"இப்போது என் குடும்பம் என் பெயராலேயே அறியப்படுகிறது"

- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி செய்திகள்
எந்த ஒரு ஆணாதிக்க சமூகத்திலும் குடும்பத்துக்குத் தேவையான பொருளீட்டும் இடத்திலும், முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திலும் ஆண்களே முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், இந்தியாவில் குடும்பங்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்கும் நிலைக்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
"எனது பெயரை தற்போது ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்றனர்."
இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் உஷா தேவி என்பவருக்கு ஒரு அழகான வீடு உள்ளது. அந்த வீட்டில் உஷா தேவி முன் அமர்ந்து கொண்டு அவர் பேசியதை நான் கேட்கத் தொடங்கிய போது, அது மிகவும் எளிமையாகத் தோன்றினாலும், முக்கியமானதாக மாற்றமாகவே நான் உணர்ந்தேன்.
ஆனால், 38 வயதான உஷாவுக்கு அது ஒரு மிகப்பெரும் சாதனை. "ஒரு தனி நபருக்கான அடையாளம் என்பது சிறிய விஷயமல்ல," அவர் தொடர்ந்தார். "முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே பெயரால் அடையாளப்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது பெண்களும் பெயரால் அறியப்படுகின்றனர்."
உஷா தேவியின் பள்ளிப் படிப்பு அவரது 15-ஆவது வயதில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.
அதன் பின் அவரது பெயர் மறைந்துவிட்டது. கணவருடைய பெயரைச் சொல்லி, அவரது மனைவி என்றே அவர் அழைக்கப்பட்டார். அல்லது அவர் கணவருடன் வசித்து வந்த கிராமத்தின் மருமகள் என்றே அழைக்கப்பட்டார்.
ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காகவே பலமுறை கருக்களைச் சுமக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மீது கூட மிகச் சிறிய அளவிலேயே அவரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
அவரது அனைத்து கனவுகளுக்குமான பாதைகள் அடைக்கப்பட்டது போலவே அப்போது அவருக்குத் தோன்றியது. இருப்பினும் இறுதியில் ஒரு கதவு திறந்தது.
வளரும் ஒரு குடும்பம் என்றால் நிறைய பேருக்கு உணவளிக்கவேண்டிய தேவை இருக்கும். அதற்கான பொருளீட்டும் வாய்ப்புக்கள் அந்த கிராமத்தில் கிடைக்காததால், உஷா தேவியின் கணவர் வேலை தேடி வேறு ஊருக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பை உஷா தேவியிடம் விட்டு விட்டு அவர் வேலை தேடிச் சென்றுவிட்டார்.
இந்தியாவில் உள்ள கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இது போல் சம்பாதிப்பதற்காக கணவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது, குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தவேண்டிய வாய்ப்பு, கணவருடன் பிற இடங்களுக்கு குடிபெயரும் பெண்களுக்கு கிடைக்கிறது.
சமூகவியலாளரும், மக்கள்தொகை நிபுணருமான பேராசிரியர் சோனால்டே தேசாய், இந்திய மனித ஆற்றல் மேம்பாட்டு ஆய்வுகளின் (IHDS) தரவுகளின் மூலம் பாலினம் மற்றும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளைக் கண்காணித்து வருகிறார்.
IHDS என்பது, மேரிலாந்து பல்கலைக்கழகம், இந்தியானா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் 41,000 குடும்பங்களில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பொருளாதாரம் குறித்த ஆய்வு கணக்கெடுப்பாகும்.
மாமனார் மற்றும் மைத்துனர்கள் போன்ற மற்ற ஆண் உறுப்பினர்களைச் சார்ந்து இருக்கக்கூடிய கணவரின் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறும் போது, மனைவியின் திறனைப் பொறுத்து இந்த வாய்ப்புக்கள் அமைகின்றன என்பதை பேராசிரியர் தேசாய் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
"அவளால் ஒரு தனியாக ஒரு குடும்பத்தை நிர்வகிக்க முடிந்தால், அவளது முடிவெடுக்கும் திறன், நிதிப்பொறுப்புக்களைக் கையாளும் திறன், பண்ணையை நிர்வகிப்பது மற்றும் நடத்துவது போன்ற பல நிலைகளில் பெரும் மாற்றத்தை நாங்கள் காண்கிறோம்" என்று பேராசிரியர் தேசாய் கூறுகிறார்.
கடந்த முப்பது ஆண்டுகளில், இந்தியாவில் பெண்களே தலைமைப்பொறுப்பை ஏற்று குடும்பங்களை வழிநடத்தும் விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஆணாதிக்கம் சார்ந்த குடும்ப அமைப்பில், இது போல் வேலை தேடி இடம்பெயரும் குடும்பங்கள் தான் இந்த மாற்றத்திற்கு ஒரு பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன- இந்த மாற்றத்துக்கு இடப்பெயர்ச்சியே காரணம் என்பதே உண்மை.
இந்தியாவின் கடைசி மக்கள்தொகை கணக்கெடுப்பின் (2011) படி, 45 கோடி குடும்பங்கள் இப்படி இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது கடந்த தசாப்தத்தில் 45% அதிகரித்துள்ளது மட்டுமின்றி அதே காலகட்டத்தில் அதிகரித்த மக்கள் தொகையை விட 18% அதிகமாகும்.
கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட வறுமை மற்றும் சுருங்கி வரும் வேலை வாய்ப்புகளை எதிர்கொள்ளும் ஏராளமான குடும்பங்கள் வரும் ஆண்டுகளில் இது போல் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் என பேராசிரியர் தேசாய் கணித்துள்ளார்.
கல்வியறிவில் பெண்களின் முன்னேற்றம்
கணவர் வேறொரு நகரத்தில் வேலைக்குச் சென்ற பிறகு, உஷா தனது மாமியார் வீட்டை விட்டு வெளியேறியது மட்டுமின்றி தனது கணவர் சம்பாதித்து அனுப்பும் பணத்துடன் அவரும் ஒரு சிறிய வேலையைச் செய்து சம்பாதிக்கத் தொடங்கினார். அதன் மூலம் அவருக்கு ஒரு சிறு வருமானம் கிடைத்தது. இதனால் அவர் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை மாறி, தன்னம்பிக்கையும் அதிகரித்தது. இது மற்றவர்களிடத்தில் ஒரு அடையாளத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.
ஏழைப் பெண்களுக்கு எளிதாகக் கடன் வழங்கும் அரசாங்கத் திட்டத்தில் இணைந்து அவர் பண்யாற்றிவருகிறார். இதற்காக குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, குழுவில் பெண்களைச் சேர்க்கும் வேலையை அவர் செய்துவரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் அந்த குழு கூடுகிறது. அந்தப் பெண்கள் ஏற்கெனவே பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தும் போது, அத்தொகையைப் பெற்று வங்கியில் செலுத்துவது போன்ற பணிகளை உஷா தற்போது மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலான வேலைகளை ஆண்களே செய்துவந்த நிலையில், வேலை தேடி பிற இடங்களுக்குக் குடிபெயரும் ஆண்கள் மூலம் தற்போது பெண்களுக்கு இது போன்ற வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

நான் கலந்து கொள்ளும் கூட்டத்தில் எப்போதும் முரணான கருத்துக்களும், சந்தோஷமான சிரிப்புக்களும் சம அளவில் உள்ளன. இது போல் ஒரு மரபுசாரா ஆதரவு அவர்களுக்குள் நிலவுவதால் ஆணாதிக்கத்திலிருந்து அவர்கள் மெதுவாக விடுபட்டுவருகின்றனர்.
“இப்போது நாம் ஒவ்வொரு பெண்ணையும் அவரது பெயரைக் கொண்டே அறிகிறோம். மேலும் கல்வியறிவு பெற்ற உறுப்பினர்களின் உதவியுடன், எனது பெயரை எழுதவும், கணக்குவழக்குகளை நிர்வகிக்கவும் கற்றுக்கொண்டேன்,” என்கிறார் முன்னி தேவி என்ற பெண்.
ஷோபா தேவி என்ற பெண், அந்த குழுவில் கல்வியறிவு பெற்ற உறுப்பினர்களில் ஒருவர். அவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் நடந்ததால் படிப்பைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பின்னர் தனது கல்வியைத் தொடரவும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், உஷா இல்லாத நிலையில் அவருடைய வேலைகளை முன்னின்று ஷோபா தேவி தான் செய்துமுடிக்கிறார்.
"என் கணவர் அனுப்பும் பணம் பெரும்பாலும் செலவுக்கு போதுமானதாக இருப்பதில்லை. இது போன்ற சிரமத்தில் இருக்கும் போது, நாங்கள் எங்களுக்குள்ளேயே சிறிய அளவிலும் பெரிய அளவிலும் உதவிக்கொள்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

"பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்று நான் இப்போது தெரிந்துகொண்டதால், செலவுகள் குறித்து முடிவெடுப்பதில் எனக்கு அதிகப் பங்கு உள்ளது."
ஷோபா தேவி, கணவனை விட உயர்ந்த கல்வியறிவு பெற்றிருக்கும் பழங்குடியின பெண்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்திய மனித ஆற்றல் வளர்ச்சிக் கணக்கெடுப்பின்படி, 1980களில் திருமணம் செய்துகொண்டவர்களில், 5% பெண்கள் மட்டுமே கணவரை விட அதிகக் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர். ஆனால், 2000 மற்றும் 2010 களில் திருமணம் செய்தவர்களில் இது 20% ஆக உயர்ந்துள்ளது.
"அதிக வருமானம் ஈட்டுபவர் தான் குடும்பத்துக்குத் தலைமை தாங்க வேண்டும் என்பதைக்காட்டிலும், யார் முடிவெடுக்கமுடியும் என்ற அடிப்படையில் தலைமைப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால், இது போல் கல்வியறிவு பெற்ற பெண்கள், தங்கள் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் நிலை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்," என்று பேராசிரியர் தேசாய் விளக்குகிறார்.

பெண்களின் முன்னேற்றத்தில் துணை நிற்கும் ஆண்கள்
உஷா தேவி சம்பாதிக்கத் தொடங்கியதால், அந்த வருமானத்திலிருந்தே தனது படிப்பையும் தொடர்ந்து தற்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டார்.
உஷா தேவி கல்வியைத் தொடர, அவரது கணவர் ரஞ்சித்தும் பெருமளவில் துணை புரிந்திருக்கிறார்.
"நான் ஒரு முட்டாள். எனக்கு எதுவும் தெரியாது, என் மனைவி மட்டும் படிக்காமல் இருந்திருந்தால், என் குழந்தைகளும் என்னைப் போலவே ஒன்றும் தெரியாதவர்களாக மாறியிருப்பார்கள்."
ரஞ்சீத் தனது பத்து வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். தன் மனைவி எவ்வளவு ‘புத்திசாலி’ என்று பார்த்தபோதுதான், அது தவறு என்பதை உணர்ந்ததாக அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.
"எனது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்பு கிடைப்பதற்கு அவள் தான் காரணம்," என்று அவர் கூறுகிறார்.
இது கட்டுப்பாடுகள், சம்பிரதாயங்கள் மிக்க ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட்ட ஆண், இப்படி ஒரு உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது அரிதான செயலாகவே பார்க்கப்படுகிறது.
சில வழிகளில் இடப்பெயர்ச்சி என்பது ஆண்களின் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மட்டுமில்லாமல் அவர்களின் மனைவி மீது ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் நாம் காணமுடிகிறது.

நான் ரஞ்சித்திடம் தொலைபேசி மூலம் பேசினேன். தமிழ்நாட்டில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து தனது குடும்பத்திற்கு உதவி செய்வதில் பெருமை அடைவதாகத் தெரிவித்த ரஞ்சித் அவர் மிகவும் குறைந்த அளவுக்கே படித்திருப்பதால் சொந்த ஊரில் வேலைதேட முடியாத சூழ்நிலை நிலவுவதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
இருந்த போதிலும், உஷா, ஷோபா மற்றும் நான் பேசிய மற்ற பெண்கள் இன்னும் தங்களை தங்கள் கணவருக்கு இரண்டாவது இடத்தில் வைத்தே பார்க்கிறார்கள்.
உஷாவின் பார்வையில் அவள் கணவரே இன்னும் ஹீரோவாகத் தெரிகிறார். “என்னுடைய முயற்சிகளுக்கு அவர் மட்டும் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் நான் இந்த அளவுக்கு உயர்ந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. அவர் தான் அனைத்துக்கும் காரணம் என்கிறார்," உஷா தேவி.
ஆனால் அவரது மூத்த மகள் ராஷ்மிக்கு, அவரது அம்மா தான் மிகப்பெரிய முன்னுதாரணமாகத் தெரிகிறார்.
"என் அம்மாவிடம் ஏற்பட்ட இத்தனை மாற்றங்களையும் நான் பார்த்து வருகிறேன். அவரைப் போலவே நானும் வாழ்க்கையில் உயரமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது," என்கிறார் அவர்.
ராஷ்மி, தனது குடும்ப வருமானத்துக்கு உதவும் நோக்கில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் பணிகளை மேற்கொள்கிறார். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காவல் துறையில் வேலைக்குச் சேரும் பயிற்சி பெற்றுவருகிறார். அது வேலைக்குச் செல்லவேண்டும் என்பதற்கான ஆசை மட்டும் கிடையாது. அவரது அம்மாவைப் போலவே முன்னேறிக்காட்டவேண்டும் என்பதற்கான இலக்காகவே இருக்கிறது.
"ஆண்கள் மட்டுமே ஒரு குடும்பத்தை தலைமையேற்று நிர்வகிக்க முடியும் என யாரும் கருதிவிடக்கூடாது. பெண்களும் திறமையாக குடும்பங்களை நிர்வகிக்க முடியும். அதற்கான உத்வேகத்துடன் பெண்களை வளர்ப்பதன் மூலமே அதைச் சாதிக்கமுடியும்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












