இரண்டரை நாட்கள் விடுமுறை திட்டத்தை உள்ளாட்சி நிர்வாகம் முன்வைத்துள்ளது. கிழக்கு சீனாவின் ஜியான்க்ஸி மாகாணத்தில் இந்தத் திட்டம் சமீபத்தில் அமல் செய்யப்பட்டது. இருந்தாலும், இந்தப் புதிய முயற்சிகள் தன்னார்வ அடிப்படையிலானது. நிறுவனங்கள் விரும்பினால் இதை அமல் செய்யலாம்.
நோய்த் தொற்று இரண்டாவது முறை தாக்கும் என்ற அச்சம்
கோவிட்-19 நோய்த் தாக்குதல் இரண்டாவது சுழற்சியாக மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சுகாதாரத் துறையினர் கூறியுள்ள நிலையில், இந்த நோயின் பாதிப்பு இன்னும் எல்லோர் மனதிலும் அப்படியே உள்ளது. பெரும்பாலான அலுவலகக் கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி வளாகங்களில் நுழைபவர்களுக்கு உடல்வெப்பத்தை பரிசோதிக்கும் பணியில் பாதுகாப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
26 வயதான அமல் லியூ என்ற பெண், தெற்குப் பகுதியில் ஷென்ஜென் நகரில் சீனாவின் அரசுக்குச் சொந்தமான பெரிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருடைய அலுவலகத்திலும், வேறு பல அலுவலகங்களிலும் அனைவரும் கட்டாயமாக முகக்கவச உறை அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ``கேண்டீனில், நாம் தள்ளி தள்ளி அமர வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள இடைத்தரகு நிறுவனங்களுடன் தாம் தொடர்பு கொள்ளும் போது, முடக்கநிலை நீட்டிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அவர்கள் கூறுவதாக லியூ தெரிவித்தார். ``வீட்டில் இருந்து பணியாற்றுவது எனக்கு நிறைவாக இல்லை. அலுவலகத்தில் உள்ளதைப் போல, வீட்டில் செம்மையாகப் பணியாற்ற முடியவில்லை'' என்று லியூ கூறினார். அலுவலக நேரத்திற்கு வந்து செல்வதை அவர் விரும்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மற்றவர்களுக்கு, சர்வதேச வாடிக்கையாளர்களுடன் உறவுகள் குறைந்துவிட்டன. 25 வயதான ஏரியல் ஜோங், சீனாவின் முன்னணி வீடியோ கேம் ஆன்லைன் தளம் ஒன்றில் குவாங்ஜோவ் நகரில் பணிபுரிகிறார். புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணுகுமுறையை மாற்றும் பொறுப்பில் அவர் இருக்கிறார்.
மெக்சிகோவை தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றும் அவர், ஆசியாவுக்கும், லத்தீன் அமெரிக்கா பகுதிகளுக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டு வந்தார். கடந்த மார்ச் மாதம் தாயகமான சீனாவுக்கு வந்தார். வந்திறங்கியதும் அந்தப் பெண், ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். பிறகு ஒரு வார காலம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தார். ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து கவனிக்கத்தக்க சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ள அலுவலகத்திற்கு செல்லத் தொடங்கினார்.
வீட்டில் இருந்தே பணியாற்றுவது நன்றாக இல்லை - அமல் லியூ
சீன புத்தாண்டு நிகழ்வுக்கு முன்பு வரையில், அவருடைய பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டதாக இருந்தது. ஆனால் இப்போது ``உள்ளே வரும், வெளியே செல்லும் நேரங்கள் மாறக் கூடியதாக உள்ளன. உணவு இடைவேளை உள்பட 9 மணி நேரம் நாங்கள் பணியாற்ற வேண்டும்'' என்று லியூ தெரிவித்தார். பொதுப் போக்குவரத்தில் சமூக இடைவெளி கடைபிடிப்பதால் ஏற்படும் தாமதங்களைக் கருத்தில் கொண்டும், ஒரே நேரத்தில் அலுவலக கட்டடத்துக்குள் நிறைய பேர் வந்து செல்வதைத் தடுக்க வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டும் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப் பட்டுள்ளது.
ஜோங் வெளிநாடு செல்ல முடியாது என்றாலும், அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவதில் மகிழ்வாக இருக்கிறார். அவருக்கு தொடர்ச்சியான, வேகமான இன்டர்நெட் வசதி தேவைப்படும் நிலையில், அலுவலகத்தில் சிறப்பாகப் பணியாற்ற முடிவதாகக் கூறுகிறார். அவருடைய சம்பளத்தில் 60 சதவீதம் அளவுக்கு வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஊக்கத்தொகை மூலம் கிடைத்து வந்தது. இப்போதைய சூழ்நிலையில் அது இல்லாமல் போனதால் அவருடைய சம்பளம் குறைந்துவிட்டது.
பணியில் கட்டுப்பாடு தளர்வுகள்
வீட்டில் இருந்தே பணிபுரியும் நிலையில் அலுவலர்களின் பணித் திறன் குறைந்துவிட்டைக் கண்டதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன என்று பெய்ஜிங்கில் செயுங் கோங் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கும் ஜாங் க்சியோமெங் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அந்தப் பெண் தலைமையில் நடந்த ஓர் ஆய்வில், அவருடைய கல்லூரி அலுவலர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் நிறுவன அலுவலர்கள் என 5,835 பேர் பங்கேற்றனர். வீட்டில் இருந்து வேலை பார்க்கும்போது பணித் திறன் குறைந்திருப்பதாக, பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறியுள்ளனர். பணித் திறனில் எந்த வித்தியாசமும் இல்லை என்று சுமார் 37 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வீட்டில் இருந்து பணியாற்றும் போது பணித் திறன் அதிகரித்திருப்பதாக 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங்கில் ஆளுமை மதிப்பீட்டு சேவையில் இருக்கும் ஹோகன் மதிப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் கிரிஸ்டா பெடெர்சன், தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு இருப்பதால், பணி நேர கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு உகந்த நிலையில் சீனா இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், மேலும் தளர்வுகள் காட்டினால் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டியிருக்கும்.
`தொழிலாளர்களுக்கு அதிக நெருக்கடி'
``எந்த நேரத்திலும் மற்றும் எல்லா நேரத்திலும் துடிப்பான செயல்பாடுகளைக் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதை நாங்கள் காண முடிகிறது. மிக வேகமாக அலுவலர்கள் பதில் அளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அல்லது முன்னதாக அல்லது பின்னர் ஒரு நேரத்தில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற நெருக்கடியைக் காண முடிகிறது'' என்று அந்தப் பெண் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், எல்லா துறைகளிலும் இதே மாதிரியான போக்கு காணப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
``முன்பு பணிபுரிந்த நிறுவனங்களுக்கு, மீண்டும் அலுவலகத்துக்குச் சென்று பணிபுரியும் எண்ணத்தை உருவாக்க எங்களுடைய எஸ்.ஓ.இ. நிறுவனங்களின் (அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள்) வாடிக்கையாளர்கள் முயற்சிப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன'' என்று அவர் கூறினார். ``அவை கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவனங்களாக உள்ளதால், அதே நிலையை சார்ந்திருக்கும்'' காரணத்தால் அவ்வாறு முயற்சிப்பதாக பெடெர்சன் தெரிவித்தார்.
ஆளுமை மதிப்பீட்டைப் பொருத்த வரையில், இந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ``பாரம்பரியம்'' மற்றும் ``உத்தரவாத'' நிலைகளில் அதிக புள்ளிகளைப் பெறுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். ``எஸ்.ஓ.இ. நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் இதில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்'' என்றார் அவர். ``எப்போதும் போலவே வேலைகளைச் செய்வதற்கு அவர்கள் மதிப்பு தருபவர்களாக இருக்கிறார்கள்'' என்றும் அவர் கூறினார். இவர்களைப் போன்றவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது கடினமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
`பாதுகாப்பாக இருப்பதாக நாங்கள் சொல்ல முடியாது'
கோவிட்-19 நோய்த் தாக்குதலால் சீனாவின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அதன் தாக்கம் இன்னும் அங்கு உள்ளது. 75 வயதான ஹே குன்பாங், ஓய்வுபெற்ற பாரம்பரிய சீன மருத்துவர். தென்மேற்கில் உள்ள யுன்னான் மாகாணத்தில் தனது கணவர் குன்மிங் உடன் வாழ்ந்து வருகிறார். ``இந்த வைரஸ் தாக்குதலால் நாங்கள் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. உணவு மற்றும் காய்கறிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. நாங்கள் வாரத்தில் 3 நாட்கள் நீச்சலுக்குச் செல்வோம். இப்போது நீச்சல் குளத்துக்குச் செல்ல முடியவில்லை'' என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அவருடைய மகள், 30 வயதைக் கடந்தவர். பெய்ஜிங்கில் வசித்து வந்த அவர், இப்போது பெற்றோருடன் இருக்கிறார். ``எனது மகள் கலந்துரையாடல் மொழி பெயர்ப்பை பகுதிநேர வேலையாக செய்து வருகிறார். அவருடைய பணி பாதிக்கப் பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார். நாட்டுக்குள் பயணம் செல்வது தீவிரமாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. எனவே சர்வதேச கலந்துரையாடல்கள், சுற்றுலா போன்றவை மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளன. உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள பாதிப்பின் விளைவை இங்கு உணர முடிகிறது. ``பெய்ஜிங்கில் அவர் வாடகையை செலுத்தியாக வேண்டும். கடன்கள், ட்டணங்கள் காப்பீட்டுச் செலவு ஆகியவற்றை சொந்தப் பணத்தில் இருந்து அவர் சமாளித்து வருகிறார்'' என்றும் அவர் தெரிவித்தார்.
ஹூபேயில் பள்ளிகள் திறப்பு
இதற்கிடையில் ஜனவரியில் மூடப்பட்ட பள்ளிகள் மார்ச் மத்தியில் இருந்து செயல்படத் தொடங்கியுள்ளன. 278 மில்லியன் பேர் மாணவர்களாக உள்ள நிலையில், அவதற்குத் தேவையான வசதிகள் அளிப்பது, நேர இடைவெளியை பராமரிப்பது முக்கியமானதாக உள்ளது. மாகாணங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப் படுகின்றன.
கடைசியாக ஹூபே மாகாணத்தில்மே மாத ஆரம்பத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பணியிடங்களில் கடைபிடிக்கப்படும் அதே கட்டுப்பாடுகள் பள்ளிக்கூடங்களிலும் அமல் செய்யப் படுகின்றன. வகுப்புகள் தொடங்கும் நேரம் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. உடல்வெப்ப நிலை பரிசோதனை, முகக்கவச உறை அணிதல், சமூக இடைவெளி போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
பெய்ஜிங்கில் அரசுக்குச் சொந்தமான பொறியியல் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் யுன் டாவோ. அவருக்கும், அவருடைய 16 வயது மகளுக்கும் இது எளிதானதாக இல்லை. ``என் மகளுக்காக தினமும் மூன்று வேளை சமைத்து களைத்துவிட்டேன். அவளை கவனித்துக் கொள்வதுடன், அவள் படிப்பதைக் கவனிப்பதிலும் நிறைய நேரம் செலவிட வேண்டியுள்ளது. என் பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. அலுவலகத்தில் உள்ளதைப் போல வீட்டில் செம்மையாகப் பணியாற்றவில்லை என்று நான் உணர்கிறேன்'' என்று அவர் கூறினார்.
`எனக்கு ஓய்வுநேரம் இல்லை என்பது போல உணர்கிறேன்'
யுன்னின் ஒரே மகள் பெய்ஜிங்கில் ஒரு சர்வதேச உயர்நிலைப் பள்ளியில் கடைசி ஆண்டு மாணவி. கடந்த 3 மாதங்களாக அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. ``முடக்கநிலை காரணமாக நடைபெறும் ஆன்லைன் கல்வி கற்றலில் கூடுதல் சிரமங்கள் உள்ளன; என் பிள்ளைக்கு அதிக உற்சாகம் இல்லை. கைப் பிரதிகள் பிரிண்ட் எடுத்தல், தினமும் படிக்க வைப்பது, தொழில்நுட்ப விஷயங்களை செய்து தருவதில் பெற்றோர்கள் நிறைய நேரம் செலவிட வேண்டியுள்ளது. என் வேலைகளை முடித்த பிறகு, ஓய்வுக்கான நேரம் இல்லை என்பதாக உணர்கிறேன்'' என்று யுன் கூறினார். ``இருந்தபோதிலும், முன்பைவிட நான் இப்போது நன்றாக சமைக்கிறேன் என்பது நல்ல விஷயம்'' என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு, நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதை அறிந்து கொள்ள, பல நாடுகளும் சீனாவின் அனுபவத்தைக் கவனிக்கின்றன.
ஆனால், சீனாவிலும் இன்னும் நிறைய நிச்சயமற்ற நிலைகள் உள்ளன. பல நாடுகளில் வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால், சீனாவிலும் அச்சம் உள்ளது. ``நாங்கள் இன்னும் கொரோனா வைரஸ் காலத்தில் தான் இருக்கிறோம். அதற்குப் பிந்தைய காலத்துக்குச் சென்றுவிடவில்லை'' என்று ஏரியல் ஜோங் கூறினார். உலகம் முழுவதிலும் எடுக்கும் கூட்டு முயற்சிகளின் அடிப்படையில் தான் இந்த வைரஸ் தாக்குதலின் முடிவு அமையும் என்றும் அவர் தெரிவித்தார். ``மற்ற நாடுகளைப் பார்த்தால், நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறலாம். மற்ற நாடுகள் இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், நாங்களும் பாதிக்கப்படுவோம்'' என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












