நரேந்திர மோதி: இந்தியாவின் முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தரும் 10 அறிவுரைகள்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, நரேந்திர மோதி

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனவரி 15ஆம் தேதி (சனிக்கிழமை) இந்தியாவின் முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவன தலைவர்களோடு காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆறு தலைப்புகளின் கீழ் தங்கள் கருத்தாக்கங்களை விளக்கின.

இக்கூட்டத்தில் இந்திய அரசின் வணிக வரித் துறை அமைச்சர் பியுஷ் கோயல், இந்திய அரசின் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சர்பானந்த சோனாவால், ஜி கிஷண் ரெட்டி, ஆகியோரும் கலந்து கொண்டானர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் விளக்கத்துக்குப் பின் பிரதமர் உரையாற்றினார்.

அதில் அவர் பேசிய முக்கிய விவரங்கள் இதோ:

* ஸ்டார்ட் அப் கலாசாரத்தை இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் கொண்டு சேர்க்க, ஜனவரி 16ஆம் தேதி இனி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும். இந்தியாவின் ஸ்டார்ட் அப்கள் ஒட்டுமொத்த வணிகத்தையே மாற்றுகிறார்கள், ஆகையால்தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய இந்தியாவின் முதுகெலும்பு என நான் கருதுகிறேன். அந்த நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.

* கடந்த ஆண்டு இந்தியாவில் 42 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாயின. அந்நிறுவனங்கள் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புடையது. அது இந்தியாவின் தன்னம்பிக்கை மற்றும் சுய சார்பின் மகத்தான வெளிப்பாடு. இந்திய ஸ்டார்ட் அப்களுக்கான பொற்காலம் இப்போது தான் தொடங்கி உள்ளது. அதை வலுப்படுத்துங்கள்.

* இந்த தசாப்தம் இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தமாக 'டெக்கெட் (Techade)' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த டெக்கெட் பட்டத்தை வலுப்படுத்த அரசின் 'ஸ்டார்ட் அப் இந்தியா அண்ட் ஸ்டாண்ட் அப் இந்தியா' ஆகிய திட்டங்கள் மேலும் முனைப்போடு செயல்படும்.

* தொழில்முனைப்புத் தன்மை மற்றும் புதுமையை அரசுச் செயல்பாடுகள் மற்றும் அதிகார வர்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க நிறுவனம் சார் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் நிறுவனங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

ஸ்டார்ட் அப் நிறுவன தலைவர்களோடு பிரதமர் மோதி

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, ஸ்டார்ட் அப் நிறுவன தலைவர்களோடு பிரதமர் மோதி

* 2013 - 14 காலகட்டத்தில் 4,000 பேடன்ட்கள் மட்டுமே வழங்கப்பட்டன, ஆனால் கடந்த ஆண்டு 28,000 பேட்டன்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது புதிய கண்டுபிடிப்புகளின் வேகத்தைக் காட்டுகிறது. இதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

* 2013 - 14 காலகட்டத்தில் 70,000 டிரேட் மார்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. 2020 - 21ஆம் ஆண்டில் 2.5 லட்சத்துக்கு மேற்பட்ட டிரேட் மார்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே காலகட்டத்தில் 4,000 ஆக இருந்த காப்புரிமைகள், 16,000 ஆக அதிகரித்துள்ளன. குளோபல் இன்னவேஷன் இண்டெக்ஸ் குறியீட்டில் 81ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 46ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

* இந்தியாவில் உள்ள 625 மாவட்டங்களில் குறைந்தபட்சம் தலா ஒன்றில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாவது உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்டார்ட் அப்களில் பாதிக்கும் மேற்பட்டவை இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவை. அவர்கள் ஏழை எளிய மக்கள் மற்றும் குடும்பங்களின் யோசனைகளை வியாபாரமாக மாற்றுகிறார்கள். அதனால் பல லட்சம் இளைஞர்கள் பயனடைகிறார்கள். இந்த ஆற்றலை வலுப்படுத்துங்கள்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, நரேந்திர மோதி

* இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால், உலகின் எந்த நாட்டிலும் சென்று வியாபாரம் செய்ய முடியும். எனவே உங்கள் கனவுகளை உள்ளூரோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள், உலக அளவில் கனவு காணுங்கள். இந்தியாவுக்காக கண்டுபிடிப்போம், இந்தியாவில் கண்டுபிடிப்போம்.

* இந்திய தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவை 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை டிரோன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளன. எதிர்கால தொழில்நுடபம் தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கு இந்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* மொபைல் இணையம், பிராட்பேண்ட் இணைப்பு என எதுவானாலும் கிராமங்களின் கனவுகள் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. கிராம புற மற்றும் புற நகர் பகுதிகள் விரிவாக்கங்களுக்காக காத்திருக்கின்றன . நான் உங்களோடு இருக்கிறேன், இந்த அரசு உங்களோடு இருக்கிறது, ஒட்டுமொத்த நாடும் உங்களோடு இருக்கிறது என்றார் நரேந்திர மோதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: