மது அருந்திவிட்டுக் காதலியின் தந்தையைக் கொலை செய்யச் சென்ற இளைஞர் - ஆள்மாறியதால் நடந்த விபரீதம்

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
சிலர் மிதமிஞ்சி மது அருந்தினால் தங்கள் வீட்டுக்குப் பதிலாக வேறு வீட்டுக்குள் நுழைந்துவிடக்கூடும்.
ஆனால், ஆத்திரமும் மதுவும் ஒருசேரக் கண்ணை மறைத்ததால், மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடு மாறி நுழைந்தது மட்டுமன்றி, கொலை செய்யத் திட்டமிட்டிருந்த ஆளுக்குப் பதிலாக வேறொருவரைக் கொலையும் செய்த விபரீதம் நடந்திருக்கிறது.
சம்பவத்தின் பின்னணி என்ன?
முத்தமிழ் மதுரையைச் சேர்ந்தவர். 19 வயதாகும் இவர் மதுரை கரிமேடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணோடு பழகி வந்திருக்கிறார்.
இதையறிந்த அந்தப் பெண்ணின் தந்தை முத்தமிழைப் பொதுவெளியில் வைத்துத் திட்டி, அடித்து அவமானப் படுத்தியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழ், அந்தப் பெண்ணின் தந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதற்காகத் தனக்குப் பரிச்சயமான 17 வயது சிறுவனையும் தன்னோடு இணைத்துக்கொண்டார்.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இருவரும் மது அருந்திவிட்டுத் தங்களது கொலைத் திட்டத்தை நிறைவேற்ற கரிமேடு பகுதியில் இருக்கும் அந்தப் பெண்ணின் வீடு இருந்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.
ஆனால் அதற்குப் பிறகு நடந்திருக்கும் மிகப்பெரிய தவறைப் பற்றி அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
சம்பவத்தன்று என்ன நடந்தது?
சம்பவம் நடந்த அக்டோபர் 24ஆம் தேதி, மதுரை மவட்டம் கரிமேடு யோகனந்தசுவாமி மடம் தெற்குத் தெருவில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டருகே சென்ற முத்தமிழ், தன்னுடன் துணைக்கு வந்திருந்த சிறுவனை அனுப்பி அந்த வீட்டின் கீழ்பகுதியில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து வரச் சொல்லியிருக்கிறார்.
அந்தச் சிறுவனும் அங்கு சென்று நோட்டம் விட்டு, அந்த வீட்டில் ஆள் இருப்பதை உறுதி செய்துள்ளார். ஆனால், அந்த வீடு, அவர்கள் தேடி வந்த வீடல்ல.

அதனுள் இருந்தது முத்தமிழ் விரும்பிய பெண்ணின் தந்தையுமல்ல. அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவரான, 65 வயதான பொங்குடி.
பொங்குடி, தனது மனைவி பாண்டியம்மாளுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். அவர்களது மகனும் மகளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்த நிலையில் வயதான கணவன் மனைவி, மட்டும் அந்த வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று பிற்பகல் பொங்குடியும் பாண்டியம்மாளும் வீட்டில் இருந்தபோது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த முத்தமிழ், தான் வைத்திருந்த அரிவாளால் பொங்குடியை, அவரது மனைவி பாண்டியம்மாளின் கண் முன்னே சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினர்.
என்ன நடந்தது எதற்காக நடந்தது என்றறியாத பாண்டியம்மாள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
ஆளை மாற்றிக் கொலை செய்தது அம்பலம்

கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கரிமேடு போலீசார், பொங்குடியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மதுரை ஹெச்.எம்.எஸ் காலணியைச் சேர்ந்த முத்தமிழ் (19), மற்றும் அவருடன் இருந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை செய்தபோது, கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை முத்தமிழ் காதலித்ததாகவும், அதையறிந்த அந்தப் பெண்ணின் தந்தை முத்தமிழைப் பொதுவெளியில் வைத்து அடித்து திட்டி கண்டித்ததாகவும் தெரிய வந்தது.

மேலும், அந்தப் பெண்ணின் தந்தையைக் கொலை செய்யச் சென்று, அவரது வீடு கீழே இருப்பதாக நினைத்து, வீட்டுக்குள் இருட்டாக இருந்ததால் ஆளை மாற்றிக் கொலை செய்ததாகவும் முத்தமிழ் ஒப்புக் கொண்டார் என போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
மேலும் முத்தமிழ் மது அருந்திவிட்டு, வீடு மாறிப்போய் வேறொருவரைக் கொலை செய்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
சிறையில் அடைப்பு
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, கொலை வழக்கு, 506 (ll) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறுவன் மதுரை சீர்திருத்த பள்ளியிலும் முத்தமிழ் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












