தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் சென்னை மாநகராட்சி அதிகாரியை தாக்கினாரா? மு.க.ஸ்டாலினிடம் என்ன பேசினார்?

பட மூலாதாரம், k p shankar facebook page
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சித் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
''சாலைகளைத் தரம் இல்லாமல் போடுவது தொடர்பாக கேள்வி எழுப்பினேன். நான் தாக்கியதாகப் புகார் கொடுத்துவிட்டார்கள். முதலமைச்சரிடமும் நடந்ததை விளக்கிக் கூறியுள்ளேன்,'' என்கிறார் கே.பி.சங்கர். என்ன நடந்தது?
தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், கடந்த 28ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், ''திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருவதால் திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்'' எனக் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம், கே.பி.சங்கரை கட்சி பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் எதையும் தி.மு.க தலைமைக் கழகம் தெரிவிக்கவில்லை.
இதன்பிறகு, திருவொற்றியூரில் சாலை போடும் பணியில் இருந்த அதிகாரிகளை கடந்த 27ஆம் தேதி கே.பி.சங்கர் தாக்கியதாகவும் இதன்பேரில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆளும்கட்சி எம்.எல்.ஏ மீதே புகார் மனு அளிக்கப்பட்டது, சென்னை தி.மு.கவினர் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது.
இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், ''திருவொற்றியூரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 13 லாரிகளில் ஜல்லிக்கலவை கொண்டு வரப்பட்டது. அங்குள்ள நடராஜன் கார்டனில் உள்ள மூன்று தெருக்களில் கடந்த 27ஆம் தேதி சாலை அமைக்கும் பணிகள் நடந்தன. அப்போது அந்த இடத்துக்குத் தனது ஆதரவாளர்களுடன் கே.பி.சங்கர் வந்துள்ளார். சாலைகளை தரமில்லாமல் போடுவதாகக் கூறி மாநகராட்சி பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். நாங்களும், விதிகளின்படி சாலை போடப்படுவதாகத் தெரிவித்தோம். இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி அதிகாரி ஒருவரை சங்கர் தாக்கினார்,'' என்கின்றனர்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ''சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது' 'எனப் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து கட்சிப் பொறுப்பில் இருந்தும் சங்கர் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களை கே.பி.சங்கர் விளக்கியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
``என்ன நடந்தது?'' என பிபிசி தமிழிடம் விவரித்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர், ``புதிதாக சாலைகளைப் போடும்போது ஆறு இன்ச் அளவுக்கு ஆழப்படுத்தாமல் மண் மீது ரோடு போட்டனர். அந்தப் பகுதியில் உள்ள பத்து சாலைகளையும் இவ்வாறுதான் போட்டுள்ளனர். அந்தப் பகுதி மக்கள் எனக்குப் போன் செய்து, `சாலைகளை தரமில்லாமல் போடுகிறார்கள், நீங்கள் கேட்க மாட்டீர்களா?' எனக் கேட்டனர். இதையடுத்துத்தான் அங்கு சென்றேன். அதனைச் சுத்தம் செய்து தரமாக சாலைகளைப் போடுமாறு கூறினேன். இதுதான் நடந்தது'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``சாலை அமைக்கும் பணியில் இருந்தவர்களிடம், ` கம்ப்ரஸர் வைத்து நன்றாக சுத்தம் செய்துவிட்டு ரோடு போடுங்கள். நீங்கள் போடுகின்ற சாலைகள் எல்லாம் ஐந்தாண்டுகளுக்கு வர வேண்டும். ஆனால், 5 நாள்கூட வராது போலிருக்கிறது' என்றேன். அவர்களோ, `ஆள்கள் இல்லை, கம்ப்ரஸரும் இல்லை. எது பேசுவது என்றாலும் மாவட்ட செயலாளரிடம் பேசிக் கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டு என்னை ஒருமையில் பேசத் தொடங்கிவிட்டனர். இதையே நான் தாக்கியதாக மாற்றிப் புகார் கொடுத்துவிட்டனர். இதற்குக் காரணம் மாவட்ட செயலாளர் சுதர்சனம்தான்'' என்கிறார் கே.பி.சங்கர்.

``முதலமைச்சரை நேரில் சந்தித்தீர்களே. என்ன பேசப்பட்டது?'' என்றோம். `` அவரை சந்தித்தபோது, ` நீ இவ்வாறு செய்தாயா?' எனக் கேட்டார். `தரமற்று சாலைகளைப் போடுவது பற்றித்தான் கேட்டேன். வேறு ஒன்றுமில்லை. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் கேட்கிறேன். இனி மக்களிடம் இருந்து எந்தப் புகார் வந்தாலும் சென்று பார்க்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன். இதுதொடர்பாக அந்தப் பகுதி மக்களும், மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு கொடுக்க உள்ளனர். அங்குள்ள 17 சாலைகளும் தரமற்றதாகத்தான் உள்ளன'' என்கிறார்.
``திருவொற்றியூரில் உங்கள் குடும்பத்தின் செல்வாக்கு என்ன என்பது மக்களுக்குத் தெரியும். அதிகாரிகள் எதிர்த்துப் பேசியதாகக் கூறுவதை ஏற்க முடியவில்லையே?'' என்றோம்.
`` என்னிடம் வம்புக்காக பேசினார்கள். சாலையை சுத்தம் செய்துவிட்டுப் போடுங்கள் எனக் கூறியதற்காக தவறாகப் பேசிவிட்டு என் மீது புகார் கூறிவிட்டார்கள். மாவட்ட செயலாளர் சுதர்சனம்தான் அனைத்துக்கும் காரணம். எனக்கு வாழ்க்கை கொடுத்தது தி.மு.கதான். சாகும் வரையில் இந்தக் கட்சியில்தான் இருப்போம். என்னுடைய வளர்ச்சி மாவட்ட செயலாளருக்குப் பிடிக்கவில்லை. நான் எங்கே பொறுப்புக்கு வந்துவிடுவேனோ என அவர் பயப்படுகிறார். அதன் காரணமாகவே இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்படுகிறது'' என்கிறார்.
கே.பி.சங்கரின் குற்றச்சாட்டு தொடர்பாக, சென்னை வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் எம்.எல்.ஏவுமான மாதவரம் சுதர்சனத்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` அவர் சொல்வதில் உண்மையில்லை. அவரைப் பற்றி நான் எந்தப் புகாரையும் கொடுக்கவில்லை. தலைமையிடம் தவறாகவும் சொல்லவில்லை. நாளிதழ்களைப் பார்த்துத்தான் அவரை நீக்கியதையே தெரிந்து கொண்டேன். நான் அவருடன் இணைந்துதான் கட்சிப் பணி செய்து வருகிறேன். அவர் மீது எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. அவருக்கும் அந்த மனவருத்தம் இருக்கக் கூடாது'' என்கிறார்.
பிற செய்திகள்:
- மிகப்பெரிய ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: இந்த மாதத்தில் 7வது சோதனை
- லாக்டவுன் காலத்தில் அறிவியல் சாதனை: 203 கடல்வாழ் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்த மாணவர்கள்
- அமெரிக்காவில் புரட்டி எடுக்கும் பனிப்பொழிவு: 'வெடிகுண்டு பனிப்புயல்' வரும் என எச்சரிக்கை
- பசுவின் முன்னால் சிறுநீர் கழித்ததாக இளைஞர் மீது தாக்குதல்
- காந்தியை எரித்த சாம்பல் அவர் விருப்பத்துக்கு மாறாக அமெரிக்க ஆன்மிக மையத்தில் இருக்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












