தாயின் பிறப்புறுப்பு திரவம் குழந்தையின் நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜேம்ஸ் ஹேலகர்
- பதவி, உடல்நலம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
நாம் இயற்கை முறையில் பிறக்கிறோமா அல்லது சிசேரியன் என்கிற அறுவை சிகிச்சை முறையில் பிறக்கிறோமா என்பதைப் பொறுத்து நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு தடுப்பூசிக்கு செயலாற்றும் திறனில் வேறுபாடு இருப்பதாக ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆய்வாளர்கள் கூட்டாக மேற்கொண்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இயற்கையாகப் பிறந்த குழந்தைகளுடைய உடலில் குழந்தைப் பருவத்தில் தடுப்பூசி செலுத்திய பிறகு உருவாகும் நோய் எதிர்ப்பான்கள் (ஆன்டிபாடி) இரண்டு மடங்கு இருந்தன.
நாம் பிறக்கும்போது நம்முடைய உடலோடு தொடர்புகொள்ளும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களே இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் நோயெதிர்ப்பு சக்தி இருந்தாலும் அவர்களுக்கு நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த ‘ப்ரோபயாட்டிக்’ எனப்படும் 'உணவில் எடுத்துக்கொள்ளப்படும் நுண்ணுயிரிகள்' அல்லது கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படலாம்.
பாதுகாப்பான கருப்பையிலிருந்து நுண்ணுயிரிகள் உங்களை மொய்த்திருக்கும் வாழ்வுக்குள் நுழையும் தருணமே பிறப்பு.
நம் உடலோடு தொடர்புகொள்ளும் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் நம் உடலிலேயே வாழத் தொடங்கும். முடிவில் அவற்றின் எண்ணிக்கை மனித செல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகிவிடும்.
ஒரு பெரிய உயிரியின் உடலைச் சூழ்ந்துள்ள நுண்ணுயிரிகளின் தொகுப்பு 'நுண்ணுயிரிக்குழுமல்' (microbiome) எனப்படுகிறது. நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை நம் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் பயிற்றுவிப்பது இதன் பணிகளில் ஒன்று.
இயற்கையான முறையில் தாயின் பிறப்புறுப்பு வழியாகப் பிறந்திருந்தால், நீங்கள் சந்திக்கும் முதல் நுண்ணுயிரி, அவர் பிறப்புறுப்பில் இருக்கும் நுண்ணுயிரியாக இருக்கும். அறுவை சிகிச்சையில் பிறக்கும்போது வேறு வழியில் நீங்கள் பிறப்பதால், மனிதர்களின் தோல் அல்லது மருத்துவமனைகளில் இருக்கும் நுண்ணுயிரியை எதிர்கொள்வீர்கள்.
இது தடுப்பூசிகளில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எடின்பரோ பல்கலைக்கழகம், நெதர்லாந்தில் உள்ள ஸ்பார்னே மருத்துவமனை மற்றும் உட்ரெக்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிய விரும்பினர்.
அவர்கள் புதிதாகப் பிறந்த 120 குழந்தைகள் முதல்முறை வெளியேற்றிய மலத்தில் இருக்கும் குடல் நுண்ணுயிரிகளை, அந்தக் குழந்தைகள் ஒரு வயதை அடையும் வரை கண்காணித்தனர்.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வு முடிவுகள், பிறப்புறுப்பு வழியாகப் பிறந்த குழந்தைகளில் பைஃபிடோபாக்டீரியம் மற்றும் நன்மை பயக்கும் எஸ்செரிச்சியா கோலை (இ.கோலை பாக்டீரியாக்களில் சில வகைகள் மட்டுமே அபாயகரமானவை) ஆகிய நுண்ணுயிரிகள் அதிகம் இருப்பதாகக் கூறுகின்றன.

இந்த நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், நியூமோகோகல், மெனிங்கோகோகல் தடுப்பூசிகளுக்குப் பதிலளிக்கும் வகையில் நோயெதிர் பொருட்களின் அளவை இருமடங்காக அதிகரிக்க வழிவகுப்பதாக அந்த முடிவுகள் கூறின. காசநோய், காய்ச்சல் போன்றவற்றுக்கான பிற தடுப்பூசிகளில் ஏற்கெனவே நுண்ணுயிரி குழுமத்தின் தாக்கம் இருந்துள்ளது.
"நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு இடையிலான ஆரம்பகட்ட தொடர்பு முக்கியமானது" என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழக குழந்தை மருத்துவத்துறை தலைவர் பேராசிரியர் டெபி போகார்ட்.
குடல் பாக்டீரியா நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் ரசாயனங்களை வெளியிடுகிறது. இவை இல்லையென்றால் நோயெதிர் பொருட்களை உருவாக்கும் பி-செல்கள் குறைந்த அளவில் காணப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருந்தன. பிற நோய்கள் இருந்த குழந்தைகள் அல்லது முழு பேறுகாலம் நிறைவடையும் முன்னரே பிறந்த குழந்தைகள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்படவில்லை.
குறிப்பிடத்தக்க வகையில் அனைத்து குழந்தைகளின் உடலிலும் தடுப்பூசிசெலுத்தப்பட்ட பிறகு நோயெதிர்ப்பு பொருட்கள் உருவாகின.
எனவே அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தைகள் பாதுகாப்பற்றவர்கள் என்று அர்த்தமில்லை. இருப்பினும், நோயெதிர்ப்பு அமைப்பு முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது என்பதால் மரபணு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குறைப் பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு என்ன செய்யலாம்?
தாய் அல்லது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக பெரும்பாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை பிரசவம் தேவைப்படுகிறது.
தாயின் பிறப்புறுப்பு திரவத்தை சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தையின் மீது பூசும் (vaginal seeding) முறை தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் ஒரு சமீபத்திய ஆய்வில், தாயின் குடல் பாக்டீரியாவை குழந்தைக்கு அளிக்கும் (Maternal Fecal Microbiota Transplantation ) முறையை முயன்று பார்த்தனர். இந்த இரண்டு முறைகளும் தொடர்பு கொள்ளாத நுண்ணுயிரிகளுடன் குழந்தைக்குத் தொடர்பு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
"அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தையைத் தொடர்பு கொள்ளாத நுண்ணுயிரிகளுடன் தொடர்பு கொள்ளச் செய்வது கொள்கையளவில் சிறந்தது. ஆனால் நடைமுறையில் இது மிகவும் சிக்கலானது. அதோடு அது ஆபத்தானதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்," என்கிறார் பேராசிரியர் போகார்ட்.

பட மூலாதாரம், Getty Images
அறுவை சிகிச்சை முறையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் குடல் பாக்டீரியாவை மாற்றும் முறை என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று அறிவியல் சோதனைகள் கூறுகின்றன.
அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தைகளுக்கு ப்ரோபயாட்டிக் வழங்குவதும் கூடுதல் தடுப்பூசி செலுத்துவதும் பாதுகாப்பான வழி என்று போகார்ட் நம்புகிறார்.
“நோயெதிர்ப்பு பொருட்களின் மேம்பட்ட செயல்பாடுகளுக்கு உடலிலுள்ள நுண்ணுயிரிகளின் அளவு நேரடிக் காரணமா என்பது உறுதியாகத் தெரியவில்லை” என்கிறார் ரோஸ்லின் இன்ஸ்டிடியூட் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழக நோயெதிர்ப்பு நிபுணர் பேராசிரியர் நீல் மபோட்.
ஆனால் இந்த ஆய்வு, குழந்தைகளுக்கு, குறிப்பாக அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கு, நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல், சில தடுப்பூசிகளுக்குச் செயலாற்றும் திறனை அதிகரித்தல், நோய்த்தொற்று பாதிப்பைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"குழந்தைகளில் தடுப்பூசிக்கு எதிர்வினையாற்ற பங்களிக்கும் காரணிகள் மற்றும் நுண்ணுயிரிகளின் பங்கைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு முக்கியமானது" என்கிறார் குவாட்ராம் இன்ஸ்டிடியூட் பயோ சயின்ஸின் புள்ளியியல் நிபுணர் ஜார்ஜ் சவ்வா.
இது ஒப்பீட்டளவில் சிறிய ஆய்வு என்று கூறும் ஜார்ஜ் சவ்வா, உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு மேலும் ஆராய்ச்சி தேவைப்படும் என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













