பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை எஸ்.டி.பி.ஐ. அரசியல் கட்சியைப் பாதிக்குமா? எதிர்காலம் என்ன?

எஸ்டிபிஐ பேரணி
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் உள்பட எட்டு அமைப்புகளை இந்திய அரசு தடைசெய்துள்ளது. ஆனால், அதனுடன் நெருக்கமாக இருந்த அரசியல் கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி தடைசெய்யப்படவில்லை. இனி அக்கட்சியின் எதிர்காலம் என்ன?

பிஎஃப்ஐ-யும் அதன் துணை அமைப்புகளும் ஐந்து ஆண்டுகளுக்குத் தடைசெய்யப்பட்ட நிலையில், எஸ்டிபிஐ எனப்படும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சிக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. பிஎஃப்ஐயின் அரசியல் முகமாக எஸ்டிபிஐ பொதுவாக கூறப்பட்டாலும், அதிகாரபூர்வமாக, இரு அமைப்புகளுமே தங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்றே கூறிவருகின்றன.

பிஎஃப்ஐ மீதான தடைகளை எஸ்டிபிஐயின் தேசியத் தலைவர் எம்.கே. ஃபைசி கண்டித்திருக்கிறார் இருந்தபோதும் தங்களுக்கும் பிஎஃப்ஐக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தாங்கள் தன்னிச்சையான, சுதந்திரமான கட்சி என்றும் எல்லா சமூகங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சியில் உண்டு என்றும் அந்தக் கட்சியின் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.

பிஎஃப்ஐயின் அனைத்து பிரிவுகளையும் தடை செய்த இந்திய உள்துறை அமைச்சகம் இந்தக் கட்சியைத் தடைசெய்யதாதற்கு பல்வேறு காரணங்கள் யூகிக்கப்படுகின்றன. பல மாநிலங்களில் அந்தக் கட்சி அரசியல் ரீதியாகத் தீவிரமாகச் செயல்படுவது, சட்டவிரோதமான செயல்பாடுகளில் அக்கட்சி ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாதது இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Presentational grey line
Presentational grey line

எஸ்டிபிஐ 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்டது. "இஸ்லாமியர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள் உள்ளிட்ட அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சியை முன்னிறுத்துவதே" இந்தக் கட்சியின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. தேர்தல் ஆணையத்திலும் இந்தக் கட்சி பதிவுசெய்யப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

தற்போதைய சூழலில் அந்தக் கட்சி, அரசியல் ரீதியாக மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவருவதும் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வருவதுமே தடையிலிருந்து அக்கட்சியைத் தப்பவைத்திருப்பதாகச் சொல்லலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கட்சி துவங்கப்பட்டதிலிருந்தே, இந்தக் கட்சி தேர்தல் அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கிறது.

2009ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தக் கட்சி, 2011ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஐந்து இடங்களில் போட்டியிட்டு மொத்தமாக 19,034 வாக்குகளைப் பெற்றது. புதுச்சேரியில் 3 இடங்களில் போட்டியிட்டது.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி, ராமநாதபுரம், வடசென்னை ஆகிய தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றபோதிலும் அந்தக் கூட்டணி அமையவில்லை. இதனால், 32 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது எஸ்டிபிஐ.

SDPI rally

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.கவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்த எஸ்.டி.பி.ஐ. மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிட்டது. 2021லும் அதே கூட்டணியில் இடம்பெற்ற அக்கட்சி, 6 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்தப் போட்டிகளில் எதிலுமே, எஸ்டிபிஐ கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், சில சமயங்களில் பிற கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்திருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்களில் பரவலாகப் போட்டியிட்ட இக்கட்சி, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் 4 பஞ்சாயத்துத் தலைவர், 9 பஞ்சாயத்துத் துணைத் தலைவர், 3 ஒன்றியக் கவுன்சிலர், ஒரு ஒன்றிய சேர்மன், 160 உறுப்பினர்களையும் பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு மாநகராட்சி கவுன்சிலர், 8 நகராட்சி கவுன்சிலர், 25 பேரூராட்சி கவுன்சிலர் இடங்களைப் பிடித்தது.

தமிழ்நாடு தவிர, கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மொத்தமாக சுமார் 800 உள்ளாட்சி இடங்களை வைத்திருப்பதாக இக்கட்சி சொல்கிறது.

Presentational grey line
Presentational grey line

இனி வரவிருக்கும் எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிடப்போவதாக இந்தக் கட்சி தெரிவிக்கிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 50 இடங்களில் போட்டியிடப் போவதாக இக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதும் பிஎஃப்ஐ மீதான இந்தத் தடை என்பது எந்த விதத்தில் எஸ்டிபிஐ பாதிக்கும்?

"பிஎஃப்ஐக்கும் எஸ்டிபிஐக்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற இயக்கங்களோடு, எம்மாதிரி தோழமை அணுகுமுறையோடு இருக்கிறோமோ அதே போன்ற தோழமை அணுகுமுறையோடுதான் பிஎஃப்ஐயோடு இருந்தோம். மற்றபடி அந்த அமைப்புக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

இரண்டு அமைப்புகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஒன்று பிஎஃப்ஐ சொல்ல வேண்டும். அல்லது எஸ்டிபிஐ சொல்ல வேண்டும். அப்படி யாரும் சொல்லாதபோது, தொடர்பிருப்பதாகச் சொல்வது தவறு. ஆகவே பிஎஃப்ஐ மீதான தடையால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. அது எங்களைப் பாதிக்காது" என்கிறார் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவரான முபாரக்.

முபாரக்
படக்குறிப்பு, முபாரக்

''பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை'' என்பது முழக்கமாக வைத்து, அடிமைப்படுத்த சமூகங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டுமென்பதற்காகவே எஸ்டிபிஐ துவங்கப்பட்டது என்றும் இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதாகவும் நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளைச் சரியாக அடையாளம் காட்டிவருவதாகவும் அதே பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்லவிருப்பதாகவும் சொல்கிறார் முபாரக்.

ஆனால், பிஎஃப்ஐயுடன் இணைத்துப் பார்க்கப்படுவதாலேயே, இந்தத் தடைக்குப் பிறகு பிற கட்சிகள் போராட்டங்களில் இணைத்துக்கொள்ளவோ, கூட்டணி அமைக்கவோ தயங்காதா? "கூட்டணி என்றால் எஸ்டிபிஐயின் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் அமையும். அந்த வகையில் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. எந்தக் கட்சியும் தயங்குமென நாங்கள் கருதவில்லை. இப்படி ஒரு தடையை ஏற்படுத்தியவர்கள் வேண்டுமானால், அப்படிக் கருதலாம். ஆனால், அது நடக்கப்போவதில்லை. நாங்கள் ஜனநாயக வழியில் தொடர்ந்து செயல்படுவோம்" என்கிறார் முபாரக்.

காணொளிக் குறிப்பு, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை அரசு தடை செய்தது ஏன்?

ஆனால், மிதவாத இஸ்லாமியர்களும் பிற இஸ்லாமிய கட்சிகளும் பிஎஃப்ஐயையும் எஸ்டிபிஐயும் எப்படி பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் எளிதானதாக இல்லை. குறிப்பாக, கேரளாவில் முஸ்லிம் லீகின் நிர்வாகிகள் இந்தத் தடையை வரவேற்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் பிற இஸ்லாமியக் கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் இந்தத் தடை குறித்துப் பேசவில்லை. ஆனால், அப்படிச் சொல்ல முடியாது என்கிறார் முபாரக்.

"தேசிய அளவில் மாயாவதி போன்றவர்கள் இந்தத் தடையை எதிர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சியும் அந்தந்த மாநிலத்தில் இருக்கும் நிலைமை, அரசியல் சூழலுக்கு ஏற்ப கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்தை முஸ்லிம் லீகின் தேசியத் தலைமையோ, மாநிலத் தலைமையோ தெரிவிக்கவில்லை. ஒரு நிர்வாகிதான் தெரிவித்திருக்கிறார். இங்கே, மனித நேய மக்கள் கட்சி என்ஐஏவின் செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆகவே, இங்கே ஆதரவில்லை என்று சொல்வது தவறு" என்கிறார் அவர்.

பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை எஸ்.டி.பி.ஐ. கட்சியைப் பாதிக்குமா?

மேலும், தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தபோது, பிஎஃப்ஐக்கு தடை விதித்ததால், பல அமைப்புகள் போராடலாம் என்று சொல்லியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

ஆனால், பிஎஃப்ஐ அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டபோதும் அதைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டபோதும் பிற இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளிடம் தென்பட்ட மௌனம் கவனிக்கத்தக்கதாகவே இருந்தது. பிற அமைப்புகள், கட்சிகள் குரல் கொடுத்த அளவுக்கு இந்த இஸ்லாமிய கட்சிகளிடமிருந்து ஆதரவுக் குரல் வரவில்லை.

"தீவிரமான போக்குடையவர்களாகக் காட்டிக்கொண்டு, யார் அதிக இளைஞர்களை ஈர்ப்பது என்பதில் கடந்த சில தசாப்தங்களில் தோன்றிய இஸ்லாமிய அமைப்புகளிடம் போட்டியிருக்கிறது. ஆனால், தேர்தல் களத்தில் பார்க்கும்போது இப்படித் தீவிரப் போக்குடைய கட்சிகளுக்கு அதிக ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. 2016 தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தடை போன்ற நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் வரும் காலத்தில் எஸ்டிபிஐ தன்னை எம்மாதிரி முன்னிறுத்திக் கொள்கிறது என்பதை வைத்தே அதன் எதிர்காலம் அமையும்" என்கிறார் இஸ்லாமிய அரசியலை நீண்ட காலமாக கவனித்துவரும் பெயர் சொல்ல விரும்பாத விமர்சகர் ஒருவர்.

SDPI rally

இந்த விவகாரங்களால் அந்தக் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது என்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நிஜாமுதீன். "எப்போதுமே ஓர் இயக்கத்தை ஒடுக்கும்போது, அவர்கள் அதைக் காட்டியே உணர்வுரீதியாக மக்களை அணுகுவார்கள். அதற்குப் பலன் இருக்கும்" என்கிறார் அவர்.

மேலும், சோதனை, தடை போன்றவற்றின்போது பிற இஸ்லாமிய இயக்கங்கள் தள்ளி நின்றன என்ற கூற்றையும் அவர் மறுக்கிறார். "இஸ்லாமிய இயக்கங்கள் மற்றம் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அதனைக் கண்டித்தது. பிஎஃப்ஐயை தடை செய்ததால், எஸ்டிபிஐயை அணுகத் தயங்குவார்கள் என்பதும் சரியல்ல. அப்படியிருந்தால் பல கட்சிகள், பிஎஃப்ஐ மீதான தடையைக் கண்டித்திருக்க மாட்டார்கள்" என்கிறார் நிஜாமுதீன்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது வரவிருக்கும் கர்நாடக மாநிலத் தேர்தல், எஸ்டிபிஐ கட்சியின் எதிர்காலம் குறித்து பல செய்திகளைச் சொல்லக்கூடும்.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, முதன்முறையாக விண்வெளியில் உள்ள கருந்துளையின் ஒலியைப் பதிவு செய்துள்ள நாசா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: