கொரோனா வைரஸ் தொற்றை 93 வயது கேரள தம்பதி வென்றது எப்படி?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

ஒரே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வெவ்வேறு அறையில் இருந்த இருவரும் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று அந்த தம்பதியனருக்கு எரிச்சல்.ஒரு வழியாக கண்ணாடியால் பிரிக்கப்பட்ட ஒரே அறையை மருத்துவர்கள் அவர்களுக்கு வழங்கினர். அதில் கணவருக்கு 93 வயது. அவரது மனைவிக்கு 88 வயது.இருவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டு வந்தவர்கள். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு நோய், இருதய கோளாறு ஆகியோருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்நிலையில், இதிலிருந்து மீண்டு வந்த 93 வயது முதியவர், இந்த உலகத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது முதியவர் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

"இதற்கு முன்பு சீனாவில் 96 வயது முதியவர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்தார். அதற்கு பிறகு குணமான வயது முதிர்ந்த நபர் அப்பாதான்" என்கிறார் பிபிசியிடம் பேசிய கேரளாவின் கோட்டையம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஆர்.பி ரென்ஜின.அந்த தம்பதியினர், அம்மா, அப்பா என்று குறிப்பிட்டே மருத்துவமனையில் அழைக்கப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ்

"அப்பாவிற்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என முடிவுகளில் தெரிய வந்தது. அதேதான் அம்மாவிற்கும்" என்கிறார் அவர்.

3 வாரங்களுக்கு முன்பு, இவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இத்தாலி சென்று திரும்பிய அத்தம்பதியினரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோரிடம் இருந்தே இவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பரவியிருக்கிறது.மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட தம்பதியினர்"கண்ணாடியால் பிரிக்கப்பட்ட ஒரே அறையில் அவர்களை வைத்த பிறகுதான் இருவர் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அப்பா பால் அருந்தமாட்டேன் என்று கூறிவிட்டார்.

மரவள்ளிக்கிழங்குதான் (கப்பை) வேண்டும் என்று கூறிவிட்டார். அதுவும் அவர் நிலத்தில் விளைந்ததுதான் வேண்டும் என்றார். அப்பா அவர் பகுதியில் மிகவும் பிரபலமான விவசாயி" என்கிறார் ரென்ஜின்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், EPA

"பின்னர் அவர்களது உறவினர்கள் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரது வீட்டில் இருந்து மரவள்ளிக்கிழங்கை கொண்டு வந்தனர். நாங்களும் அனுமதித்தோம். ஏனெனில், ஒருசில சமயங்களில், நோயாளியை நல்ல மனநிலையை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அவர்கள் சொல்வதை கேட்டுத்தான் ஆக வேண்டும்."ஆனால், ஒரு கட்டத்தில் அந்த முதியவரின் நிலை மிகவும் மோசமடைந்தது. வென்டிலேட்டர் வைக்க வேண்டிய அளவிற்கு ஆனது. பின்னர் 24 மணி நேரத்திற்கு பிறகு அவருக்கு சற்று உடல்நலம் தேரியது. மேலும் அந்த தம்பதியினரை படுக்கையில் இருக்க வைப்பது மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கடினமாக இருந்தது.

Banner image reading 'more about coronavirus'
Banner

"அவர்கள் எப்போதும் படுக்கையில் இருந்து இறங்கி நடக்க வேண்டும் என்பார்கள். அம்மா படுக்கையில் இருந்து அடிக்கடி எழுந்த அமர்ந்து வெளியே போக வேண்டும் என்பார். அவர்களின் அறையில் எப்போதும் ஒரு செவிலியரை நியமிக்க வேண்டிய நிலை இருந்தது" என்று ரென்ஜின் குறிப்பிட்டார்.நாள் ஒன்றுக்கு ஆறு செவிலியர்கள் அந்த தம்பதியினரை சுழற்சி முறையில் கவனித்து கொண்டனர்."அம்மா சற்று அமைதியாகவே இருப்பார். அவரால் அதிக நேரம் படுக்க முடியாது. அதனால் எழுந்து நிற்பது, அமர்வது என்றிருப்பார். பின்னர் அவரிடம் பேசி, சமாதானப்படுத்தி படுக்க வைக்க வேண்டும்"அந்த தம்பதியினரின் மகளும் மகனும் சமீபத்தில்தான் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தம்பதியினரை வீட்டிற்கு அனுப்பும் முன்பு இருவரையும் குளிர்சாதன வசதி இல்லாத அறையில் வைக்க முடிவெடுக்கப்பட்டது. அவர்கள் வீட்டிற்கு போகும் முன்பு அதற்கு பழக வேண்டும் என்பதற்காக இவ்வாறு முடிவு செய்யப்பட்டது."மருத்துவ காரணங்களுக்காகவே அவர்களை இரு நாட்கள் இங்கே வைக்க உள்ளோம். இங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். மேலும், அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் உறுதி செய்ய வேண்டியிருக்கிறது" என ரென்ஜின் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: