நயன்தாரா, விக்னேஷ் சிவன் அறிவிப்புக்கு பிறகு விவாதம் ஆகும் வாடகை தாய் சட்டம் - விதிகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக நேற்று தங்களது சமூக ஊடக பக்கங்களில் அறிவித்தனர். தங்களின் குழந்தைகள் பிறந்தது தொடர்பாக இந்த தம்பதி எந்தவித அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வாடகைத் தாய் மூலம் தான் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டதாக சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருவது வாடகைத்தாய் சட்டம் தொடர்பான விவாதத்தைத் தூண்டியிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்றால் என்ன, அதற்கான சட்ட விதிமுறைகள் இந்தியாவில் எப்படியுள்ளன என்பது குறித்து இங்கு பார்ப்போம். வாடகை தாய்மை என்பது ஒரு நபர் சுயமாக கருத்தரிக்க முடியாத தம்பதிக்காக குழந்தையைச் சுமந்து பெற்றெடுத்து வழங்கும் ஓர் ஏற்பாடு.
கருப்பையில் குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து பெற்றுக் கொடுப்பார். அவர் வாடகைத் தாய் என்றழைக்கப்படுவார்.
இதில், வாடகைத் தாய் குழந்தையைச் சுமந்தாலும் அந்தக் குழந்தைக்கான முழுப் பொறுப்பும் பெற்றோரிடம் தான் இருக்கும். ஒரு பெண்ணின் கருப்பை குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருந்தால் அவருடைய கருமுட்டையையும் அவருடைய துணையின் விந்தணுவையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை வாடகைத் தாய் சுமப்பார். அப்படியில்லாமல், கருப்பை குழந்தையைச் சுமக்க முடியாமலும் கருமுட்டையின் ஆரோக்கியமும் கருவை உருவாக்கும் நிலையில் இல்லாமலும் இருந்தால், தானமாக வழங்கப்படும் கருமுட்டையைப் பயன்படுத்தியும் கரு உருவாக்கப்பட்டு வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
இதில், தந்தையின் விந்தணுவோடு தாயின் கருமுட்டை அல்லது தானமாகப் பெற்ற கருமுட்டை பயன்படுத்தப்படுவது, தானமளிப்பவரின் விந்தணு மற்றும் தானமளிப்பவரின் கருமுட்டை அல்லது தாயின் கருமுட்டை என்று பயன்படுத்தப்படும்.
"வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையில் தற்போது பல கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ளன. 2022ஆம் ஆண்டில் இருந்தே பெரியளவில் யாரும் இந்த முறையை நாடுவதில்லை," என்கிறார் மகப்பேறு மருத்துவர் உமையாள் முருகேசன்.
"சில பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியமாக இருக்காது. சில பெண்கள் கருப்பையே இல்லாமல் பிறந்திருப்பார்கள். சில நேரங்களில் கருப்பையில் கட்டி வந்து அகற்றப்பட்டிருக்கும். இப்படி ஏதோவொரு காரணத்தால் கருப்பை பயன்படாமல் போகும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணின் கருமுட்டை மற்றும் கணவரின் விந்தணுவை எடுத்து செயற்கை கருத்தரித்தலுக்கான முயற்சி மேற்கொள்ளப்படும். இல்லையேல், தானமாக வழங்கப்படும் கருமுட்டையைப் பயன்படுத்தியும் கரு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆனால், அந்தக் கருவைச் சுமப்பது மட்டும் வாடகைத் தாய் என்றழைக்கப்படும் வேறு பெண்ணாக இருப்பார். குழந்தையை பெற்றுக்கொள்ளப் போகும் தம்பதியுடைய மரபணுக்களை தான் குழந்தையும் கொண்டிருக்கும். அதைச் சுமந்து, பெற்றுக் கொடுப்பது மட்டும் வேறொருவராக இருப்பார்.
பெண்ணுக்கு கருமுட்டை முழுமையாக வளர்ச்சியடையாத, அல்லது கருமுட்டையே இல்லாத நிலையில் கருப்பை இருந்தால், வேறொருவர் தானமாக வழங்கும் கருமுட்டையை கணவரின் விந்தணுவோடு சேர்த்து குழந்தைக்கான கருவை உருவாக்கலாம். அப்படி உருவாக்கிய பிறகு அதே வாடகைத் தாய் முறையில் பெற்றெடுக்கப்படும்," என்கிறார் மருத்துவர் உமையாள்.


அதிகரிக்கும் குழந்தையின்மை பிரச்னை
இந்தியாவில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகப்பேறு உதவி தொழில்நுட்ப கட்டுப்பாடு சட்டம் 2021 (ART Regulation Act 2021), வாடகைத் தாய்மை கட்டுப்பாடு சட்டம் 2020 ஆகிய குழந்தைப் பேறு குறித்த இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்தியாவில் மகப்பேறு மருத்துவம் கடந்த 20 ஆண்டுகளில் மிகப் பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான இனிட்டோ மேற்கொண்ட ஓர் ஆய்வில், நாடு முழுவதும் 27.5 மில்லியன் மக்கள் மகப்பேறு சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுவதாகக் கூறுகிறது. இந்தியாவில் குழந்தையின்மையால் 3.9% முதல் 16.8% வரையிலான தம்பதிகள் அவதிப்படுவதாக உலக சுகாதார நிறுவன தரவுகள் குறிப்பிடுகின்றன.
குழந்தையின்மை பிரச்னை நாடு முழுக்க பெரிய சிக்கலாக உருவெடுத்த காரணத்தால் அதற்கான மருத்துவத் துறையிலும் அதன் வளர்ச்சி அதிகரித்தது. கடந்த பத்தாண்டுகளில், மகப்பேறு குறித்த நெறிமுறை அடிப்படையிலான சிக்கல்கள், குழந்தைகளின் காவல், வாடகைத் தாயின் ஆரோக்கியம் என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அதுகுறித்த கட்டுப்பாடுகள் அதிகரித்தன.

