திமுக உள்கட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளில் உள்கட்சித் தேர்தல்கள் முறைப்படி நடக்கின்றனவா?

Udhayanidhi Stalin

பட மூலாதாரம், Udhayanidhi Stalin facebook page

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்த தோல்விகளைத் தொடர்ந்து, அக்டோபர் 17ஆம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் அக்டோபர் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கட்சியில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24ஆம் தேதியன்று தொடங்கியது.

தமிழகத்திலும், திமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சித் தேர்தலை நடத்தி, அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. ஆனால், இந்திய அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் தேர்தல்கள், ஜனநாயக முறைப்படி தான் நடக்கின்றனவா?

ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்போது அங்கேயும் ஜனநாயகம் இல்லை என்கிறார் அரசியல் நோக்கரும் மூத்த பத்திரிகையாளருமான ராதாகிருஷ்ணன்.

"சமீபத்தில் சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் தேர்தல் கேரளாவில் நடந்தது. அதில், ஒரு குழுவினர் வயது வரம்பைக் கொண்டு வந்து எதிர்த்தரப்பைச் சேர்ந்தவரை மாநில கமிட்டியிலிருந்தே நீக்கினார்கள். இந்த வயது வரம்பு முறையை முதலில் கொண்டு வந்தது பாஜக.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

தலைவர் தேர்தல் நடந்ததா என கேட்பது போலத்தான் பாஜகவில் தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் திமுகவிலும் கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் (சிபிஐ)சலசலப்புகள் இருந்தன. திமுகவின் கிளைகளிலும் சிபிஐ போன்ற கட்சிகளின் உள்ளூர் கமிட்டிகளிலும் இருக்கக்கூடியவர்களிடையே நிச்சயமாக சலசலப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

அங்கு கட்சிக்காக உழைத்தவர்களும் இளைஞர்களும் மேலே வர நினைக்கிறார்கள். ஆனால், அனைத்துக் கட்சிகளிலும் இருப்பவர்களை அதே இடத்தில் வைப்பதைத்தான் முன்னிறுத்துகிறார்கள்," என்று கூறினார் ராதாகிருஷ்ணன்.

அதிமுக வாரிசு அரசியல் இல்லாத ஒரு கட்சியாக முன்னிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜானகி தலைமைக்கு வந்தார். அவருக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு நேரடி வாரிசாக இல்லாத ஜெயலலிதா நீண்டகாலம் கோலோச்சினார். அவருக்குப் பிறகு குடும்ப கட்சியாக இல்லாத அதிமுகவும் தற்போது தலைமை குறித்த சர்ச்சை மற்றும் மோதலால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த முடியாத நிலையில் உள்ளது.

"பொதுவாக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் நியமனங்களை வைத்துதான் தேர்ந்தெடுக்கின்றன. தலைமை வலுவாக இருக்கவேண்டும், அதற்கு எதிராக குரல் எழுப்பக் கூடாது என்ற அணுகுமுறையைக் கையாளுகிறார்கள். ஆனால், இன்றுள்ள காங்கிரஸில் தலைமைக்கு எதிராகவோ உட்கட்சி ஜனநாயகத்தையோ யாராவது பேசினாலே கட்சிக்கு முரணானவர்கள் என்று கட்டம் கட்டப்படுகிறார்கள். அதன் விளைவாகவே குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு வெளியேற நேர்ந்தது.

சோனியா காந்தி - ராகுல் காந்தி.

பட மூலாதாரம், ANI

பாஜகவிலும் நியமனம் மூலமாகத்தான் கொண்டுவரப்படுகிறார்கள். ஆகையால் இத்தகைய கட்சிகளிலிருந்து ஆட்சிக்கு வருபவர்களும் ஜனநாயகத்தை மதிப்பதில்லை. ஜனநாயகத் தன்மையில் கட்சியை சீர்செய்து கொண்டுவராததே அதற்குக் காரணம். கட்சிக்குள் ஜனநாயக முறை இல்லாதபோது, ஆட்சியிலும் அது பிரதிபலிக்கிறது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.

அதோடு, பெரிய கட்சிகளான, பாஜக, காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர் போன்ற கட்சிகள் மீது வைக்கப்படும் அதே விமர்சனத்தை நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் மீதும் வைக்கிறார் அவர். அங்கும் ஜனநாயக முறை என்பதே இல்லை என்கிறார் அய்யநாதன். மேலும், "அத்தகைய கட்சிகள் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் கட்டமைப்பை உருவாக்கவே அஞ்சுகின்றன," என்றும் கூறுகிறார்.

பாஜக-வுக்குள் வாரிசு அரசியல் இல்லையா?

மற்ற கட்சிகளில் குடும்ப அரசியல் இருப்பதாக விமர்சிக்கும் பாஜகவுக்குள்ளும் குடும்ப அரசியல் உள்ளதாகக் கூறும் அய்யநாதன், "அமித் ஷாவுடைய மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக உள்ளார். அவருக்கு அமித் ஷாவின் மகன் என்பதைத் தவிர வேறு என்ன தகுதி உள்ளது. பிரமோத் மகாஜனின் மகள் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இப்படியாக பாஜகவிலும் குடும்ப அரசியல் இருக்கவே செய்கிறது," என்று கூறினார்.

மேலும், "குடும்ப அரசியல் செய்வது பிடிக்காது என்று கூறும் பாஜக திமுகவோடு கூட்டணி வைக்கவில்லையா, அத்தகைய கட்சிகளிடமிருந்து ஆதரவை பெற்றுக் கொள்வதில்லையா!

குடும்ப அரசியலை விமர்சிப்பதெல்லாம், இப்போது திமுக, காங்கிரஸ் கட்சிகளைத் தாக்குவதற்காக வெறுமனே பயன்படுத்துகிறது," என்றவர், பாஜகவுக்குள் ஜனநாயகம் என்பதே கிடையாது என்றார்.

"ஜனநாயகம், கூட்டாட்சி போன்றவை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பிடிக்காத வார்த்தைகள். புதுச்சேரியில் ஊர்வலம் சென்றபோது தேசியக் கொடியையா ஏந்திச் சென்றார்கள், இல்லையே. அதற்கு என்ன அர்த்தம்?

அவர்களுடைய எண்ணங்கள், கொள்கைகள், அடிப்படையில் வேறு. அதேபோலத்தான் பாஜக. அவர்களிடம் ஜனநாயகம் என்பதெல்லாம் இல்லை. கட்டுப்படு, செயல்படு என்பது தான்," என்று கூறினார்.

சீமான்

பட மூலாதாரம், Twitter

தேர்தல் ஆணையத்தால் உட்கட்சித் தேர்தலை முறைப்படுத்த முடியுமா?

தேர்தல் ஆணையத்திற்கும் உட்கட்சித் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி.

"கட்சி தரப்பிலிருந்து ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறுவார்கள். ஏன் வாக்கெடுப்பு நடத்தவில்லை என்று கேட்டால், வேறு யாரும் போட்டியிடவில்லை ஒருவர் தான் போட்டியிட்டார் ஆகவே ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தோம் என்று கூறப்படும்.

முக்கால்வாசி கட்சிகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதில்லை. ஜனநாயக கட்சியாகச் செயல்பட்டாலும் உட்கட்சியைப் பொறுத்தவரை, இதுவொரு முரணாகவே இருந்து வருகிறது," என்று கூறுகிறார்.

தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு குறித்துப் பேசக்கூடிய 1989ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் பிரிவு 29 "அரசியல் கட்சி அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட பிறகு, அதன் பெயரிலோ, தலைமையகத்திலோ, தலைமையிலோ, முகவரியிலோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ மாற்றங்களைச் செய்தால், அதை தேர்தல் ஆணையத்திற்கு தாமதமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும்," என்று கூறுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாதம் 2011ஆம் ஆண்டு, உள்கட்சித் தேர்தல் விவரங்களை அனுப்புமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பியதாக 2014ஆம் ஆண்டு வெளியான இந்து நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது. அப்படிக் கிடைத்த தரவுகளில், தேர்தலின்போது கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பெயர் மற்றும் பதவிகள், அடுத்த தேர்தலுக்கான தேதி ஆகியவற்றை மட்டுமே கட்சிகள் வழங்கியிருந்தன.

ஜே.பி.நட்டா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜே.பி.நட்டா

தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்த அந்தத் தரவுகளில், என்ன மாதிரியான தேர்தல் முறை கடைபிடிக்கப்பட்டது, எப்படி வாக்குப்பதிவு நடந்தது, எந்தெந்த பதவிகளுக்கு எத்தனை பேர் போட்டியிட்டனர், போட்டியிட்ட பிரதிநிதிகள் யார் என்பன போன்ற தேர்தலின் தன்மை குறித்த விவரங்களை கட்சிகள் வழங்கவில்லை.

சமீபத்தில், ஆந்திர பிரதேசத்தை ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிரந்தரத் தலைவராக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை அறிவித்தது. ஆனால், ஒரு கட்சிக்கான 'நிரந்தர தலைவர்' என்ற யோசனையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அத்தகைய நடவடிக்கை அடிப்படையிலேயே ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தேர்தல் ஆணையம் கூறியது.

ஜனநாயக முறைப்படி உட்தேர்தல் நடத்தினால் கட்சிகளுக்குத்தான் நல்லது

"கட்சியின் விதிமுறை போன்றவற்றில் தேர்தல் ஆணையம் கருத்து சொல்வதை, ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறமுடியும். தேர்தல் ஆணையம் அத்தகைய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது. ஆனால் கருத்து சொல்ல முடியும். அதைப் பொறுத்து கட்சியிலும் சில மாற்றங்களைச் செய்துகொள்வார்கள்.

இருப்பினும் வாழ்நாள் தலைவர் என்பதற்கு பதிலாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் வாழ்நாள் முழுக்கச் செய்துவிடலாமே! திமுகவிலும் அதைப் போலவே, வாழ்நாள் முழுவதும் ஒரே குடும்பம் தானே தலைமை வகிக்கிறது. பொதுத் தேர்தல் மட்டுமின்றி, உட்கட்சித் தேர்தலும் கூட ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டியது முக்கியம் தான். ஆனால், அதை கட்சிகள் நினைக்க வேண்டும்," என்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி.

திமுக

பட மூலாதாரம், DMK

இந்திய அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்தவொரு தனிநபரும் வாழ்நாள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது ஜனநாயக முறையில்லை என்பதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயகம் குறித்த வலியுறுத்தல் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல், ஜனநாயக முறைப்படி கட்சிகள் செயலாற்ற வேண்டும் என்பதற்காக உட்கட்சித் தேர்தல் நடத்துமாறு கூறப்படுகிறது. இருப்பினும் அத்தகைய தேர்தலே ஜனநாயக முறைப்படி நடப்பதில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

"இந்தியாவை பொறுத்தவரை, பாஜக போன்ற கட்சிகள் நரேந்திர மோதியைப் போன்ற சில தலைவர்களைத் தாண்டி வேறு யாரையும் முன்னிலைப்படுத்தாமல் இருக்கின்றன. அல்லது ஜெகன், கேசிஆர் போன்றவர்கள் வழிநடத்தும் குடும்பக் கட்சிகள் இருக்கின்றன. ஜனநாயகப்படி உட்கட்சித் தேர்தலை நடத்தினால் அது கட்சிகளுக்குத்தான் நன்மை பயக்கும்," என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.

Banner
காணொளிக் குறிப்பு, வலதுசாரி Vs இடதுசாரி: பிரேசிலின் அடுத்த அதிபர் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: