சிவகங்கையில் அம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திய கிறித்துவர்கள் - டாப் 5 செய்திகள்

சிவகங்கையில் அம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு செய்த கிறித்துவர்கள் - டாப் 5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (14/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கிறித்துவர்கள் அதிகம் வாழ்கின்ற சிவகங்கையின் மாதாபுரம் என்ற கிராமத்தில் கிறித்துவர்கள் நிதி திரட்டி அங்குள்ள இந்து கோவில் ஒன்றுக்கு குடமுழுக்கு நிகழ்வை நடத்தியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இளையங்குடி ஒன்றியத்தின் கரைக்குளம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் 50 கிறித்துவ குடும்பங்களும் நான்கு இந்து குடும்பங்களும் உள்ளன. பல ஆண்டுகளாகவே, அறுவடைக்கு முன்பு ஊர் குளத்தின் நடுவே அமைந்திருக்கும் மாணிக்கவள்ளி அம்மனை தரிசிப்பதை கிராம மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக அந்தக் கோவிலில் புனரமைப்பு பணிகள் ஏதும் செய்யப்படாத காரணத்தால் கோவிலின் வெளிப்புறம் சிதிலமடையத் துவங்கியது. தொடர்ச்சியாக கிராம மக்கள் வழிபாடு நடத்தினாலும் பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை. இதைக் கவனித்த கிறித்துவ மக்கள் நிதி திரட்டி கோவிலில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்," என்று அந்தச் செய்தி கூறுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மேலும், "ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் குடமுழுக்கு விழாவுக்கு நாள் குறித்த பொதுமக்கள் நிதி திரட்டி கோவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அதோடு, கொட்டும் மழையில் குடமுழுக்கு விழாவையும் மார்ச் 13ஆம் தேதி நடத்தியுள்ளனர். குடமுழுக்கு விழா முடிந்தவுடன் ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது," என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி முறைகேடு என அமலாக்கத்துறை அறிக்கை

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த வாரம் மார்ச் 6ஆம் தேதி முதல் 3 நாள்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின," என்று தினமணி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தச் சோதனையில் பார் உரிமங்கள் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தி கூறுகிறது.

அது மட்டுமின்றி, "மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் உயரதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடித் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.

எஸ்என்ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள், தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், எந்த அரசு கணக்கிலும் சேராமல் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்தது அமலாக்கத்துறையின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது," என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், டாஸ்மாக் முறைகேடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாஸ்மாக் முறைகேடு (கோப்புப் படம்)

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யத் தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நேற்று தடை விதித்து தீர்ப்பளித்துள்ளதாகவும், இது தொடர்பான தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார், கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்டம் நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபை சார்பில் ஜீவசமாதி தினம் அனுசரிப்பதையொட்டி அன்னதானம் மற்றும் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சிக்கு அனுமதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட கலெக்டரும், தனியாக திருவண்ணாமலையைச் சேர்ந்த அர்ச்சகர் அரங்கநாதன் என்பவரும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

அதுதொடர்பான தினத்தந்தி செய்தில், "இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எச்சில் இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்வது என்பது நாகரிகமற்றது. கர்நாடக மாநிலத்தில் 500 ஆண்டுகள் பழமையான கோவிலில் இதேபோல நடந்த நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நெரூர் சத்குரு சபை சார்பில் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தனிநீதிபதி அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினர்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை மார்ச் 13 அன்று வழங்கினர்.

மேலும், "எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சியானது, மத வழிபாட்டு முறைகளுள் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அது பொது ஒழுக்கத்திற்கும், சுகாதாரத்திற்கும் உகந்ததா என்று கேள்வி எழுப்பினார்கள். இதே விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்குதான் உரிய முடிவு எடுக்க இயலும். அதே நேரத்தில் தனி நீதிபதியின் உத்தரவையும் அங்கீகரிக்க முடியாது. எனவே அவரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது," என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, "உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நெரூர் சத்குரு சபையில் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது," என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை
படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

தமிழகத்தின் கல்வித்தரம் அதல பாதாளத்தில் உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பாஜக சார்பில் மார்ச் 13ஆம் தேதியன்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் கல்வித்தரம் அதல பாதாளத்தில் உள்ளது என்று கூறியதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

புளியங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை தமிழ்நாடு அரசு மீது, பெண் குழந்தைகளுக்குப் போதிய பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.

"உத்தர பிரதேசத்தில் 96 நவோதயா பள்ளிகள் உள்ளன. அவற்றில் 48,000 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மத்திய அரசு ஒரு குழந்தைக்கு ரூ.85,000 செலவிடுகிறது. தமிழ்நாட்டில் ஒரு நவோதயா பள்ளிகூட இல்லை.

மழைநீர் ஒழுகும் பள்ளிகளில் படிக்க வேண்டிய நிலைக்கு நமது குழந்தைகள் ஆளாகியுள்ளனர். இப்படி இருந்தால் தமிழ்நாட்டில் தரமான கல்வியை எப்படி வழங்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், அண்ணாமலை

பட மூலாதாரம், Annamalai/X

விஜயகுமாரதுங்க, ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை: விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டுகோள்

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவதைப் போன்று அரசாங்கம் விஜயகுமாரதுங்க, ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை தொடர்பான அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளதாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், Virakesari

படக்குறிப்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் மார்ச் 13ஆம் தேதியன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, "பட்டலந்த விவகாரம் தொடர்பில் நாங்களும் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம். இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அதேபோன்று விஜேகுமாரதுங்க, ஸ்டேன்லி விஜேசுந்தர படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். அப்போது யார் மனிதப் படுகொலையாளர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். உண்மையை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறியதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)