பிக்பாஸ் அல்டிமேட்: விதிமீறிய பாலாஜி முருகதாஸ், தணிக்கை இல்லா காட்சி, முதல் நாள் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Bigg Boss
- எழுதியவர், ச.ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
புகழ் பெற்ற பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி, தமிழில் ஐந்து சீசன்களை முடித்து தற்போது ஓடிடி தளத்திற்குள்ளும் அடியெடுத்து வைத்திருக்கிறது. பழைய சீசன்களின் போட்டியாளர்கள், நிகழ்ச்சியில் தணிக்கை இல்லை, முதல் நாளே நாமினேஷன் என, 'பிக்பாஸ் அல்டிமேட்'தான் இப்போது சமூக வலைதளங்களின் பேசுபொருளாகி இருக்கிறது. யார் யார் போட்டியாளர்கள்? முதல் நாள் என்ன நடந்தது?
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு சீசன் முடிந்த பிறகு அதன் அடுத்த சீசன் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும். ஆனால், தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கூட முடிவடையாத நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கி இருக்கிறது.
இதுவரை பிக்பாஸ் சீசன் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பானது. அதிலும் நிகழ்ச்சிக்குத் தேவையான சுவாரஸ்யம் தரக்கூடிய விஷயங்களை மட்டுமே எடிட் செய்து ஒளிபரப்பினார்கள். அடுத்த நாள் செயலியில் 'Unseen' என சில எடிட் செய்யப்படாத விஷயங்களும் சேர்த்து ஒளிபரப்பாகும்.
ஆனால், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 24*7 என லைவ் ஸ்ட்ரீமிங்காக நிகழ்ச்சிக்கு எந்த ஒரு தணிக்கையும் இல்லாமல், 24 மணிநேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி இதற்கு முன்பு இந்தியில் வந்திருந்தாலும் தமிழுக்கு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியாளர்கள் யார் யார்?
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இறுதி மேடையிலேயே பிக்பாஸ் அல்டிமேட் குறித்தான அறிவிப்பை நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளருமான கமல்ஹாசன் வெளியிட்டார். அப்போதே இந்த நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களே வருவார்கள் எனவும் சொல்லியிருந்தார். அதற்கேற்றாற்போலவே முதல் சீசனில் இருந்து ஆரம்பித்து, தற்போது முடிந்த ஐந்தாவது சீசன் வரையிலான போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி நேற்று தொடங்குவதற்கு முன்பே, சில போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டார்கள். அதன்படி, கவிஞரும் நடிகருமான சிநேகன், வனிதா, ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முன்னரே அறிவிக்கப்பட்டனர். இவர்கள் தவிர்த்து சுஜா வருணி, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலா, தாடி பாலாஜி, ஷாரிக், ஐந்தாவது சீசனில் இருந்து தாமரை செல்வி, நிரூப், சுருதி, அபிநய் என, மொத்தம் 15 போட்டியாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.
முதல் நாள் என்ன நடந்தது?

பட மூலாதாரம், insta@ vanithavijayakumar
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் அந்த சீசன் வீடு எப்படி இருக்கிறது என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் வீட்டுக்குள் சென்று சுற்றி காண்பிப்பார். பிக்பாஸ் அல்டிமேட்டிலும் அதேதான் நடந்தது. ஆனால், இந்த முறை கமல்ஹாசன் வீட்டிற்குள் செல்லவில்லை. மாறாக இருந்த இடத்தில் இருந்தே ட்ரோன் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி வாயிலாக வீட்டை பார்த்ததோடு பார்வையாளர்களுக்கும் சுற்றி காண்பித்தார்.
கடந்த ஐந்தாவது சீசனை போலவே பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலும் பிரகாசமான வண்ணங்கள் இருக்கும்படியாக பெரும்பாலும் சிவப்பு, கோல்டன் வண்ண தீமில் அமைத்திருந்தார்கள். ஐந்தாவது சீசனை குறிக்கும் வகையில், கடந்த முறை வீட்டின் முன்பு 5 என்ற எண் அமைத்தது போலவே இந்த முறை அல்டிமேட்டை குறிக்கும் வகையில் நட்சத்திரம் அமைத்திருந்தார்கள்.
மற்றபடி, சமையல் செய்யும் இடம் அதற்கு எதிராகவே சாப்பிடும் டைனிங் ஏரியா, ஆண் பெண் தனி படுக்கை அறை, இது தவிர்த்து தனியாக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஜெயில், இரண்டு பக்கமும் நுழைவுவாயில்கள் கொண்ட கழிவறைகள், புகைப்பிடிக்கும் ஏரியா, அல்டிமேட்டிலும் நீச்சல் குளம் இல்லை என பெரும்பாலும் முடிந்த ஐந்தாவது சீசனையே இந்த அல்டிமேட்டின் வீடும் பிரதிபலிக்கிறது. இதில் ஒரு டெலிபோன் பூத்தும் பார்க்க முடிந்தது.
முதல் நாளே ஆரம்பித்த சர்ச்சைகள்
போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்ற கமல்ஹாசன் முந்தைய சீசனில் அவர்கள் செய்த தவறுகள், வெற்றியை நழுவ விட்டதற்கான காரணம், இப்போது என்ன செய்ய இருக்கிறார்கள் என்பதை கேட்டு அறிந்து கொண்டார்.
நான்காவது சீசனில் உள்ளே சென்ற ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு செடி கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் உள்ளே இருக்கும் வரை பராமரிக்க வேண்டும். அது போல, இந்த சீசனில் உள்ளே நுழைந்த ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தேன், கீரை, மஞ்சள், உப்பு, நெய் என இயற்கை பொருட்களை கொடுத்து அதன் தன்மையையும் அதை போட்டியாளர்களோடு ஒப்பிட்டும் கொடுத்து அனுப்பியது சிறப்பாக இருந்தது.
மேலும் 24 மணிநேரமும் பார்க்க விரும்பாதவர்களுக்கு வழக்கமாக எடிட் செய்யப்பட்ட பகுதி தினமும் இரவு 9 மணிக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாகும் என்பதையும் கமல்ஹாசன் அறிவித்தார். போட்டியாளர்கள் அறிமுகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் பிக்பாஸ் அல்டிமேட் 24*7 தொடங்கும் என அறிவித்து நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விடைபெற்றார்.
வீட்டிற்குள்ளே நுழைந்ததுமே 'Restricted Area' என போடப்பட்டிருந்த இரண்டு படுக்கை அறைகள் உள்ள பகுதிக்கு சென்ற பாலா, 'உள்ளே போனா என்ன செய்வாங்க?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே போனார். இவர் கடந்த மூன்றாவது சீசனில் மைக் ஒழுங்காக மாட்டாமல் இருப்பது, சத்தமாக பேசுவது, தகாத வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பது என பிக்பாஸ் விதிமுறைகளை பல முறை மீறி இருக்கிறார். அல்டிமேட்டிலும் உள்ளே நுழைந்தவுடன் இது போன்ற விதிமீறல்களை மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார் பாலா.
அதேபோல, முன்பு தணிக்கை செய்யப்பட்டே பிக்பாஸ் ஒளிபரப்பு இருந்தது. ஆனால், அல்டிமேட்டில் அதுபோன்று இல்லை என்பதால் அபிநய், நிரூப், அபிராமி போன்றவர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் வாரத்தின் தலைவராக ஷாரிக் தேர்வாகி உள்ளார்.

பட மூலாதாரம், insta@ officialbalakrish
பொதுவாகவே பிக்பாஸ் சீசனில் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததுமே முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. ஆனால், தற்போது போட்டியாளர்கள் முதல் வாரத்திலேயே வெளியேற நினைக்கும் நபரை நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்திருக்கிறார். இதில் வனிதா, அனிதா, ஜூலி ஆகியோரது பெயர்கள் அதிகம் இடம் பெற்றிருக்கும்படியாக முன்னோட்ட காணொளி வெளியாகி இருக்கிறது.
தணிக்கை இல்லாமல் வெளியான புகைப்பிடிக்கும் காட்சிகள், முதல் நாள் நாமினேஷன், விளையாட்டின் சூட்சுமம் தெரிந்த பழைய போட்டியாளர்கள் என, பிக்பாஸ் அல்டிமேட் அதன் முதல் நாளே சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
- திப்பு சுல்தான் மதமாற்றம் செய்த கொடுங்கோலனா? விடுதலைக்கு போராடிய வீரனா?
- உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் இடங்கள், 20% வார்டுகள் கேட்கும் பாஜக - ஏற்குமா அ.தி.மு.க?
- சென்னை மாநகராட்சி அதிகாரியை தாக்கினாரா தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












