நாப்கின்களில் நச்சு ரசாயனங்கள் இருப்பதாக சொல்லும் ஆய்வு: மாற்று வழிகளும் நடைமுறை சிக்கல்களும்

நாப்கின்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
    • பதவி, பிபிசி தமிழ்

சில தினங்களுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த ‘டாக்ஸிக்ஸ் லிங்க்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் விற்கப்படும் சானிட்டரி நாப்கின்களில் தாலேட்ஸ் (phthalates), விஓசி (VOC) போன்ற ஆபத்தான ரசாயனங்கள் இருப்பதாக கூறப்பட்டது. அப்படியானால் நாப்கின்களுக்கு மாற்று என்ன?

ஆய்வு என்ன சொல்கிறது?

இந்த தாலேட்ஸ் என்பது ஒருவித பிளாஸ்டிக்; இது நாப்கின்களுக்கு அதிக வளைவுத் தன்மையை வழங்கவும் நீடித்து வருவதற்காகவும் சேர்க்கப்படுகிறது.

விஓசி என்பதை ஆங்கிலத்தில் ‘வோலடைல் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ்’ என்று சொல்வார்கள் அதாவது பல ரசாயனங்கள் இந்த வீஓசியின் கீழ் வரும். அந்த ரசாயனங்கள் பல்வேறு தீங்குகளை உருவாக்கக் கூடியவை.

இந்த விஓசி ரசாயனங்கள், வாசனை திரவியங்கள், பசை, பெயின்ட் போன்ற பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படும்.

அந்த ஆய்வில் இந்தியாவில் பிரபலமாக விற்கப்படும் 10 நாப்கின்கள் சோதிக்கப்பட்டது. அதில் ‘ஆர்கானிக்’ நாப்கின்கள் (ரசாயனங்கள் அல்லாத) என்று சொல்லக்கூடிய நாப்கின்களும் அடங்கும்.

இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட 10 வகையான நாப்கின்களில் வெவ்வேறு விதமான அளவில் தாலேட்ஸ், விஓசி இரண்டும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாலேட்ஸால் இதயத்தில் பாதிப்பு, நீரிழிவு, இனப்பெருக்க அமைப்பில் தாக்கம், சில வகையான புற்றுநோய்கள் போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. மேலும் விஓசி ரசாயனங்களால் மூளை குறைபாடு, ஆஸ்துமா, சில வகையான புற்றுநோய், குழந்தை பெறுவதில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த நாப்கின்கள் எளிதாக கிரகித்துக் கொள்ளகூடிய திசுக்கள் இருக்கும் பகுதியில் நீண்ட காலங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால் இதன் ஆபத்து குறித்து நாம் தீவிரமாகக் கருத வேண்டும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று என்ன?

சரி அப்படியானால் இதற்கான மாற்று என்ன? வெறும் பருத்தியால் ஆன நாப்கின்களை பயன்படுத்துவதால் நமக்கான ஆபத்து குறையுமா என்று கேட்டால் அதிலும் கவனம் தேவை என்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி.

“இந்த மாதிரி பருத்தி பேட்களை பொறுத்தவரை, பருத்தி பயிர்களில் பயன்படுத்தக் கூடிய பூச்சி மருந்தால் நமக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதேபோல அந்த பருத்தி நன்கு வெள்ளையாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அதைச் சுத்தம் செய்ய ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பெண்ணுறுப்பில் ‘ம்யூகஸ் மெம்ப்ரேன்’ (mucous membrane) என்று சொல்லக்கூடிய ஒரு மெல்லிய தோல் உண்டு, இந்த ரசாயனங்கள் அதன்மூலம் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளது. இதனால் புற்றுநோய் ஆபத்துகள் உள்ளன என்றும் நம்பப்படுகிறது,” என்கிறார் அவர்.

அதேநேரம் இந்த நாப்கின்களில் உடலுக்குக் கெடுதல் தரும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நாப்கின்களை பயன்படுத்தி புற்றுநோய் வந்ததாகப் பெரிதாக எந்த ஆய்வும் இதுவரை இல்லை என்கிறார் ஸ்பூர்த்தி.

இந்தியாவைப் பொறுத்தவரை நாப்கின்கள் மருத்துவ பொருட்கள் என்ற வகையின் கீழ் வருவதால் அவை எதனால் ஆனவை என்பதை பாக்கெட்டில் குறிப்பிடத் தேவையில்லை என டாக்ஸிக்ஸ் லிங்கின் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

மருத்துவர் ஸ்பூர்த்தி
படக்குறிப்பு, "மாதவிடாய் குறித்து இளம் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" - மருத்துவர் ஸ்பூர்த்தி

நாப்கின்களை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது?

நாப்கின்கள் குறித்து பல நாட்களாக பல்வேறு விதமாக விவாதிப்பட்டு வரும் நிலையில், அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை என்கிறார் யுனிசெஃபின் மாநில ஆலோசகர் சுஜாதா.

“நாப்கின்களை காலை வைத்துவிட்டு இரவு எடுப்பதனால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. எனவே அதை ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு மாற்றுகிறோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.

இதே கருத்தை வலியுறுத்தும் மருத்துவர் ஸ்பூர்த்தி சில நேரங்களில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் இதைவிடக் குறைந்த நேரத்தில் நாப்கின்களை மாற்றிவிட வேண்டும் என்கிறார்.

mentrual cup

பட மூலாதாரம், Getty Images

எது சிறந்தது?

“மென்ஸ்ட்ரல் கப்புகள் ஒப்பீட்டளவில் சிறந்ததாக உள்ளது. இந்த மென்ஸ்ட்ரல் கப்புகள் சிலிகானால் ஆனது. இந்த கப்புகளை நாம் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கும் ஏதுவானதாக இது உள்ளது. மூன்று சைஸ்களில் வரும் மென்ஸ்ட்ரல் கப்பை உள்ளே செலுத்தினால், ரத்தத்தை சேகரித்து கொள்ளும், அதன்பின் அதை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் நாப்கின்கள் பயன்படுத்திப் பழகிவிட்டது அதை விட முடியாது என்றால் ஜெல், பிளாஸ்டிக், உலர்தன்மை போன்ற நாப்கின்கள் இல்லாமல் சாதாரணமான பருத்தியால் ஆன பேட்களை பயன்படுத்துவது நல்லது,” என்கிறார் ஸ்பூர்த்தி.

“மென்ஸ்ட்ரல் கப் நல்ல மாற்றாக இருக்கும். ஆனால் அதுகுறித்து பல மனத்தடைகள் உள்ளன. அது நிரம்பியதும் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வெளியில் கொட்டிவிட்டு சுத்தம் செய்து மீண்டும் வைக்க வேண்டும். ஆனால் பொது கழிவறைகள் போன்ற இடங்களில் இந்த வசதி இல்லை. எனவே அதைப் பயன்படுத்துவதை மக்கள் சிரமமாக உணர்கின்றனர்,” என்கிறார் சுஜாதா.

மேலும் “நார், ஜூட் போன்ற மாற்று பொருட்களால் ஆன நாப்கின்களை பயன்படுத்தலாம் என்றாலும் அவை பரவலாக கிடைக்கப் பெறுவதில்லை” என்கிறார் சுஜாதா.

“மென்ஸ்ட்ரல் கப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு முன் பெண்களுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மென்ஸ்ட்ரல் கப்புகளை ஓரிரு முறை சரியாக வைக்க முடியாமல் போனாலும், போகப் போக அது அவ்வளவு கடினாக இருக்காது,” என்கிறார் ஸ்பூர்த்தி.

நாப்கின்கள்

பட மூலாதாரம், Getty Images

புதுமைகள் தேவை

பொதுவாக பெண்களின் சுகாதாரம் சார்ந்த பொருட்களில் அதிகமாக புதுமைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்கிறார் சுஜாதா.

“அழகு சாதனப் பொருட்களில் வந்த புதுமைகள் கூட அடிப்படைத் தேவைக்குரிய பொருளில் இல்லை. பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருட்களில் பொதுவாக புது முயற்சிகள் குறைவாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

கிட்டதட்ட 11 வயதிலிருந்து 50 வயது வரை அனைத்து பெண்களுக்கும் அவசியமான ஒரு பொருளாக இருந்தும் இதில் அதிக ஆராய்ச்சிகளோ அதற்கான நிதியையோ யாரும் முதலீடு செய்யவில்லை.

இப்போது சுற்றுச்சூழலை காரணம் காட்டி துணி பயன்படுத்த வேண்டும் என ஒரு சில குழுவினர் சொல்கின்றனர். ஆனால் இப்போதுதான் துணி பயன்படுத்துவது, அதைத் துவைப்பது, உலர்த்துவது போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட்டு பெண்கள் வெளியே வந்துள்ளனர்.

எனவே சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி நாப்கின்களை பயன்படுத்தாதே, மீண்டும் துணியைப் பயன்படுத்து என்று சொல்வது சரியானதாக இருக்காது. இதற்கு சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாற்று வழிகளில் முதலீடுகள் அதிகமாக செய்யப்பட வேண்டும்.

அதேபோல மூன்று நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை நாப்கின்களை மாற்ற வேண்டும் என்னும்போது பொருளாதார ரீதியாகவும் அது பெண்களைப் பாதிக்கிறது இது குறித்தும் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்கிறார் சுஜாதா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: