ரெப்போ ரேட் என்றால் என்ன? பணவீக்க விகிதம் இந்தியாவில் குறையுமா? - விலைவாசி உயர்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விக்னேஷ். அ
- பதவி, பிபிசி தமிழ்
நீங்கள் வழக்கமாக செய்திகளைப் படிப்பவர் அல்லது பார்ப்பவராக இருந்தால் சமீப மாதங்களில் அடிக்கடி 'ரெப்போ வட்டி விகிதம்' என்ற பதத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன, அதற்கும் விலைவாசி உயர்வுக்கும் என்ன தொடர்பு, உங்கள் வாழ்க்கைச் செலவுகளில் அது என்ன தாக்கம் செலுத்தும் என்று பார்க்கலாம்.
இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆறு மாதங்களில் நான்கு முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை உண்மையாகவே பணவீக்கத்தைக் குறைத்து, விலைவாசி உயர்வைக் குறைந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?
ஒரு நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டில் இருக்கும் வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி விகிதம்தான் ரெப்போ வட்டி விகிதம்.
இதுவே வணிக வங்கிகள் மத்திய வங்கிக்கு செலுத்தும் கடனுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 'ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம்' எனப்படுகிறது.


ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் பணவீக்கம் கட்டுப்படும் என்பது ஒரு பொருளியல் கோட்பாடு. அதாவது ரெப்போ வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவதை இயன்ற அளவுக்குக் குறைக்கும். இதனால் வங்கிகள் வசம் இருக்கும் பணம் குறையும்.
பொது மக்களின் கைகளுக்கு பணம் வருவதற்கான ஆதாரமாக இருக்கும் வங்கிகளிடம் பணம் குறைந்தால், மக்கள் செலவு செய்வதற்கான பணம் அவர்களிடம் அதிகம் இருக்காது. இதனால் நுகோர்வோரான பொது மக்கள் எந்தவொரு பொருளையோ சேவையையோ பெற அதிகம் செலவு செய்ய முன்வர மாட்டார்கள்.
இதனால் அவற்றின் விலை குறைந்து பணவீக்கம் கட்டுப்படும் என்பதுதான் அந்தக் கோட்பாடு.
இதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கிக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும் என்பதால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டியை உயர்த்தும் என்பதால் அந்த கடன்களை வாங்கியர்வர்களும் கூடுதலான பணத்தை வட்டியாகக் கட்டவேண்டியிருக்கும்.
விலைவாசியைக் குறைக்க எடுக்கப்படும் இந்த நடவடிக்கை பொது மக்களில் ஒரு சாராருக்கு, அதாவது மேற்கண்ட கடன்களை வாங்கியவர்களுக்கு, சுமையைக் கூட்டவும் வல்லது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை சாமானியர்களுக்கு பலன் கொடுத்ததா?

பட மூலாதாரம், Getty Images
நடப்பு 2022-23ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நான்கு முறை ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
4% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் மே 2022-இல் 4.40 % ஆக உயர்த்தப்பட்டது; பின்னர் ஜூன் மாதம் 4.90% ஆகவும், ஆகஸ்டில் 5.40% ஆகவும், கடைசியாக இந்த செப்டெம்பர் 30-ஆம் தேதி 5.9% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஆறு மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 1.9% உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்பட்டுள்ளதா என்றால் அதற்கு பதில் ஆம், இல்லை ஆகிய இரண்டும்தான்.

ஏனென்றால், ஏப்ரல் மாதத்தில் 7.79% ஆக இருந்த சில்லறை பணவீக்க விகிதம், மே மாதத்தில் 7.04% ஆகக் குறைந்தது. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் 7.01% மற்றும் 6.71% ஆகவும் குறைந்தது. பின்னர் ஆகஸ்டில் மீண்டும் 7% ஆக உயர்ந்தது என்று இந்திய அரசின் தரவுகள் காட்டுகின்றன. அதாவது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட காலத்தில், சில மாதங்களில் விலைவாசி குறைந்துள்ளது.
மே முதல் ஜூலை வரை மூன்று மாதங்கள் தொடர்ந்து சில்லறை பணவீக்கம் குறைந்தாலும், இந்தியர்களின் பர்சை பதம் பார்க்கும் விதத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே சில்லறை பணவீக்க விகிதம் ரிசர்வ் வங்கி வைத்துள்ள இலக்கைவிட (4-6%) அதிகமாகவே உள்ளது. சில மாதங்களில் முந்தைய மாதங்களைவிட விலைவாசி குறைந்திருந்தாலும், நாட்டுக்கு உகந்த பணவீக்க விகிதத்தை விட அந்த அளவு அதிகமாகவே இருந்துள்ளது.
விலைவாசியைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தவறிவிட்டதா?
இந்தியாவில் சில்லறை பணவீக்க விகிதம் நான்கு சதவிகிதமாக இருக்க வேண்டும்; அந்த அளவில் இருந்து அதிகபட்சமாக 2% மீறலாம், அதாவது 6 % வரை செல்லலாம் என்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. ஆனால், ஜனவரி 2022 முதலே இந்தியாவில் சில்லறை பணவீக்க விகிதம் 6 சதவிகிதத்தைவிட அதிகமாகவே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் அது குறையாமல் இருப்பது ஏன் என்று சென்னையில் உள்ள பொருளாதாரப் பேராசிரியர் கே. ஜோதி சிவஞானம் கேட்கிறார்.
''சந்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆரம்ப ஆண்டுகளில் ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைத்துக் கொண்டே போனார்; அதனால் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே போனது. பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக ரெப்போ விகிதம் குறைக்கப்படுவதாகக் காரணம் கூறப்பட்டது.''
''இந்திய நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்பட்டாலும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட வேண்டிய முக்கியப் பொறுப்பு நிதி அமைச்சகத்துக்குத்தான் உள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கியப் பணி ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகக் கூறியது. இப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு பணவீக்கம் சென்று விட்டது,'' என்கிறார் ஜோதி சிவஞானம்.
செப்டெம்பர் 30ஆம் தேதி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கொரோனா பெருந்தொற்று, யுக்ரேனில் நடக்கும் சண்டை ஆகிய 'இரண்டு பெரிய அதிர்ச்சிகளை' கடந்த இரண்டரை ஆண்டுகளில் உலகம் சந்தித்தது. வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் பின்பற்றும் தீவிரமான பணவியல் கொள்கை நடவடிக்கைகள் போன்ற மூன்றாவது அதிர்ச்சிக்கு நடுவே நாம் இப்போது இருக்கிறோம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.


''பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி அமலாக்கம் என ஏற்கனவே தாமாக உருவாக்கிக் கொண்ட அதிர்ச்சியில் நாம் இருக்கிறோம்," என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
விலைவாசி இப்போது குறையுமா குறையாதா?
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி நாட்டில் நிலவும் பணப்புழக்கம், பணவீக்கம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதா, குறைப்பதா, மாற்றம் எதுவும் செய்யாமல் விடுவதா என்று முடிவு செய்யும்.
ஒருவேளை விலைவாசி நிலவரம் மோசமானால் சென்ற ஆகஸ்டு மாதம் கூடியதைப் போல, முந்தைய கூட்டம் நடந்து இரண்டு மாதம் ஆவதற்கு முன்பே கூடி விவாதித்து முடிவெடுக்கும்.
பணவீக்க விகிதத்தில் 4% எனும் இலக்கை ஏன் தொடர்ந்து எட்ட முடியாமல் போகிறது, அந்த இலக்கை அடையும் சாத்தியம் எப்போது வரும் என்பது குறித்து விளக்கும் கடிதம் ஒன்றை ரிசர்வ் வங்கி இந்திய அரசுக்கு எழுதவுள்ளது. அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பணவியல் கொள்கைக் குழு கூடி முடிவெடுக்கும்.

அக்கடிதத்தின் விவரங்களை பொதுவில் வெளியிட முடியாது என்று சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். பணவீக்கத்தைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் 4% எனும் இலக்கை அடைவோம் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர் மேற்கண்ட செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அப்படியானால், பணவீக்கம் உடனடியாக மட்டுப்பட வாய்ப்பில்லை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை.
விலைவாசி உயர்வை சமாளிப்பது எப்படி?
ஜூலை மாதம் 6.75% ஆக இருந்த உணவுப் பொருள் பணவீக்கம் ஆகஸ்டில் 7.62% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சில்லறைப் பணவீக்கம் நுகர்வோர் விலை குறியீட்டின் (Consumer Price Index) அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் பொருட்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களின் பங்கு மட்டுமே 45.86%.
எதிர்வரும் மாதங்களில், நுகர்வோர் விலைக் குறியீட்டைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் எரிபொருள், மின்சாரம், உடை உள்ளிட்டவற்றுக்கான விலை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்து, உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும் சில்லறைப் பணவீக்க விகிதம் உணவுப் பொருட்களின் பணவீக்கத்தைவிட குறைவாகவே இருக்கும்.
எளிமையாகச் சொல்வதானால், பணவீக்க விகிதத்தை விட உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகமாக இருக்கும் என்பதால், நீங்கள் சாப்பிட கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
மறுபுறமோ நீங்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கும் அதிகமான வட்டி கட்ட வேண்டியிருக்கும்.
உயரும் விலைவாசியை சமாளிக்க நீங்கள் என்ன செய்யலாம் என்று பிபிசி தமிழின் இந்தக் கட்டுரையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














