பிஎஃப்ஐ: என்ன அமைப்பு? அதை ஏன் இந்திய அரசு தடை செய்தது?

பட மூலாதாரம், Getty Images
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செப்டம்பர் 22ம் தேதி ஒரே நாளில் சோதனை நடத்தியது.
இதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

இந்தச் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவித்தன.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.


என்ஐஏ வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நாளில் என்ஐஏ, இந்திய அமலாக்கத்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையினர், மாநில காவல்துறையினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் இன்று காலை பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட துணை அமைப்புகள்
பிஎஃப்ஐ அமைப்பின் துணை அமைப்புகளான, ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அனைந்திய இமாம் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனிசேஷன்ஸ், நேஷனல் வுமன்'ஸ் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், ரஹப் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

'பிஎஃப்ஐ அமைப்புக்கு பயங்கரவாத தொடர்பு' இந்திய அரசு கூறியது என்ன?
- இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது வெளியில் பிஎஃப்ஐ ஒரு சமூக பொருளாதார கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தீவிரப்படுத்தும் ரகசிய திட்டத்துடன் செயல்பட்டு ஜனநாயகத்தை குலைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதன்மூலம் அவர்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு அவமரியாதை செய்கின்றனர்.
- பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பாதுகாப்பை குலைக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் தீவிரவாதத்தை ஆதரித்து அமைதியை குலைக்கும் முயற்சியாக இது உள்ளது.
- பிஎஃப்ஐ அமைப்பின் நிறுவனர்கள் சிலர் சிமி அமைப்பின் தலைவர்களாக உள்ளனர். அதேபோல அவர்களுக்கு வங்கதேசத்திலிருந்து செயல்படும் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புள்ளது. இவை இரண்டுமே தடை செய்யப்பட்ட அமைப்புகள்.
- பிஎஃப்ஐ அமைப்பினருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று கூறும்படியான சம்பவங்களும் உள்ளன.
- பிஎஃப்ஐ உறுப்பினர்கள் பல பயங்கரவாத செயல்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடந்த கொலைகள் உள்ளிட்ட கொலை செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
- பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த சிலர் இராக் மற்றும் சிரியாவின் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஃஎப்ஐ என்பது என்ன?
கேரளாவில் இயங்கி வந்த தேசிய வளர்ச்சி முன்னணி(என்.டி.எஃப்), தமிழ்நாட்டின் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவைச் சேர்ந்த ஃபோரம் ஃபார் டிக்னிட்டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 2007-ஆம் ஆண்டுபாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவாக்கப்பட்டது.
வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு குற்றங்களில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு பேராசிரியரை தலையை அறுத்து படுகொலை செய்தது, தமிழ்நாட்டில் ராமலிங்கம் படுகொலை உள்ளிட்டவை இந்த அமைப்பின் மீது கூறப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு பணம் வரும் வழிகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
பிஎஃப்ஐ சர்ச்சைக்குள்ளானது ஏன்?
பிஎஃப்ஐ தனது வலைத்தளத்தில், "அனைவரும் சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பு பெறும்படியான ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும்" என்பதே தங்களின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், PFI
தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்கள் தங்களின் உரிமையை பெறும்படியாக பொருளாதார கொள்கைகளில் மாற்றங்கள் தேவை எனவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
இருப்பினும் இந்த அமைப்பின் மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.
"தேசத் துரோகம், சமூகத்தில் பல்வேறு பிரிவினருக்கு இடையே பகையை உண்டாக்குதல், இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுதல்" போன்ற குற்றச்சாட்டுகளை அரசு முன் வைத்துள்ளது.
கேரள சம்பவம்
2010ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது பிஎஃப்ஐ குறித்து அதிகம் பேசப்பட்டது.
தேர்வு ஒன்றில் முகமது நபி குறித்து அவதூறான கேள்விகளை கேட்டதாக பல முஸ்லிம் அமைப்புகள் அந்த பேராசிரியர் மீது குற்றம் சுமத்தியபின் அந்த தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதல் வழக்கில் பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும் குற்றவாளிக்கும் தங்களின் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே பிஎஃப்ஐ அமைப்பு காட்டிக் கொண்டது.
சமீபத்தில் ஜூன் மாதம் ராஜஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரின் தலையை வெட்டி கொலை செய்த குற்றத்திலும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்புப் படுத்தப்பட்டனர்.
இந்தியாவை இஸ்லாமிய நாடு ஆக்குவதாக...
சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது குறித்து பேசும் ஆவணம் ஒன்றை இந்த அமைப்பு பரப்பி வருவதாக பிகார் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் 'இந்தியா 2047: டுவார்ட்ஸ் ரூல் ஆஃப் இஸ்லாமிக் இந்தியா' (இஸ்லாமிய இந்தியாவை நோக்கி) என்ற அந்த ஆவணம் பொய்யானது என பிஎஃப்ஐ தெரிவித்தது.
பிஎஃப்ஐ மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு அதற்கு சிமி அமைப்புடன் தொடர்பு உள்ளது என்பதுதான். இந்த அமைப்பு 2001ஆம் ஆண்டு இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. அதேபோல மற்றொரு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடனும் பிஎஃப்ஐ-க்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கூறுகிறது.
பிஎஃப்ஐ மற்றும் அதன் ஆரம்பக் கட்ட உருவாக்கமான என்டிஎஃப் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் கோயா, பிபிசியுடனான தனது உரையாடலில் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். அவர் என்டிஎஃப் - ஐ 1993ஆம் ஆண்டு தொடங்கியதாகவும், சிமியுடனான தனது உறவு 1981ஆம் ஆண்டே முறிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதேபோல பல்வேறு அரசியல் வன்முறைகளுடனும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2018ஆம் ஆண்டு கேரளாவின் எர்ணாகுளத்தில், இடதுசாரி மாணவ கூட்டமைப்பான எஸ்எஃப்ஐ அமைப்பின் தலைவரை கொன்றதாக பிஎஃப் ஐ உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பிஎஃப்ஐ அமைப்பு எத்தனை புகழ்பெற்றது?
பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர்களின் பேச்சுகள் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும். அது பல நேரங்களில் உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையில் இருக்கும்.
இந்த அமைப்பிற்கு பெரும் ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டாலும், அரசியல் ரீதியான வெற்றி ஏதும் இதற்குக் கிடைத்ததில்லை. இதன் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான எஸ்டிபிஐ கட்சி கேரளாவில் உள்ளூர் தேர்தல்களில் பங்கேற்றுள்ள. சில வெற்றிகளையும் பெற்றுள்ளது ஆனால் நாடாளுமன்ற அளவில் பெரிய வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.
"பிஎஃப்ஐ, இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பு என்று சொல்ல இயலாது. கேரளா மற்றும் பிற தென் மாநிலங்களில் மட்டுமே அது வலுவாக இருந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இப்படி ஒரு அரசியல் கட்சி இருப்பதே தெரியாது" என்கிறார் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அடில் மெஹ்டி.
இந்த வருட தொடக்கத்தில் கர்நாடாகவில் உள்ள ஒரு பள்ளியில் ஹிஜாபிற்கு தடை விதிக்கப்பட்டபோது, பிஎஃப்ஐ, வன்முறையை தூண்டுவதாக கர்நாடக அரசு தெரிவித்தது. பிஎஃப்ஐ-ன் மகளிர் மற்றும் மாணவப் பிரிவான கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் நேஷனல் வுமன்'ஸ் பிரண்ட் ஆகிய அமைப்பை சேர்ந்த பெண்கள் அதிகளவில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
பாஜகவுடன் தொடர்புடைய இந்து குழுக்கள் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் என தெரிவித்து வந்தன. ஒரு முறை கேரள உயர் நீதிமன்றம், இந்த அமைப்பை "தீவிரவாத அமைப்பு"என்று தெரிவித்திருந்தது.
இருப்பினும் எந்த ஒரு பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை என பிஎஃப் ஐ மறுகிறது. அதேபோல பயங்கரவாத குற்றச்சாட்டுகள், ரைய்டுகள், கைதுகள் ஆகியவை நீதிமன்றங்களில் வெற்றிப் பெறுவதில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'பணிகளை நிறுத்துகிறோம்'
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தடை செய்யப்பட்ட 'நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனிசேஷன்ஸ்' என்ற அமைப்பு இந்த தடையை தொடர்ந்து நாட்டில் தங்களின் பணிகளை நிறுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளது.
மேலும், "அமைப்பின் மனித உரிமை செயல்பாடுகளுக்கான பதிலடி இது. நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனிசேஷன்ஸ் தனது பணியை கண்டு பெருமை கொள்கிறது. தடையை தொடர்ந்து பணிகள் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் வலம் வரும் எந்த பதிவுகளுக்கும் நாங்கள் பொறுப்பில்லை. அதில் நாங்கள் ஈடுபடவும் இல்லை.
இந்த அநீதிக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை தொடங்குவோம்." என நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனிசேஷன்ஸ் அமைப்பின் பேராசிரியர் மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூடுதல் போலிஸ் பாதுகாப்பு

பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடையை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 2000 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்கள் பாம்பன் பாலம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கியமான இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், எந்த அமைப்புகளும் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, சாலை மறியலோ நடத்த அனுமதி கிடையாது என்றும் அவ்வாறு யாராவது செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல நெல்லையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மேலப்பாளையத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவிலில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் உத்தரவின் பெயரில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிளான இடலாக்குடி மற்றும் இளங்கடை ஆகிய பகுதியில் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள பாஜக பிரமுகர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள PFI - SDBI அலுவலகங்கள் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். உக்கடம் பேருந்து நிலையம், டவுன்ஹால் உட்பட நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில்
உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக மத்திய அரசை கண்டத்து ஆர்ப்பாட்டம் நடத்த PFI - SDBI அமைப்பினை சேர்ந்த பெண்கள் திரண்டனர். PFI - SDBI அமைப்புகளை சேர்ந்த இஸ்லாமிய பெண்களை, ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் எச்சரித்தனர்.
அமைப்பு தடைசெய்யப்பட்டு இருக்கும் நிலையில் போராட்டம் நடத்தினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறி போராட்டத்திற்கு வந்த பெண்களை போலீசார் எச்சரித்தனர். அப்பொழுது அவர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய படி தெற்கு உக்கடம் பகுதியில் சிறது தூரம் ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல் துறை சமரசப்படுத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைத்து சென்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












