நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் படித்தவர்கள் வாக்களிக்கவில்லையா? - ஓர் அலசல்

வாக்குப் பதிவு
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உள்ளாட்சித் தேர்தலில் முன்னேறிய நகர்ப்புற பகுதிகளில் குறைவான அளவில் வாக்குப்பதிவும் பின் தங்கிய கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது. இது பற்றி அலசுகிறது இந்தக் கட்டுரை.

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. மாநில அளவில் 60.07% வாக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியாக தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49% வாக்குகளும் குறைந்தபட்சமாக குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மாநகராட்சி வாரியாக அதிகபட்சமாக கரூர் மாநகராட்சியில் 75.84% வாக்குகளும் குறைந்தபட்சமாக சென்னை மாநகராட்சியில் 43.59% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

நகராட்சி வாரியாக அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் 81.37% வாக்குகளும் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் 59.98% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பேரூராட்சி வாரியாக அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் 86.43% வாக்குகளும் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் 66.29% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில் 52.22% வாக்குகளும், நகராட்சிகளில் 68.22% வாக்குகளும், பேரூராட்சிகளில் 74.68% வாக்குகளும் பதிவாகியுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பேரூராட்சிகளில் அதிக அளவிலும் மாநகராட்சி பகுதிகளில் குறைந்த அளவிலும் வாக்குகள் பதிவாகியிருப்பது தரவுகள் மூலம் காண முடிகிறது.

முன்னேறிய நகர்ப்புற பகுதிகளில் குறைவான அளவில் வாக்குப்பதிவும் பின் தங்கிய கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது

மாவட்ட வாரியாக தர்மபுரி மாவட்டம் 80.49% வாக்குகளுடன் முதலிடத்திலும் செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்கள் முறையே 55.30% மற்றும் 43.59% வாக்குகளுடன் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.

வாக்குப் பதிவு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்ட வாரியாக தர்மபுரி 64.71% கல்வியறிவுடன் தமிழகத்தில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 90.33% கல்வியறிவுடன் தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னை மாவட்டம் 100% நகர்ப்புற பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் 82.67% கிராமப்புற பகுதியாகவும் 17.33% நகர்ப்புற பகுதியாகவும் உள்ளன.

இது முதல்முறையல்ல, நாடு தழுவிய அளவில் இதே நிலை தான் இருப்பதாக சொல்கிறார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியவர், 'உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் இந்த நிலை உள்ளது. பொருளாதார ரீதியாக முன்னேறிய கல்வி அறிவு அதிகம் உள்ள நகரங்களில் எப்போதும் குறைவான வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளன. இது துர்திருஷ்டவசமான விஷயம் தான். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் இது மிகவும் பட்டவர்த்தனமாகியுள்ளது.

தேர்தல் ஆணையங்களின் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நகர்ப்பகுதிகளை தான் அதிகம் மையப்படுத்தியுள்ளன. ஆனாலும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பது முரணாக உள்ளது.

இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்களுக்கு உள்ள அதிருப்தி

மற்றுமொரு முக்கியமான விஷயம் முதல்முறை வாக்காளர்கள் தேர்தல்களில் அதிக ஈடுபாடு, நம்பிக்கை இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இளைஞர்களை விடவும் முதியவர்கள் தவறாமல் வந்து வாக்களிக்கிறார்கள். முதல்முறை வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தவில்லையென்றால் வாக்குப்பதிவு விகிதம் குறைந்து கொண்டே தான் வரும்.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களைவிட நகர்ப்பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குப்பதிவு மிகக் குறைவாக உள்ளது. நிர்வாகத்தை மையப்படுத்தாமல் பரவலாக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள், நிதி ஆதாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் இயல்பாகவே மக்களிடம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு இருப்பது வாக்குப்பதிவு அதிகம் நடைபெறுவதற்கு காரணமாக உள்ளது. நகர்ப்பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை தேவைகள் மக்கள் கேட்காமலே கிடைத்துவிடுவதும் இதற்கு ஒரு காரணம். வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிப்பது தேர்தல் ஆணையத்தால் மட்டுமே சாத்தியப்படாது, அரசியல் கட்சிகளுக்கும் இதில் பங்குள்ளன" என்றார்.

வாக்குப் பதிவு

அரசு நிர்வாகம் நகர்ப்புறங்களை மையப்படுத்தியிருப்பதும் குறைவான வாக்குப்பதிவிற்கு ஒரு காரணம் என்கிறார் அரசியல் விமர்சகர் பேராசிரியர். ராமு மணிவண்ணன், இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியவர் 'வாக்குபதிவில் முதலிடத்தில் உள்ள தர்மபுரி கல்வியறிவில் தமிழகத்தில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் கல்வியறிவில் மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை வாக்குப்பதிவில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த வித்தியாசத்தை எல்லா தேர்தல்களிலும் உணர முடியும். உள்ளாட்சித் தேர்தலில் மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது.

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள் இல்லையென்றாலும் நகர்ப்புறங்களில் எந்தத் திட்டங்களும் தடைபடவில்லை. ஆனால் கிராமப்புறங்களில் பிரதிநிதிகள் இல்லையென்றால் திட்டங்கள் முடங்கிவிடும். நகர்ப்பகுதிகளில் நிர்வாக அமைப்பே தேவைகளைப் பார்த்துக் கொள்ளும். ஆனால் கிராமப்புறங்களில் வேட்பாளர்களுக்கான முக்கியத்துவம் அதிகம்.

அதனால் கிராமப்புறங்களில் மக்களின் ஈடுபாடு அதிகம் உள்ளது. ஆனால் மாநகராட்சி கொடுக்கப்படும் முக்கியத்துவம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. மாநகராட்சிகளுக்கு தான் அதிக அளவில் திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படுகின்றன.

இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் மற்றும் ஜனநாயகம் மீது உள்ள குறைகள், அவநம்பிக்கைகளையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. இளைஞர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் அதிகம் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

வாக்குப்பதிவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

வாக்களிப்பதை உரிமையாக மட்டுமில்லாமல் கட்டாயமாக்க வேண்டும் என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. இது தொடர்பாக மேலும் விவரித்தவர், 'ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஊர்களிலும் தேர்தல் அருங்காட்சியகங்கள் உள்ளன. இதே போல் இந்தியாவிலும் முயற்சி செய்து பார்க்கலாம். வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை பள்ளிகளிலிருந்தே மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், வேலை பார்க்கும் நிறுவனங்கள் என அனைவருக்கும் இதில் பங்கு உள்ளன. பாடத்திட்டங்களில், வாக்களிக்கும் முறைகளை ஒரு அங்கமாகவே ஆக்க வேண்டும்.'

'வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டுமா என்பது தொடர்பான விவாதங்கள் அரசியல் நிர்ணய சபையில் நிகழ்ந்துள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகும் இது தொடர்பான விவாதங்கள் பலமுறை எழுந்துள்ளன. ஆனால் விவாதித்தே 70 ஆண்டுகளை நாம் கடந்துவிட்டோம். பல நாடுகளில் வாக்களிப்பதை கட்டாயமாக்கியுள்ளார்கள். இந்தியாவிலும் நாம் அதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.' என்றார்.

வாக்குப் பதிவு

பேராசிரியர் ராமு மணிவண்ணனும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்கிறார். மேலும் பேசியவர், 'நோட்டா போல காலத்தின் தேவைக்கேற்ப பரிட்சார்த்த முறையில் பலவற்றை நாம் முயற்சித்து வருகிறோம். வாக்களிக்க விருப்பமில்லாதவர்களும் வாய்ப்பு வழங்க தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல் வாக்களிப்பதை கட்டாயமாக்கலாம்.

இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் அவநம்பிக்கை இருப்பது உண்மை. அரசியல் அறிவியல் துறை பேராசியராக பணியாற்றிய என் மாணவர்களிடமே அதை பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கு நாமும் ஒரு காரணம் தான். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்தல், வாக்குப்பதிவு பற்றி பாடம் இருப்பது மற்றும் போதாது. அதை செயல்முறையில் அனுபவிக்கும் விதமாக மாதிரி தேர்தல்கள், மாணவர் அமைப்பு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் அரசியல் இல்லாத இடமில்லை.

மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கும் வரை அரசியல் நீக்கம் செய்துவிட்டு வாக்களிக்கும் போது அரசியல்மயப்படாமல் இருக்கிறார்கள், தேர்தலில் ஈடுபடமாட்டிக்கிறார்கள் என்று சொல்வது நகைமுரண். அரசியல் இல்லாமல் தேர்தல் இல்லையே. மாணவர்களை அரசியல்மயப்படுத்த வேண்டும், அவர்களுக்கான அரசியல் தேர்வை அவர்கள் மேற்கொள்வார்கள்' என்றார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: