திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக வாக்களித்த பட்டியல் சமூக மக்கள்

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள திருமூர்த்திமலை பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறை
இந்தப் பகுதி பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு கீழும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு கீழும் வருகின்றது
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் துணை செயலாளர் மணிகண்டன், "திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலைக்கு உட்பட்ட இந்த கிராமங்களில் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள் கடந்த காலங்களில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களித்துள்ள போதும் இதுநாள் வரை உள்ளாட்சி தேர்தலில் ஒரு முறை கூட வாக்கு செலுத்தியது இல்லை.
இந்த கிராமங்கள் உள்ளாட்சி பகுதிகளின்கீழ் இணைக்கப்படாததால் உள்ளாட்சி தேர்தலில் இவர்களால் வாக்கு செலுத்த முடியவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கிடைக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்டங்கள் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை.
எனவே உள்ளாட்சி அமைப்புகளில் இந்த கிராமங்களைச் சேர்க்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றோம். கடந்த 2008ஆம் ஆண்டு தமிழக மலைவாழ் மக்கள் சங்கத்தை உருவாக்கி இந்தக் கோரிக்கைக்காக போராடி வருகிறோம்.
இந்த நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக திருப்பூர் மாவட்டம் தளி பேரூராட்சியின் கீழ் இந்த கிராமங்கள் இணைக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் தளி பேரூராட்சியின் கீழ் உள்ள 16வது வார்டில் குருமலை, மேல் குருமலை, பூச்சிகொட்டாம்பாறை என்கிற கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு 385 வாக்காளர்கள் உள்ள நிலையில் 306 பேர் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு செலுத்தியுள்ளனர்.
திருமூர்த்தி மலை கிராமம் 17வது வார்டாக இணைக்கப்பட்டுள்ளது. இங்கு 181 வாக்காளர்கள் உள்ள நிலையில் 167 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர்.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் இம்மக்கள் வாக்களித்திருந்தாலும் உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்காதது மிகப்பெரிய பின்னடைவாக இருந்து வந்தது.
உள்ளாட்சி அமைப்புகளின் நலத்திட்டங்கள் கிடைக்கும்
இதுநாள் வரை எங்கள் மக்கள் வாக்களித்து வேறுயாரையோ தேர்வு செய்து வந்தோம். இப்போது முதல்முறையாக எங்கள் மக்களே தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். எங்கள் மக்களும் பெருவாரியாக வாக்களித்து உள்ளனர். எங்களுடைய மக்களிலிருந்து ஒருவர் எங்களுக்கான பிரதிநிதியாக வரும்போது அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை எங்களால் பெற முடியும்.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிடைக்கும் பசுமை வீடு போன்ற பல திட்டங்களை இந்த மக்கள் இப்போது பெற முடியும்.
பழங்குடியினர் பிரிவுக்கு மாற்ற வேண்டும்
இந்த கிராமங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மக்கள் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதில் சில பிரிவுகளை சேர்ந்த மக்கள் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இல்லாமல் பட்டியல் சாதியினர் பிரிவில் உள்ளனர். அவர்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைக்க வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். அப்போதுதான் பழங்குடி சமூக மக்களுக்கு கிடைக்கும் அரசின் உதவி நலத்திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு போன்ற பலன்களை பெற முடியும்.
தமிழக அரசு இந்த கோரிக்கைக்கு ஆதரவாகவே உள்ளது மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால் இந்த சமூக மக்கள் பழங்குடி பிரிவில் சேர்க்கப்படுவார்கள் எங்கள் கோரிக்கை விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது.
இன்று மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்வதற்கான வாக்குப்பதிவு நடந்தது.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22தேதி நடக்கும்.

பிற செய்திகள்:
- "ஹிஜாப் பிரச்னை, திமுக - பாஜக வாக்குவாதம்" - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முக்கிய தகவல்கள்
- "ஹிஜாப் பிரச்னை, திமுக - பாஜக வாக்குவாதம்" - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முக்கிய தகவல்கள்
- சென்னை புத்தகக் கண்காட்சி: கவனத்தை ஈர்க்கும் இளைஞர்களின் படைப்புகள்
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













