தமிழ்நாடு அரசியலில் உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சி இயல்பானதா?

பட மூலாதாரம், FACEBOOK / UDHAYANIDHI STALIN
- எழுதியவர், எம்.மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய அரசியலில் முக்கிய ஆளுமையாக இருந்த மு.கருணாநிதியின் பேரன், இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன், சட்டப்பேரவை உறுப்பினர், திமுகவின் இளைஞரணிச் செயலாளர், நடிகர், முக்கிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனத்தின் தலைவர், முரசொலி இதழின் ஆசிரியர் என பல முகங்களைக் கொண்டவராக தமிழ்நாட்டின் ஆட்சியில் முக்கியப் பங்கு வகிப்பவராக வளர்ச்சியடைந்து நிற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் அரசியல்வாதியான அவர், அரசியலுக்கு இணையாகவே திரைப்படத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.
அவரது அரசியல் இருப்பை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவுக்குள்ளேயே இருக்கிறது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ், திண்டுக்கல் ஐ.பெரியசாமி போன்ற அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் இது தொடர்பாக தீர்மானங்களை சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றினார்கள். இது தனக்கு ‘தர்மசங்கடத்தை’ உருவாக்குவதாக அப்போதே உதயநிதி ஓர் அறிக்கையின் மூலமாகக் கூறினார். ஆனால் அவர் அமைச்சராவது அல்லது ஆட்சியில் அவருக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படுவது என்பது இயற்கையாக நடக்கக்கூடியதாகவே இருப்பதாக அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் கூறுகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் “காத்திருக்கும் இளவரசர்” என்கிறார் பத்திரிகையாளர் மணி.
“திமுகவில் அதிகார மையத்தில் உதயநிதி அங்கம் வகிக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.
திமுக தலைவரின் மகன் என்பதால் அவருக்கு கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும் அரசியல் விமர்சகர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
“அடுத்த வாரிசு என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் முக்கியத்துவம் கிடைப்பது இயல்புதான்” என்கிறார் எஸ்.பி.லட்சுமணன்.
அதே நேரத்தில் வாரிசு அரசியல் என்று ஒரு கட்சி மற்றொரு கட்சியை நோக்கிக் குற்றம்சாட்ட முடியாத நிலையில்தான் இந்தியாவின் பெரும்பான்மையான கட்சிகள் இருக்கின்றன என்பதையும் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
“வாரிசுகள் அரசியலுக்கு வருவது இந்திய அரசியலின் அடிப்படைப் பண்பாகவே இருக்கிறது. இது அரசியலுக்கு நல்லதா கெட்டதா என்பதைத் தாண்டி, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது” என்கிறார் பத்திரிகையாளர் மணி.
வாரிசு என்ற விமர்சனத்தை சமாளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் ஏதேனும் செய்திருக்கிறாரா, ஒரே நேரத்தில் அரசியலிலும் திரைத்துறையிலும் அவரால் நீண்ட காலத்துக்கு இயங்க முடியுமா, முழுநேர அரசியலுக்கு வரும்போது அவருக்குச் சவாலாகவோ, தடையாகவே இருக்கக் கூடியவை என்னென்ன என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
கட்சியில் மு.க.ஸ்டாலினைவிட வேகமாக முன்னேறுகிறாரா உதயநிதி?
1960-களில் திமுக முதன் முதலாக அதிகாரத்துக்கு வந்த காலத்திலேயே அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் மு.க.ஸ்டாலின். அவர் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாகப் பதவியேற்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதன் பிறகே சட்டப் பேரவை உறுப்பினர், மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர், கட்சியின் தலைவர், முதலமைச்சர் என அவர் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு உயர்ந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்படியொரு நீண்ட காலக் காத்திருப்பு தேவைப்படவில்லை.
2018-ஆம் ஆண்டில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, அடுத்த ஆண்டிலேயே இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவை உறுப்பினராகிவிட்டார். தொடர்ந்து அமைச்சராக்க வேண்டும் என்ற பேச்சுகளும் இருக்கின்றன.

பட மூலாதாரம், UDHAYANIDHI STALIN FACEBOOK PAGE
“உதயநிதி ஸ்டாலினின் பாதை மு.க.ஸ்டாலின் கடந்த வந்த பாதையைப் போன்று கடினமானது இல்லை. அவரை தயார்படுத்துவதில் ஒரு அவசரம் தெரிகிறது” என்கிறார் மணி. “அரசியலில் அடுத்தடுத்த தலைமுறைகள் வரும்போது முன்னேற்றம் எளிதாக இருப்பது இயல்புதான்” என்கிறார் அவர்.
உதயநிதியை திமுகவினர் ஏற்றுக் கொண்டார்களா?
உதயநிதி மீது வாரிசு என்ற விமர்சனம் இருக்கிறது. ஆனால் அது படிப்படியாக பலவீனமாகிக் கொண்டிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத்தேர்தலின்போது மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்பதை, ஒற்றைச் செங்கலைக் காட்டி உதயநிதி விமர்சித்த விதம் பரவலாகக் கவனம் பெற்றது. இதுபோன்ற அணுகுமுறை மூலம் திமுகவுக்கு அவர் பலமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். “அவர் கட்சியில் திணிக்கப்படவில்லை” என்கிறார் எஸ்.பி.லட்சுமணன்.
அரசியலிலும் திரைத் திரையிலும் தீவிரமாக இயங்க முடியுமா?
2008-ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா நடித்த குருவி படத்தை தயாரித்ததன் மூலம் திரைத்துறைக்கு வந்தார் உதயநிதி. அடுத்த ஆண்டில் சூர்யா நடித்த ஆதவன் படத்தின் கடைசிக் காட்சியில் திரையில் முதன்முதலாகத் தோன்றினார். 2012-ஆம் ஆண்டில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இருந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
இப்போது தமிழ்த் திரையுலகின் முக்கியப் படங்களை வெளியிட்டு வருகிறது அவர் தலைமையில் இயங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம். பீஸ்ட், அண்ணாத்த, விக்ரம், திருச்சிற்றம்பலம், லவ் டுடே, சர்தார், வெந்து தணிந்தது காடு, டான், ராக்கெட்ரி போன்றவை அந்த நிறுவனத்தின் சமீபத்திய படங்களில் சில.

பட மூலாதாரம், FACEBOOK / UDHAYANIDHI STALIN
கட்சி மேடைகளில் அதிமுகவையும் பாரதிய ஜனதாவையும் கடுமையாக விமர்சிக்கும் உதயநிதி, திரைப்பட நிகழ்ச்சிகளில் வசூல் கணக்குகளை புள்ளி விவரங்களோடு பேசுகிறார். புதிதாகப் படங்களில் கதாநாயகனாக நடித்து வெளியிடவும் செய்கிறார்.
ஆனால் திரைத்துறையிலும் அரசியலிலும் உதயநிதி ஒரே நேரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதற்கு திமுகவிலேயே அதிருப்தி இருக்கிறது. “முழு நேர அரசியலுக்கு வர வேண்டும்” என்று அண்மையில் அமைச்சர் சேகர்பாபு உதயநிதி முன்னிலையிலேயே ஒரு மேடையில் கோரிக்கை வைத்தார்.
அரசியல் விமர்சகரான எஸ்.பி.லட்சுமணன் இதே அம்சத்தை வேறு விதமாகப் பார்க்கிறார். “[அரசியல்] எல்லையைத் தாண்டி சினிமாவுக்குள் அவர் ஆழமாக ஊடுருவுவது அவருக்கும் நல்லதல்ல. திமுகவுக்கும் நல்லதல்ல” என்கிறார் அவர்.
“2006 முதல் 2011 வரை திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் கடைசி மூன்று ஆண்டுகளில் திரைத்துறையை கருணாநிதியின் குடும்பம் கைப்பிடிக்குள் வைத்திருந்ததாக பூதாகரமாக விமர்சனம் எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது. அந்தத் தேர்தலில் ஆட்சியை இழப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது.” என்கிறார் எஸ்.பி.லட்சுமணன்.
உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் அடுத்த களம் தயாராகி வருவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். அதே நேரத்தில் அனைத்தும் இயல்பாக நடந்துவிடுவதற்கு ‘மூத்த தலைவர்கள்’ அனைவரும் எளிதாக விட்டுவிடமாட்டார்கள் என்றும், உதயநிதிக்கு கடினமான தருணங்கள் இருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













