குஜராத் பாஜக ட்விட்டரில் முஸ்லிம்கள் தூக்கிலிடப்படுவது போன்று வெளியிட்ட சர்ச்சை கார்ட்டூனை நீக்கிய ட்விட்டர்

பாஜக

பட மூலாதாரம், Getty Images

குஜராத் பாஜக வெளியிட்ட சர்ச்சை கார்ட்டூனை ட்விட்டர் நீக்கியது குறித்த செய்தியை 'தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

2008ம் ஆண்டின் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பிப்.19 அன்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தொப்பி அணிந்த சிலர் தூக்கிலிடப்படுவது போன்ற கார்ட்டூன் குஜராத் பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், "சத்யமேவ ஜெயதே", "தீவிரவாதத்தைப் பரப்புபவர்களுக்குக் கருணை கிடையாது" எனவும் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த கார்ட்டூன், குறிப்பிட்ட மதத்தினரை சித்தரிப்பதாக, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து, அப்பதிவை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

"நீதிமன்ற தீர்ப்பைப் பயன்படுத்தி பாஜக பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது" என, குஜராத் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனிஷ் தோஷி தெரிவித்தார்.

இந்த சர்ச்சை கார்ட்டூன் குறித்து பதிலளித்த குஜராத் பாஜக ஊடக அணியை சேர்ந்த யக்னேஷ் தவே, "இந்த கார்ட்டூன் எந்தவொரு மதத்தினரையும் குறிக்கவில்லை. நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளையே குறிக்கிறது" என்றார்.

இந்நிலையில், அந்த கார்ட்டூன் விதிமுறைகளை மீறுவதாக கூறி, ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.

தந்தையிடம் அடிவாங்குவதில் இருந்து தப்பிக்க இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச சிறுமி: பிஎஸ்எப் படையினரிடம் பிடிபட்டார்

பிஎஸ்எப் படை

தந்தையிடம் அடிவாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக இந்திய எல்லைக்குள் நுழைந்த வங்கதேச சிறுமி பிஎஸ்எப் படையினரிடம் பிடிபட்டதாக, 'இந்து தமிழ் திசை' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள ஜெனாய்தா மாவட்டம் பன்ஸ்பெரியா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் இந்தியா-வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் (பிஎஸ்எப்) பிடிபட்டார். அவரிடம் எந்தவிதமான உடமைகளோ, பணமோ, பொருளோ இல்லை. இந்தியா-வங்கதேச எல்லைக்கு மிக அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து கால்நடையாக 3 கிலோமீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். அவரை பிஎஸ்எப் படையினர் பிடித்து விசாரித்தபோது தந்தையிடமிருந்து அடிவாங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக ஓடி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி இல்லாத பகுதி வழியாக இவர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். மேலும், தான் வங்கதேசத்துக்கு திரும்பிச் செல்ல விருப்பம் இல்லையென்றும், அப்படிச் சென்றால் தனது தந்தை அடிப்பார் என்றும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அந்த சிறுமியை சைல்ட்லைன் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அரசு சாரா அமைப்பிடம் பிஎஸ்எப் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து பிஎஸ்எப் படையின் டிஐஜி எஸ்.எஸ். குலேரியா கூறும்போது, "அந்தச் சிறுமியை அவரது தந்தை தினந்தோறும் அடித்து வந்துள்ளார். அதற்கான காரணங்கள் போதுமானதாக இல்லை. தந்தையின் அடிக்கு பயந்து அவர் ஓடி வந்துள்ளார். சிறுமி ஓடி வந்து இந்திய எல்லையில் நுழைந்தது தொடர்பாக வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 1,709 தெருவோர குழந்தைகள்: உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல்

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் மொத்தம் 1,709 தெருவோர குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியை 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில், "தமிழகத்தில் மொத்தம் 1,709 தெருவோர குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 1,430 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவற்றில் 17 குழந்தைகள் திறந்தவெளி கூடாரத்தில் வசிக்கின்றனர். தெருவோரங்களில் கண்டறியப்பட்ட குழந்தைகளில் 343 பேர் கல்வி பயின்று வருகின்றனர். 1,454 குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

331 குழந்தைகளுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 803 குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாகவும், பிச்சை எடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். 194 குழந்தைகள் காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,463 குழந்தைகள் அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த 5 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

192 குழந்தைகளின் பெற்றோர்களின் அடையாளத்தை கண்டறிந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 263 குழந்தைகளுக்கு மத்திய, மாநில திட்டங்களின் பயன்களை பெற்று வருகின்றனர். 5 குழந்தைகள் ஊக்க ஆதரவு பெற்று வருகின்றனர்.

தெருவோர குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்படுத்தி வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமரையில்தான் லட்சுமி வீட்டுக்கு வரும்: ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், Getty Images

லட்சுமி தாமரையில் அமர்ந்துதான் வீட்டுக்கு வரும் என, மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அமேதி அருகே பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், "லட்சுமி தெய்வம் யார் வீட்டுக்கும் சைக்கிளிலோ, யானையிலோ அல்லது யாதாவது கையில் அமர்ந்து வராது. தாமரையில் அமர்ந்துதான் வரும்" என்றார்.

மேலும், லட்சுமி வருகையின் அறிகுறிதான் பிரதமரின் திட்டங்கள் எனவும் அவர் விளக்கமளித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சின்னம் சைக்கிள், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை, காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. இவற்றைக் குறிப்பிட்டே ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

அமேதியில் பிப்ரவரி 27ம் தேதி 5வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: