உணவுத்துறையில் ரூ.300 கோடி முறைகேடா? ஊழல் புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் என்ன?

- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு போக்குவரத்து ஒப்பந்தம் வழங்கியதில் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஒப்பந்த விதிகளை வளைத்து முறைகேடு நடைபெற்றதாகக் கூறுகிறார், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன்.
இந்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே விலைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகக் கூறுகிறார், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி.
நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்புவதில் முறைகேடு நடந்ததா? அமைச்சர் சக்கரபாணி சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு மாநில அரசுகளுக்கு இந்திய உணவுக் கழகம் (FCI) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி குறைந்தபட்ச ஆதார விலை மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்கள், அரவைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கு லாரி போக்குவரத்துப் பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக, இந்திய உணவுக் கழகம் சில வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல செயல் இயக்குநர், மாநில உணவுத் துறை செயலர், போக்குவரத்துத் துறை செயலர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், நெல் மற்றும் உடைக்கப்படாத தானியங்களை லாரிகள் மூலம் மத்திய, மாநில அரசின் தானியக் கிடங்குகளுக்கும் அங்கிருந்து ரயில் மூலம் மற்ற மாவட்ட குடோன்களுக்கும் அனுப்புவதற்கான போக்குவரத்துப் பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்கின்றனர்.
மாவட்ட தானியக் கிடங்குகளில் இருந்து அரவைத் தொழிற்சாலைகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. அங்கு அரிசியாக அரைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாவட்ட, தாலுகா அளவிலுல் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
இதற்கான நிதியை இந்திய உணவுக் கழகம் (FCI), மாநில உணவு வழங்கல் துறைக்கு வழங்குகிறது.
போக்குவரத்துப் பணிக்கு டெண்டர்

பட மூலாதாரம், Getty Images
"லாரிகள் மூலம் நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தம் (Tender), கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோரப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் திறக்கப்பட்டது. ஆனால் அதிக விலையை சில நிறுவனங்கள் குறிப்பிட்டதால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது" எனக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.
ஒப்பந்தம் 11 மாதங்கள் கழித்து இறுதி செய்யப்பட்டாலும் சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் விதிமுறைகளை அதிகாரிகள் மாற்றியதாகக் கூறிய அவர், மேலதிக தகவல்களைப் பட்டியலிட்டார்.
"ஒரு மெட்ரிக் டன் நெல்லை லாரிகளில் எடுத்துச் செல்வதற்கு முதல் 8 கி.மீட்டருக்கு அரசு நிர்ணயித்த விலை என்பது 288 ரூபாய். சந்தை நிலவரத்தை ஆராய்ந்து இந்த விலை தீர்மானிக்கப்பட்டது. 38 மாவட்டங்களில் இதே விலையில் டெண்டர் கோரப்பட்டது" எனக் கூறுகிறார், ஜெயராம் வெங்கடேசன்.
ஆனால், "டெண்டரில் பங்கேற்ற மூன்று நிறுவனங்களும் முதல் 8 கி.மீட்டருக்கு 700 ரூபாய்க்கும் அதிகமாக விலையைக் குறிப்பிட்டன. முடிவில் முதல் 8 கி.மீட்டர் தூர பயணத்துக்கு 598 ரூபாய் வழங்குவது என அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஒரு தனியார் நிறுவனத்துக்கு 16 மாவட்டங்களும் இதர 2 நிறுவனங்களுக்கு முறையே 13 மாவட்டங்கள், 8 மாவட்டங்கள் எனவும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாக, 2023-2024 காலகட்டத்தில் உணவு வழங்கல் துறையில் லாரிகளை ஓட்டிக் கொண்டிருந்த சில நிறுவனங்கள், முதல் 8 கி.மீட்டர் தூரத்துக்கு 329 ரூபாயை மட்டுமே அரசிடம் பெற்று வந்ததாகக் கூறுகிறார் ஜெயராம் வெங்கடேசன்.
மேலும், "அதே ரூ.329 விலைக்குக் கொடுத்திருந்தால்கூட அரசுக்கு இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், அதைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு கூடுதல் விலையில் கொடுத்திருப்பது ஏன்?" என்றும் அவர் கேள்வியெழுப்புகிறார். இதுதொடர்பான ஆதாரங்களை ஜெயராம் செய்தியாளர் சந்திப்பின்போது முன்வைத்தார்.
'107 சதவீதம் அதிகம்'

"லாரி போக்குவரத்துக்கு அதிகாரிகள் நிர்ணயித்த தொகையைவிட (288 ரூபாய்) 107 சதவீதம் அளவு வரை மூன்று தனியார் நிறுவனங்களுக்கும் கூடுதல் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதேபோன்ற பணிக்கு முதல் 30 கி.மீ தொலைவுக்கு 220 ரூபாயை மட்டுமே தமிழ்நாடு சிமென்ட் கழகம் கொடுக்கிறது," என்று ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.
அதோடு, இந்த ஒப்பந்தத்தை இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல செயல் இயக்குநராக இருந்த அதிகாரி ஒருவர் ஏற்கவில்லை எனவும் அவர் கையெழுத்திடாமல் விடுப்பில் சென்றுவிட்டதாகவும் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.
"நெல் கொள்முதல் முதல் அரவைப் பணிகள் வரை ஆறு முறை லாரிகளில் ஏற்றி இறக்கும் வேலைகள் நடக்கின்றன. அந்த வகையில், தற்போது வரை 300 கோடி ரூபாய் வரை அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதுவே, மொத்த ஒப்பந்த காலத்தைக் கணக்கிட்டால் 900 கோடி ரூபாய் வரை முறைகேடு நடப்பதற்கு வாய்ப்புள்ளது" எனக் கூறுகிறார்.
தமிழ்நாடு டெண்டர் விதிகள் சட்டத்தின்படி (Tamil Nadu Transparency in Tender Rules, 2000) ஓர் ஒப்பந்தத்தில் 5 சதவீதம் அளவு தொகை கூடவோ, குறையவோ இருக்கலாம். இதில், 107 சதவீதம் அளவுக்குக் கூடுதல் தொகை இருப்பதால் ரத்து செய்யும் முடிவை அரசு எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
"கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 8 கி.மீ. தூர பயணத்திற்கு லாரிக்கு 330 ரூபாயை உணவு வழங்கல் துறை கொடுத்துள்ளது. ஆனால், அதே ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 8 கி.மீட்டருக்கு 598 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகம் போன்ற ஒரு துறையில் இப்படியொரு முறைகேடு நடப்பது வேதனையளிக்கிறது," எனக் குறிப்பிட்டார் ஜெயராம் வெங்கடேசன்.
இதுதொடர்பாக, உணவு வழங்கல் துறையின் உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசின் லஞ்ச ஊழல் கண்காணிப்புத் துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றுக்கு அறப்போர் இயக்கம் புகார் மனுக்களை அனுப்பியுள்ளது.
அமைச்சர் சக்கரபாணியின் விளக்கம்

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் அமைச்சர் அர.சக்கரபாணி முற்றிலும் மறுத்துள்ளார். இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை புதன்கிழமையன்று (மார்ச் 12) அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் போக்குவரத்து ஒப்பந்தம் வழங்கப்படுவதை இரண்டு ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளாக இறுதி செய்தது.
அவ்வாறு இறுதி செய்யப்பட்ட போக்குவரத்துக் கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தது. ஒப்பந்த காலம் ஐந்து ஆண்டுகள் என்ற முடிவை எடுத்ததால், போக்குவரத்துக்கான தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, "தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு முறைகேடாகப் போடப்பட்ட போக்குவரத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 2,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டது. பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி போக்குவரத்துக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் மாவட்டங்களில் ஆங்காங்கே உள்ளூர் நிலவரத்திற்கு ஏற்ப தற்காலிகமாக போக்குவரத்துக் கட்டண நிர்ணயக் குழு தெரிவித்த கட்டணம் கொடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் சக்கரபாணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், "39 மண்டலங்களுக்கும் (38 மாவட்டங்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக வசதிக்காக 39 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன) தனித்தனியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட்டன. ஒப்பந்ததாரர்களிடம் பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பிற மாநிலங்களின் கட்டண விகிதம் மற்றும் சந்தை நிலவரத்தையொட்டி மாநில அளவிலான குழு கட்டணத்தை இறுதி செய்தது.
அதன் அடிப்படையில் மண்டல அளவில் போக்குவரத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் மண்டலவாரியாக குறைந்த விலைப் புள்ளி அளித்த போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
கட்டண நிர்ணயத்தில் குளறுபடியா?

பட மூலாதாரம், Getty Images
மாநிலக் குழு கூட்டத்தில், 8 கி.மீ பயணத்துக்கு 288 ரூபாய் என அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
"ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கட்டணப் பட்டியல் பெறப்பட்டதில், குறைந்தபட்சமாக தஞ்சாவூரில் 273 ரூபாயும் அதிகபட்சமாக மதுரையில் 479 ரூபாயும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை மாநில அளவிலான குழு 360 ரூபாய் எனக் கணக்கிட்டு அதிலிருந்து 20% குறைத்து ஒப்பந்தப் புள்ளியில் குறைந்தபட்ச கட்டணம் பெற வேண்டும் என்ற நோக்கில் 288 ரூபாய் என நிர்ணயம் செய்தது. இதைப் புரிந்து கொள்ளாமல் அறப்போர் இயக்கம் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது" என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல செயல் இயக்குநர் இதை ஏற்காமல் சென்றதாகக் கூறப்படும் புகாருக்கு விளக்கம் அளித்துள்ள அவர், "இந்திய உணவுக் கழகத்தின் செயல் இயக்குநர் விடுப்பிலும் செல்லவில்லை, அவர் சார்பில் வேறு ஒருவர் கையொப்பமிடவும் இல்லை. அவரே ஒவ்வொரு குழு கூட்டத்திலும் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
விதிகள் திருத்தப்பட்டதா?
மூன்று தனியார் நிறுவனங்களுக்காக ஒப்பந்த விதிகள் திருத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவலையும் சக்கரபாணி மறுத்துள்ளார்.
"ஒப்பந்தப் புள்ளியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி மாநில அளவிலான குழு விதிகளை வகுத்துள்ளது. மேற்படி ஒப்பந்தப் புள்ளியில் 131 ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, எட்டரை மாதங்களுக்கு மொத்தமாக ரூ.428 கோடி செலவான நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு 992 கோடி ரூபாய் ஊழல் என அறப்போர் கூறுவதைப் பார்க்கும்போது யூகத்தின் அடிப்படையிலேயே புகார் தெரிவிக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது," என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












