பிசிஓடி ஹார்மோன் பிரச்னை வந்தால் கருவுற முடியாதா? மருத்துவர் ஜலதா ஹெலன் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடிகை ஸ்ருதிதாசன், தான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். அவரைப் போலவே பல பெண்கள் தாங்கள் பிசிஓடி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்த பிசிஓடி என்பது என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன ? இதற்கு என்ன தீர்வு என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் ஜலதா ஹெலன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
பிசிஓஎஸ் என்றால் என்ன?
பெண்களுக்கு கருப்பையின் இரு பக்கங்களிலும் ஓவரி என்று சொல்லக்கூடிய சினைப்பைகளில் சிறிய, சிறிய நீர்க்கட்டிகள் தோன்றுவது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது.
இது கருவுறும் வயதில் இருக்கக்கூடிய பல பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்னை.
PCOD ஓவரியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் Polycystic Ovarian disease என்பதை இப்போது Polycystic Ovarian Syndrome என்று அழைக்கிறார்கள். இது வாழ்வியல் முறை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்ணின் உடம்பில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு.
இன்சுலின் எதிர்ப்பால் உருவாகும் Polycystic Ovarian Syndrome ஐ Mild, Moderate, Severe என 3 கிரேடுகளாக மருத்துவர்கள் பிரிக்கிறார்கள்.
Mild எனும் கட்டத்தில் - மாதவிலக்கு தொடர்ந்து சரியாக வரும்.. இயல்பாக கருத்தரிப்பு நடக்கும்.. வேறு ஏதாவது பிரச்சனைக்கு ஸ்கேன் செய்யும் போது Polycystic Ovarian Syndrome இருப்பது தெரியும். இந்த நிலையில் ஹார்மோன் மாற்றங்கள் இருக்காது.
Moderate எனும் கட்டத்தில் 45 நாட்களுக்கு முறை மாதவிலக்கு வரும்.. ஹார்மோன் இம்பேலன்ஸ் 20 முதல் 30 சதவீதம் வரைக்கும் இருக்கும்.
Severe எனும் கட்டத்தில் 3 மாதம் ஆனாலும் மாதவிலக்கு வராது. ஹார்மோன் இம்பேலன்ஸ் 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கும். இப்படி பட்டவர்களுக்கு மாத்திரை போட்டால் மட்டுமே மாதவிலக்கு வரும்.
அதே போல பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் பிசிஓஎஸ் வரும் என்பதில்லை. ஒல்லியாக இருப்பவர்களுக்கும் THIN PCOS குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
PCOS ஆல் ஏற்படும் விளைவுகள் என்ன?
ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிலக்கு முடிந்த 14 முதல் 18 நாளில் கருமுட்டை வெளியே வரும். இது இயற்கை.
ஆனால் PCOS இருக்கும் போது Hyper Insulin பிரச்சனையும் ஏற்படும். நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு இன்சுலின் சுரப்பு சரியாக இருக்க வேண்டும். ஆனால் PCOS இருக்கும் போது Insulin, Estrogen , Androgen அதிக அளவில் சுரக்க தொடங்கும்.
ஆனால் FSH follicle-stimulating hormone / LH Luteinizing Hormone சுரப்பது மாறுபடும் போது முறையற்ற மாதவிலக்கு ஏற்படும்.

பட மூலாதாரம், Getty Images
சினைப்பை சுவர்கள் மிகவும் தடிமனாகி அதை சுற்றி சின்ன சின்ன Follicules அதாவது நீர்கட்டிகள் தோன்றுவதால் கருமுட்டைகள் வெளிவராது, இதனால் கர்ப்பம் அடைவதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதைத்தான் பிசிஓஎஸ் என்று அழைக்கிறோம்.
PCOS அறிகுறிகள் என்ன?
PCOS பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கு முறையற்றதாக இருக்கும். ஒரு பெண்ணிற்கு மாதவிலக்கு சுழற்சி 28 நாட்களுக்கு முறை இருக்க வேண்டும். சிலருக்கு ஒரு வாரம் கூடக் குறைய இருக்கலாம்.
ஆனால் பிசிஓஎஸ் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு 45 நாட்களுக்கு முறை, சிலருக்கு 60 நாட்களுக்கு ஒரு முறை, சிலருக்கு 3 மாதங்கள் வரை கூட மாதவிலக்கு வராமல் இருக்கலாம்.
ஆனால் சில பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு வந்துவிடும்.. சிலருக்கு மாதவிலக்கு வரும் போது உதிரப்போக்கு 10 நாள் முதல் 1 மாதம் வரை கூட நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
எடை அதிகரிப்பு,தேவையற்ற இடங்களில் அதிக அளவில் முடி வளர்தல், கழுத்தில் கருப்பு நிறம் படர்தல் , முகத்தில் அதிக அளவில் பருக்கள் இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
ஏன் PCOS வருகிறது?
இன்று கருவுறும் வயதில் உள்ள 5 பெண்களில் 2 பெண்களுக்கு PCOS பிரச்சனை இருக்கிறது. 18 வயதுகளில் உள்ள பெண்களை எடுத்துக் கொண்டால் 5 பேரில் ஒருவருக்கு இந்த பிரச்னை இருக்கிறது.
நம் உணவுமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்... அதாவது Balanced Diet ஆக உணவை எடுத்துக் கொள்ளாதது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தொடர்ச்சியாக carbonated Drinks அதிக அளவில் உட்கொள்வது, ஜங்க் உணவுகள் அதிகம் சாப்பிடுவது, உணவுக்கு ஏற்ற உடலுழைப்பு இல்லாதது பெரும்பான்மையான காரணங்களாக இருந்தாலும்
மரபணு காரணமாகவும் PCOS பாதிப்பு ஏற்படுகிறது.
இளம் வயதில் PCOS பாதிப்பு ஏற்பட்டால் 40 வயதிற்கு பிறகு டயாபடீஸ் 2 மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவர் ஜலதா ஹெலன் சொல்கிறார்.
PCOS இருந்தால் கருவுற முடியாதா? இதற்கு தீர்வு என்ன?
முதலில் நம்முடைய வாழ்க்கை மற்றும் உணவு முறைகளில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு தினமும் உற்பயிற்சிகளை செய்ய தொடங்க வேண்டும்.
யோகா, நடைபயிற்சி, போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும்
நல்ல உணவு முறையும் மருத்துவரின் சிகிச்சையும் இந்த பிரச்சனையை சரிசெய்து கருவுறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?
கர்ப்பப்பைக்கு வெளியேயும் சின்ன சின்ன எண்டோமெட்ரியல் தசைகள் உருவாவதை எண்டோமெட்ரியாயோசிஸ் என்று அழைக்கிறார்கள். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சினைப்பை, சாக்லேட் சிஸ்ட் ஆக ( Chocolate Cist) வளரும். இதனால் கருமுட்டைகள் உருவாவது அல்லது வெளியே வருவது தடுக்கப்பட்டு கருவுறுதல் நிகழாமல் இருக்கலாம்.
முதலில் ஸ்பாட் என்று சொல்லக்கூடிய சின்ன சின்ன துகள்கள் சினைப்பையில் சேரும்.. பின்னர் அது சிஸ்டாக உருவெடுக்கும்
இந்த பிரச்சனையால் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.
எண்டோமெட்ரியாசிஸ் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
இது தான் பிரத்யேக காரணம் என மருத்துவ உலகம் கண்டறிய வில்லை..சிலருக்கு மாதவிலக்கு நாட்களில் அடிவயிறு வலி இருக்கும். சிலருக்கு அறிகுறிகளே இருக்காது. கருவுறுதலில் ஏதாவது பிரச்சனை இருப்பின் லேப்ரோஸ்கோபி வழியாக பார்க்கும் போது தான் எண்டோமெட்ரியாசிஸ் இருப்பது தெரிய வரும்.

பட மூலாதாரம், Getty Images
அடிப்படையில் மாதவிலக்கு வரும் பொழுது வஜினா வழியாக ரத்தம் கீழ் நோக்கி வரும். ஆனால் இந்த பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு டியூப் வழியாக கருப்பை சுற்றி இருக்கும் சுவர் மற்றும் தசைகளில் ரத்தம் செல்லும்.
இதனால் சினைப்பையில் உருவாகும் கருமுட்டையின் தரம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்..
இதற்கு தீர்வு என்ன?
முதல் மற்றும் 2 ஆம் கட்ட நிலையில் இருப்பவர்களுக்கு மருந்துகள் மூலமே இதை சரிசெய்யலாம். 3 மற்றும் 4 ஆம் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.இந்த நீர்க்கட்டிகள் 5 சென்டீமீட்டருக்கு மேல் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அகற்ற முடியும்.
நம்முடைய ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து. அதனால் அளவான உணவு, நல்ல உறக்கம், தேவையான உடற்பயிற்சி மட்டுமே நம்மை பல விதான நோய்களில் இருந்து காப்பாற்றும் என்று கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெலதா ஹெலன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













