தமிழக அரசு பொது மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைவதில் தாமதம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
பல கடினமான நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பிற்கான சிகிச்சை மையங்கள் அமைக்கப்படாமல் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர் என்கிறார் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர் வெரோனிகா மேரி.
மதுரையை சேர்ந்த இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் கொண்டுவரப்பட வேண்டும் என உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதன்பின் அதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சில கேள்விகளை எழுப்பினார்.
ஆர்டிஐ தகவல்
அதில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைப்பதற்கு எத்தனை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது? எத்தனை அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது? என கேட்டிருந்தார்.
அதன்மூலம், “சென்னையில் 59, கோயமுத்தூரில் 14, மதுரையில் 11 மையங்கள் என்ற தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்டங்களில் மொத்தம் 155 தனியார் கருத்தரித்தல் மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 40க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் செயல்பட்டுவந்தாலும் ஓர் அரசு மருத்துவமனைகளில்கூட கருத்தரித்தல் மையம் வசதி ஏற்படுத்த வில்லை என தெரியவந்ததது,” என்கிறார் வெரோனிகா மேரி.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் கூட இதுவரை ஏன் இந்த சிகிச்சையை ஏற்படுத்தவில்லை என கேள்வி எழுப்புகிறார் வெரோனிகா மேரி?
முன்னதாக இந்த வழக்கு விசாரணை வந்தபோது சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வசதிகளை கொண்டு வருகிறோம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன் பிறகு மேல்முறையீடுகள் செய்தோம் என்கிறார்அவர் .
“ஒவ்வொரு முறை வழக்கு விசாரணை வரும்போதும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளை கொண்டுவர ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். தற்போது போதுமான நிதி இல்லை என அரசு தரப்பில் சொல்வார்கள். சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் பெரும் விவாதத்தை கிளப்பியது. அரசு ரீதியாக அந்த வசதியை பெற முடிந்தால் அம்மாதிரியான சிக்கல்கள் எழாது. அதேபோல பெரிதாக பணம் இல்லாத ஏழை மக்களுக்கும் அது சாத்தியமாகக்கூடிய சிகிச்சையாக இருக்கும்” என்கிறார் வெரோனிகா மேரி.

பட மூலாதாரம், Getty Images
அரசு மருத்துவமனைகளில் சாத்தியமா?
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சட்டமன்றத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர், ஐந்து கோடி ரூபாய் செலவில் எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ மையத்திலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஆனால் கருவுறுதலில் பிரச்னை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிரச்னையாகவும், அதற்கான சிகிச்சைகள் அதிக பணம் கொண்டதாக இருக்கும் பட்சத்திலும் கடந்த காலங்களை போல காலம் தாழ்த்தப்படாமல் உடனடியாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட வேண்டும் என்கிறார் வெரோனிகா மேரி.
“ஐவிஎஃப் என்பது செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை. சில அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவில் கருவுறும் தன்மையற்றவர்களுக்கான சில சிகிச்சைகளை வழங்குகிறார்கள் ஆனால் இந்த ஐவிஎஃப் என்பது அந்த சிகிச்சைகளின் கடைசி கட்டம்” என்கிறார் மகப்பேறு மருத்துவர் உமையாள்.
“ஐவிஎஃப் சிகிச்சை முறை அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை டெல்லியில் எய்ம்ஸில் உள்ளது. இதற்கு அதிக ஆட்கள் தேவை. அதேபோல மிக துல்லியமாக இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சரியான முடிவுகள் கிடைக்காது. நல்ல முறையில் ஐவிஎஃப் சிகிச்சை என்பதற்கு குறைந்தது 2 லட்சம் வரை தேவைப்படும்,” என விளக்குகிறார் மருத்துவர் உமையாள்.

பட மூலாதாரம், Getty Images
தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி (NFHS -5) கருத்தரித்தல் விகிதம் என்பது 2.2 லிருந்து 2.0 ஆக குறைந்துள்ளது. ஓரிரு குழந்தைகள் போதும் என்ற மனநிலை, அரசால் முன்னெடுக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் என பல்வேறு கோணங்களில் இதனை அணுக வேண்டும் என்றாலும் தற்போதைய வாழ்க்கைமுறை கருவுறுதலுக்கான தன்மையை பெரிதும் பாதிக்கிறது என்பது நிபுணர்களின் பொதுவான கருத்து.
அமைச்சர் பதில் என்ன?
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டாலும், அவை துரிதமாக மேற்கொள்ளப்பட தான் தொடர்ந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து யோசித்து வருவதாக சொல்கிறார் வெரோனிகா.
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்ரமணியத்திடம் கேட்டபோது, சென்னையில் ஒன்றும் திருச்சியில் ஒன்றும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர்,“தனியார் மருத்துவமனைகளில் என்ன அமைப்புகள் இருக்குமோ அதைவிட அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக அமைக்கப்படும். தனியார் மையங்களில் இதற்காக மக்கள் அதிக செலவு செய்யும் நிலை உள்ளது. எனவே மாதிரி நடவடிக்கையாக முதலில் மாநிலத்தின் இரண்டு இடங்களில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு பின் எதிர்காலத்தில் முடிந்தவரை மாவட்ட தலைமையகங்களில் நிறுவப்படும்,” என்கிறார்.
இந்தியாவில் வேறு எங்குள்ளது?
இந்தியாவை பொறுத்தவரை தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை கருத்தரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கு கருவுறுதலற்ற தன்மைக்கான பல்வேறு கட்ட சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