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பத்தில், 2005ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் இந்தத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கியது. 2021ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மகப்பேறு குறித்த சட்டங்கள், நாட்டில் இனப்பெருக்க உதவி தொழில்நுட்பம் மற்றும் வாடகைத் தாய் சேவைகளை யார் அணுகலாம், அணுக முடியாது, தம்பதி, வாடகைத் தாய், முட்டை தானம் செய்பவர் ஆகியோரின் நலன், சிகிச்சையை வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படும் என்று பல விஷயங்களைப் பேசுகின்றன.
வாடகைத் தாய்மை குறித்து சட்டம் என்ன சொல்கிறது?
மக்களவையில் 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதியன்று இதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, 2021ஆம் ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் 2022 ஜனவரி மாதம் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த சட்டம் வாடகைத் தாய்மை முறையை, சில கட்டுப்பாடுகளோடு வரையறுத்துள்ளது. ஒரு தம்பதிக்காக வாடகைத் தாயாக இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண், குழந்தை பிறந்த பிறகு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மகப்பேறின்மை பிரச்னை ஒரு தம்பதிக்கு இருந்தாலோ அல்லது அது தொடர்பான ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படுகிறது.
அதிலும் அவர்களுக்கு நெருங்கியவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். அப்படி வாடகைத் தாயாக இருக்க முன்வருபவர், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் பெற்றோராக விரும்பும் தம்பதிக்கு நெருக்கமான உறவினராகவும் இருக்க வேண்டும். இதை வணிக நோக்கோடு செய்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்படி குழந்தை பிறந்தவுடன், முற்றிலும் உயிரியல்ரீதியாக தம்பதியின் குழந்தையாகவே அது கருதப்படும்.
இந்த வாடகை தாய்மை ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சுகாதார அமைச்சகம் வாடகைத் தாய்மை குறித்த சில விதிகளை அறிவித்தது. அதன்படி, பெற்றோராக விரும்பும் தம்பதிகள் அவர்களுக்காக குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய்மார்களுக்கு மூன்றாண்டுகள் சுகாதார காப்பீடு வாங்க வேண்டும். இதற்கான முயற்சியை மேற்கொள்ளும்போது, வாடகைத் தாயாக முன்வந்த பெண்ணிடம் அதற்கான சிகிச்சை முயற்சிகளை மூன்று முறைக்கு மேல் செய்யக்கூடாது. மேலும், அந்த விதிகளின்படி கர்ப்பத்தில் ஏதேனும் மருத்துவ சிக்கல் ஏற்பட்டால் கருவை கலைப்பதற்கு அவர் அனுமதிக்கப்படுவார்.

பட மூலாதாரம், Getty Images
கருமுட்டை அல்லது விந்தணு தானம்
பதிவு செய்யப்பட்ட மகப்பேறுக்கு உதவும் தொழில்நுட்ப வங்கி, 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண்களின் விந்தணுவை உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு சேகரித்து, சேமிக்கலாம். 23 முதல் 35 வயது வரையுள்ள பெண்களின் முட்டைகளைச் சேமித்து வைக்கலாம்.
இந்த சட்டத்தின் கீழ், கருமுட்டையை தானமளிக்கும் பெண்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது இருக்க வேண்டும். ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அதுவும் ஏழு முட்டைகள் வரை மட்டுமே தானமளிக்க முடியும். ஆண் ஒருவரின் விந்தணுவை ஒன்றுக்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு வங்கி வழங்கக் கூடாது.
அத்தகைய நடைமுறைகளுக்கு தம்பதிகள், தானமளிப்பவர்கள் இருவரின் எழுத்துபூர்வ ஒப்புதல் தேவை. இந்த நடைமுறையை நாடும் தம்பதிகள், கருமுட்டையை தானமளிக்கும் பெண்களுக்கு இழப்பு, சேதம், மரணம் போன்றவற்றுக்கான காப்பீடு வழங்க வேண்டும்.
குழந்தைக்கான பாலினத்தைத் தேர்வு செய்து மகப்பேறுக்கு உதவுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால், அதற்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இந்த நடைமுறையில் பிறக்கும் குழந்தை, பெற்றோராக விரும்பி இந்த முறையில் பெற்றுக்கொண்ட தம்பதியின் உயிரியல் குழந்தையாகவே சட்டப்படி கருதப்படும். அதன்மூலம் கிடைக்கும் அனைத்து உரிமைகளும் குழந்தைக்கு உண்டு. தானமளிப்பவர் குழந்தை மீதான எந்த உரிமையையும் வைத்துக்கொள்ள முடியாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













