பாதுகாப்பான கருக்கலைப்பு என்றால் என்ன?

கருக்கலைப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"கருக்கலைப்பு என்பது ஒரு உயிரை கொல்வது, அவ்வாறு செய்யும் போது அதில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை யாரும் யோசிப்பதில்லை," என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மூன்றாவது முறையாகக் கருவுற்று அதைக் கலைக்க அண்மையில் மருந்தகம் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த போலி மருத்துவர் அவருக்கு கருக்கலைப்பு செய்வதாகக் கூறி மருத்துவம் செய்ததில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.

அதேபோன்று கள்ளக்குறிச்சியில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்த பெண்ணின் கருப்பையில் முறையாகக் கரு அகற்றப்படாமல் பிசுறுகள் இருந்தன. பின்னர் அதனைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும்போது அவர் உயிரிழந்துவிட்டார். பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்வதால் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

"இவ்வாறு ஏற்படுவதற்குக் காரணம் கருக்கலைப்பு பற்றிய புரிதல் இல்லாதது, அதனால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பின் விளைவுகள் குறித்து தெரிவதில்லை," என்று பெண் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் நித்யா பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.

கருக்கலைப்பு
படக்குறிப்பு, மகப்பேறு மருத்துவ நிபுணர் நித்யா

நிறைய பேர் மருத்துவர்களைக் கலந்தாய்வு செய்யாமல், மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவச்சீட்டு இல்லாமலே மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். அதன் மூலமாக நிறைய பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறுகிறார் அவர். கருக்கலைப்பு தொடர்பாக மகப்பேறு மருத்துவரின் பதில்கள் பின்வருமாறு:

கருக்கலைப்பு எப்போது செய்யலாம்?

கருக்கலைப்பு

பட மூலாதாரம், Getty Images

1. அரசு கொடுத்துள்ள வழிகாட்டுதலின் படி கருக்கலைப்பை 4 வாரங்களில் இருந்து 12 வாரங்களுக்குள் மட்டும் தான் செய்ய வேண்டும்.

2. மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பெற்ற பெண்கள், இருதய கோளாறு மற்றும் மனநல பாதிப்பு உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே இந்த 4 வாரங்களில் இருந்து 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம்.

3. 12 வாரங்களில் இருந்து 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றால் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரை செய்து அவர்களது அனுமதி கையெழுத்து பெற்ற பிறகே செய்ய முடியும். 

4. 20 வாரங்களைக் கடந்த பிறகு கருக்கலைப்பு செய்ய முற்பட்டால், இதற்கேற்ப அரசு ஒருசில மருத்துவமனைகளுக்குக் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. அந்த மருத்துவமனைகளில் மட்டுமே கலைப்பு செய்ய வேண்டும்.

கருக்கலைப்பால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

கருக்கலைப்பு

பட மூலாதாரம், Getty Images

”முதல் அல்லது இரண்டாம் குழந்தைக்குக் கருக்கலைப்பு செய்வது, அல்லது முதல் குழந்தைக்கு குறைபாடு உள்ளதால் இரண்டாவது குழந்தையை கருக்கலைப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் என மகப்பேறு மருத்துவராகப் பரிந்துரை செய்கிறோம்” என்கிறார் நித்யா.

அவ்வாறு செய்யும் போது கீழ்காணும் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நித்யா தெரிவித்தார்.

1. தாய்மாருக்கு கருப்பையில் கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகள் வரலாம். இவை உடனே ஏற்படாது. எடுத்துக்காட்டாக 25வயதில் கருக்கலைப்பு செய்தால் 35 வயதுக்குப் பிறகு வரும். ஆனால் இதனால் தான் வந்தது என்பதை அறியாமல் இருப்பார்கள்.

2. அடுத்த குழந்தை கருப்பையில் தங்குவதில் பிரச்னை ஏற்படலாம்.

3. கருக்கலைப்பு செய்வதால் கர்ப்பப்பை வாய் சுருங்கி அடுத்தாக பெற்றெடுக்கும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் உள்ளன.

4. ரத்தசோகை, ரத்தப்போக்கு ஏற்படலாம்.

மருத்துவக் கருவுறுதல் சட்டம் சொல்வது என்ன?

கருவுறுதல்

பட மூலாதாரம், Getty Images

கருக்கலைப்பு செய்வதற்காக 'மருத்துவக் கருவுறுதல் சட்டம்' (Medical Termination of Pregnancy) என்ற விதிமுறையை அரசு வகுத்துள்ளதாக மகப்பேறு மருத்துவர் நித்யா கூறுகிறார். அந்தச் சட்டம் என்ன சொல்கிறது?

1.மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை செய்யாத மருத்துவச்சீட்டு இன்றி கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. 

2.மகப்பேறு மருத்துவர்களிடம் மட்டுமே கருக்கலைப்பு செய்து கொள்ள வேண்டும். வேறு எந்த மருத்துவர்களிடம் செய்துகொள்ளக் கூடாது.

3.மகப்பேறு மருத்துவர்களும் இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றியே கருக்கலைப்பு செய்ய வேண்டும்.

4.கருக்கலைப்பு செய்ய ஒரு நோயாளி வருகிறார் என்றால், அவர்களுக்கு அதனால் ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் சிக்கல்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். 

6.அதன் பின்னரும் கருக்கலைப்பு செய்யவேண்டும் என்றால் அவர்களிடத்தில் ஒப்புகை கையெழுத்து, அவர்களுடைய அடையாள சான்றுகள் மற்றும் இதற்காக உள்ள பிரத்யேக படிவத்தை நிறைவு செய்து கையெழுத்து பெற வேண்டும்.

7.கருக்கலைப்பு செய்யும்போது மருத்துவமனையில் மட்டுமே செய்ய வேண்டும். 

8. கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்புவது, வீட்டிற்குச் சென்று மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்வது, பெண் உறுப்பில் மாத்திரை வைத்து வீட்டிற்கு அனுப்புவது என எதையும் மருத்துவர்கள் செய்யக்கூடாது.

9.மருத்துவமனை கண்காணிப்பில் மட்டுமே கருக்கலைப்பு நடத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் 12 வாரங்களுக்குள் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும்.

10. 12 வாரத்திலிருந்து 20 வாரங்களுக்குள் இருந்தால் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரை மற்றும் கண்காணிப்பின் கீழ் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும். 

11. 20 வாரங்களுக்குள் மேல் அல்லது 5 மாதத்திற்கு மேல் கருக்கலைப்பு செய்ய முற்பட்டால், கருவில் உள்ள குழந்தைக்கு எதாவது பாதிப்பு இருந்து அதைச் சரி செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய வேண்டும்.

12.ஒருவேளை குழந்தைக்குக் குறை இருந்து, அந்த குறையைப் பிரசவத்திற்கு பின்னர் சரிசெய்ய முடியும் என்றிருந்தால் கருக்கலைப்பு செய்யக்கூடாது. 

"மருத்துவமனை கண்காணிப்பில் கருக்கலைப்பு செய்ய சொல்வதற்கு காரணம், சம்பந்தப்பட்ட நபருக்குக் கருக்கலைப்பின் போது ரத்தப்போக்கு அதிகரித்தால் அதைச் சரி செய்ய முடியும். ரத்தப்போக்கு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க முடியும். 

அதுமட்டுமின்றி கருக்கலைப்பின் போது கரு முழுமையாக வெளியேறாமல் அதன் பிசுறுகள் கருப்பையில் இருந்தால் அதைச் சுத்தம் செய்து கண்காணிக்க முடியும்.

ஆனால் சிலர் இதைப் பொருட்படுத்தாமல் வெளியே சென்று போலி மருத்துவர்களிடம்(Quack) கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர். போலி மருத்துவர்களுக்குக் கருக்கலைப்பால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சிக்கல்கள் தெரியாது," என்கிறார் மகப்பேறு மருத்துவர் நித்யா.

போலி மருத்துவர்களால் ஏற்படும் பிரச்னைகள்

"போலி மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்காமல், எங்கே கரு உள்ளது என்பதைப் பார்க்காமல், அது எத்தனை வார கரு என்பதை அறியாமல் கருக்கலைப்பு செய்வதால் தான் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. 

கருக்கலைப்பு செய்யும் போது உறுதியாக ஸ்கேன் செய்யப்பட வேண்டும். அது எத்தனை நாள் கரு, கரு எப்படி இருக்கிறது, கருப்பையில் உள்ளதா அல்லது கருக்குழாயில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். 

ஆனால் கருக்கலைப்புக்கு ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்வார்கள் என்பதால் மருத்துவச் செலவுகள் மற்றும் நேரமின்மையைக் காரணம் காட்டி வெறும் மாத்திரையில் சுலபமாகக் கருக்கலைப்பு செய்துவிடலாம் என்று வெளியே மாத்திரைகள் வாங்கியும் அல்லது போலி மருத்துவர்களிடம் கருக்கலைப்பு செய்கிறார்கள். பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் போது தான் அது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது," என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.

”‌மருத்துவ காரணங்கள் ஏதாவது இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் அல்லது மூன்றாவது மற்றும் நான்காவது குழந்தைக்குக் கருக்கலைப்பு செய்யலாம். அவ்வாறு செய்யும் போது கண்டிப்பாகச் சம்பந்தப்பட்ட பெண் அல்லது அவரது கணவருக்கு குடும்பக் கட்டுப்பாடு, பெண் கருவுறாமல் தடுக்க காப்பர் டி (Copper-T) போட்டு அனுப்ப வேண்டும்," என்றும் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?

கருக்கலைப்பு
படக்குறிப்பு, வழக்குரைஞர் சுப்பிரமணியம்

"கருக்கலைப்பு மகப்பேறு மருத்துவரிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும், மற்ற பிரிவு மருத்துவர்களிடம் கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றம்," என்று கூறுகிறார் வழக்கறிஞர் சுப்பிரமணியம்.

"கருக்கலைப்பு செய்ய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் மட்டுமே செய்ய வேண்டும். அவ்வாறு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யும்போது, கருக்கலைப்புக்குத் தேவையான அனைத்து சாதனங்கள் இருக்க வேண்டும். 

மூன்று மாதங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது கொள்ள பரிந்துரைக்க முடியாது. ஒருவேளை கருவில் இருக்கும் குழந்தைக்கு வளர்ச்சி இல்லை, சரி செய்ய முடியாத குறைபாடுகள் இருந்தால் சிகிச்சை மூலமாக வெளியே எடுக்கலாம். 

மகப்பேறு மருத்துவராக இருந்தாலும், முறையாக கருக்கலைப்பு செய்வதற்கான மருத்துவ சான்று இல்லாமல் சிகிச்சை அளிக்கக்கூடாது," எனகிறார் வழக்கறிஞர் சுப்பிரமணியம்.

காணொளிக் குறிப்பு, தாய்மார்கள் உடலுக்கு உகந்த சீரா மீன்: என்ன காரணம்? எங்கே கிடைக்கிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: