பிரிட்டன் அரசிக்கு கொரோனா தொற்று உறுதி

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிம்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
அரசிக்கு லேசான சளி போன்ற அறிகுறிகள் இருப்பதாகக் கூறியுள்ள அரண்மனை, வரும் வாரங்களில் அவர் "லேசான பணிகளை" மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளது.
"அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார். வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார் " என்று அரண்மனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
95 வயதான அரசி தனது மூத்த மகனும் பட்டத்து வாரிசுமான வேல்ஸ் இளவரசருடன் தொடர்பில் இருந்தார். இளவரசருக்கு கடந்த வாரம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிரிட்டனில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியான இரண்டாம் எலிசபெத், கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தனது ஆட்சியின் 70 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது முதல் பெரிய பொது நிகழ்ச்சியாக, சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் தொண்டு ஊழியர்களைச் சந்தித்தார்.
அரசி வசிக்கும் விண்ட்சர் கோட்டையில் பலருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அரசு தனது முதல் தவணை தடுப்பூசியை கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி போட்டுக் கொண்டார். அவர் இரண்டாவது தவணை தடுப்பூசியையைபும் போட்டுக் கொண்டிருப்பார் என்று நம்பப்படுகிறது.
இளவரசர் சார்லஸின் மனைவி கமீலாவுக்கும் ஏற்கெனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறை.

பட மூலாதாரம், Getty Images
காலவரிசை: அரச குடும்பமும் கொரோனாவும்
- மார்ச் 2020: இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி. கமிலா தனிமைப்படுத்தப்பட்டார் - அவருக்கு தொற்று இல்லை.
- ஏப்ரல் 2020: இளவரசர் வில்லியமுக்கு கொரோனா தொற்று உறுதி
- ஜனவரி 2021: அரசியும் இளவரசர் பிலிப்பும் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்
- பிப்ரவரி 2021: இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
- 8 பிப்ரவரி 2022: வின்ட்சர் கோட்டையில் நடந்த நிகழ்வில் இளவரசர் சார்லஸுடன் அரசி நேரத்தை செலவிட்டார்.
- பிப்ரவரி 10: இளவரசர் சார்லஸுக்கு இரண்டாவது முறையாக கொரோனோ தொற்று உறுதியானது.
- பிப்ரவரி 14: சார்லஸின் மனைவி கமீலாவுக்கு தொற்று உறுதி
- பிப்ரவரி 20: அரசிக்கு தொற்று உறுதியானதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது.
(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













