பிக்பாஸ் அல்டிமேட்: கமல்ஹாசன் உருவாக்கிய வெற்றிடத்தை நிரப்ப போவது யார்?

பட மூலாதாரம், KAMALHASSAN
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக விலகி இருக்கிறார். ஏன் விலகினார்? இனி அவர் இடத்தை நிரப்பப் போவது யார்?
உலக பிரசித்தி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் ஐந்து சீசன்களை முடித்திருக்கிறது. தமிழின் ஐந்து சீசன்களையும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
ஐந்து சீசன்களுக்கும் கமல்ஹாசனே நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இடையில் கமல்ஹாசன் விலகுவதாகவும், வேறு சில நடிகர்கள் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாயின.
அப்போது கமல்ஹாசன் அதை மறுத்து, ஐந்து சீசன்களையும் தானே தொகுத்து வழங்குவதையும் அந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே உறுதிப்படுத்தினார்.
ஐந்து சீசன்கள் முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் ஓடிடி வடிவம் ஒளிபரப்பப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இறுதி நிகழ்வின் போதே மேடையில் கமல்ஹாசன் உறுதிப்படுத்தினார். அத்துடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான லோகோவையும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனை கொண்டு அறிமுகப்படுத்தினார்.
புதிய வடிவத்தில் பிக்பாஸ் அல்டிமேட்
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில் அதாவது ஜனவரி 30ம் தேதியில் இருந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்ட எபிசோடுகள் மட்டும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தன.
ஆனால், தற்போது 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்காக எடிட் செய்யப்படுவது என்பதையும் தாண்டி நிகழ்ச்சியில் முழுமையாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.
அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக புகைப்பிடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாயின.
முதல் வாரமே நாமினேஷன், எலிமினேஷன் என பிக்பாஸ் அல்டிமேட் பரபரப்பை கூட்ட தவறவில்லை. நிகழ்ச்சியின் தன்மையை புரிந்து கொண்டு பிக்பாஸ் விளையாட்டை சுவாரஸ்யமாக்க கூடிய போட்டியாளர்களாக, முந்தைய சீசனில் இருந்து வனிதா, அனிதா, ஜூலி, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சிநேகன், நிரூப், சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், சுஜா வருணி, சுருதி, தாமரை உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், VIJAY TV
இதில் முதல் வாரம் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் சுரேஷ் சக்ரவர்த்தி, இரண்டாவது வாரம் சுஜா வருணி, மூன்றாவது வாரமான நேற்று டபுள் எவிக்ஷன் என அபிநய் மற்றும் ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
திடீரென விலகிய கமல்ஹாசன்
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக செய்திகள் நேற்று வெளியாக தொடங்கின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று மாலை ஆறு மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கோவிட் பெருந்தொற்று காரணங்களால் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் திட்டங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் 'விக்ரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் பிற தயாரிப்பு பணிகளும் விதிவிலக்கல்ல என அந்த அறிக்கை தொடங்குகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் விரும்பி செய்கின்ற பணிகளில் ஒன்றாக அந்த அறிக்கையில் குறிப்பிடுபவர் இந்த வேலையால் விக்ரம் படத்தின் பணிகள் பாதிக்கப்பட கூடாது என பல சவால்களுக்கு மத்தியில் திட்டமிட்டு நடத்தி வந்ததையும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் தனக்கு கோவிட் தொற்று வந்தபோது கூட மருத்துவமனையில் இருந்து போட்டியாளர்களையும் ரசிகர்களையும் சந்தித்து நிகழ்ச்சியை தொடர்ந்ததையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், 'பிக்பாஸ் ஓடிடிக்காக வந்த போது அந்த மாற்றத்தையும் வரவேற்று அதையும் முன்னெடுத்தேன் புதிய தொழில்நுட்பங்களையும் வரவேற்று மக்களை மகிழ்விக்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடக்கூடாது என்ற உத்வேகம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
ஆனால், லாக்டவுன் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கி இருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பு நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதால் பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகி விட்டது' என நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தையும் கமல் தெளிவுபடுத்தியுள்ளார்.
தன் சொந்த காரணங்களின் பொருட்டு பிறருடைய பணிகளை தாமதப்படுத்துவது நியாயமல்ல என்று குறிப்பிடும் கமல், பிப்ரவரி 20ஆம் தேதி எபிசோடுக்கு பிறகு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் இதனை புரிந்து கொண்ட நிகழ்ச்சி தயாரிப்பு தரப்புக்கும் தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து மட்டுமே தான் விலகுவதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் தான் இருப்பேன் என்பதையும் இந்த அறிக்கையில் கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கமல் இடத்தில் இனி யார்?
இது குறித்து நிகழ்ச்சியில் பேசியவர், 'நான் விருப்பமில்லாமல் விலகுவதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேதிகள் சிக்கல்கள் காரணமாகத்தான் நான் விலகுகிறேன்.
மற்றபடி விருப்பமில்லை என்றால், எப்படி கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட வீடியோ மூலமாக ரசிகர்களையும் போட்டியாளர்களையும் சந்தித்து இருப்பேன்? அடுத்த சீசனில் நிச்சயம் சந்திப்போம் என நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் தெரிவித்து விடை பெற்றார் கமல்ஹாசன்.
தற்போது கமல்ஹாசன் விலகி இருப்பதால் 60 நாட்கள் கொண்ட பிக்பாஸ் அல்டிமேட்டின் மீதமுள்ள நாட்களில் நிகழ்ச்சியை வார இறுதியில் தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி இப்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
முன்பு எடிட் செய்யப்பட்ட எபிசோட்டில் ஒரே நாளில் சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களுக்கான படப்பிடிப்பு ஒரே நாளில் முடியும். அதை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது 24*7 என்பதால் ஞாயிறு மட்டும் ஒரே எபிசோடாக கமல்ஹாசன் வருவது ஒளிபரப்பானது.
ஏற்கனவே கமல் உடல்நிலை காரணமாக விலகி இருந்த போது ஒரு வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதனால், இனி வரும் நான்கு வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர்த்து நடிகை ஷ்ருதி ஹாசன் உள்ளிட்ட வேறு சில பிரபலங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு குழு.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

பிற செய்திகள்:
- மோதிக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஸ்டாலினை முந்துகிறாரா கேசிஆர்?
- உலகத் தாய்மொழிகள் தினம்: 'கருவிலேயே 10 ஆயிரம் சொற்களைக் கற்கும் குழந்தை'
- முஸ்லிம்கள் தூக்கிலிடப்படுவது போன்று குஜராத் பாஜக வெளியிட்ட கார்ட்டூனை நீக்கிய ட்விட்டர்
- 'கொல்லப்படுவோம் என்பது மால்கம் எக்ஸுக்கு முன்பே தெரியும்'
- அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பள்ளி: "பெற்றோர்களே ஆசிரியர்கள் ஆனார்கள்"
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக பட்டியலிட்ட காரணங்கள் - கவலையில் ரசிகர்கள்
- பாலமேடு ஜல்லிக்கட்டு: திமில் குலுங்க இளைஞர்களோடு மல்லுகட்டிய கம்பீரக் காளைகள் - கள படங்கள்
- இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மோதியின் 10 அறிவுரைகள்
- மாயாவதி போட்டியிடாத தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - என்ன பின்னணி?
- இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?
- காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு சொல்வது உண்மைதானா?
- யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்? எவ்வளவு வருமானம்?
- 'பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்' - ஆர்.எஸ்.எஸ்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













