வரதட்சணைக் கொடுமை: கல்வி, வேலைவாய்ப்பு அதிகரித்த பிறகு நிலைமை மாறியுள்ளதா?

செல்வமும் வரதட்சணையும்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி இந்தியா

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக ஆண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வரதட்சணை கொடுமையின் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் மகளுக்கு திருமணம் செய்து தரும் போது, மணமகளின் பெற்றோர், மணமகன் குடும்பத்துக்கு வரதட்சணை அளிப்பதும், இது போல் வரும் வரதட்சணைகளைப் பெற்றுக்கொள்வதும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியமாக இருந்து வருகிறது. மணமகளின் பெற்றோர் மணமகனின் குடும்பத்திற்கு பணம், உடைகள் மற்றும் நகைகளை பரிசாக வழங்குகிறார்கள். 1961 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வரதட்சணை அளிப்பது மற்றும் பெறுவது சட்டவிரோதமானது என்றாலும், அந்தப் பிரச்சினை தொடர்ந்து வளர்ந்துவருகிறது. வரதட்சணை என்ற கொடூர பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் பெண்கள் பலவித கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பல சம்யங்களில் அந்த பெண்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி வீவர் மற்றும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கௌரவ் சிப்லுங்கர் ஆகியோர், காலப்போக்கில் வரதட்சணையின் மாற்றத்தை ஆராய 1930 மற்றும் 1999 க்கு இடையில் இந்தியாவில் 74,000 க்கும் மேற்பட்ட திருமணங்களை ஆய்வு செய்தனர்.

மணமகளின் குடும்பத்தினர் மணமகன் அல்லது அவரது குடும்பத்திற்கு அளித்த வரதட்சணைக்கும், மணமகனின் குடும்பத்தினர் மணமகள் குடும்பத்துக்கு அளித்த பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் நகைகளின் மதிப்புகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அந்த ஆராய்ச்சியாளர்கள் "நிகர வரதட்சணை" என கணக்கில் கொண்டனர். இந்தியாவின், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளில் இருந்து அதிக மக்கள்தொகை கொண்ட 17 மாநிலங்கள் குறித்த விவரங்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெரும்பாலான இந்திய திருமணங்கள் இன்னும் பெற்றோரால் தீர்மானிக்கப்படும் திருமணங்களாகவே இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா பெண்களும் தங்கள் இருபதுகளின் பிற்பகுதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். 1999 வரை ஆய்வு செய்ததில் 90% திருமணங்களில் வரதட்சணை அளிக்கப்பட்டுள்ளது. 1950 மற்றும் 1999-ம் ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் இது போல் கொடுக்கப்பட்ட வரதட்சணை 0.25 டிரில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 1940களில் இருந்து 1980கள் வரை, பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வந்ததே வரதட்சணைப் பிரச்சினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என ஆய்வுகளில் இருந்து தெரிவதாக ஆராய்ச்சியாளர் வீவர் என்னிடம் கூறினார். "இந்த காலகட்டத்தில், அதிகமான ஆண்கள் சிறந்த கல்வி கற்று தரமான வேலைகளைப் பெற்றனர். இது வரதட்சணை அதிகரிப்பதற்கு வழிவகுத்தது," என்று அவர் கூறுகிறார்.

செல்வமும் வரதட்சணையும்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் திருமணங்களின் நிலை

• இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் ஒருதாரத் திருமணங்களாகவே இருக்கின்றன

• ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான திருமணங்களே விவாகரத்தில் முடிவடைகின்றன

• மணமகன் அல்லது மணமகளைத் தேர்வு செய்வதில் பெற்றோர்களின் பங்கே பிரதானமாக இருக்கிறது. 1960 மற்றும் 2005-ம் ஆண்டுகளுக்கு இடையே 90 சதவிகித திருமணங்களில் பெற்றோர்களே மணமகன் அல்லது மணமகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்

• 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திருமணத்துக்குப் பின் கணவரின் குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றனர்

• 85 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் தங்களது பிறந்த ஊருக்கு வெளியில் உள்ள மணமகன்களுக்கே திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றனர்

• 78.3 சதவிகித திருமணங்களில் மணமக்கள் உள்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்

ஆதாரம்: இந்திய சமூக மேம்பாட்டு ஆய்வு, 2005; தேசிய குடும்ப நல ஆய்வு 2006; REDS, 1999

செல்வமும் வரதட்சணையும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1961-ம் ஆண்டு முதல் இந்தியாவில் சட்டப்படி வரதட்சனை தடை செய்யப்பட்டிருந்தாலும், அது இன்னும் முடிவுக்கு வரவில்லை

இந்த ஆய்வுகளின்படி, சமூகத்தில் வரதட்சணையின் இருப்பையும், அதன் தோற்றம் மற்றும் பரிணாமத்தை, மணமகனின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டே மிகவும் திறம்பட புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு மணமகன் கல்வி மற்றும் வருமானத்தில் எந்த அளவு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளார் என்பதைக் பொருத்து வரதட்சணை அதிகரிக்கப்படுகிறது. (இந்தியாவின் பணி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதால், ஆண்களுக்கு சிறந்த வேலைகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன.)

அதாவது, நல்ல கல்வி கற்ற, தரமான - அதிக சம்பளம் பெறக்கூடிய வேலையில் இருக்கும் மணமகன் என்றால் அவருக்கு அளிக்கப்படும் வரதட்சணையின் அளவும் அதிகரிக்கிறது. அதே நேரம் அதிக வரதட்சணை கேட்கும் மணமகன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தனித்தனியாக மணமகன்கள் பெறும் வரதட்சணையின் அளவு குறைந்துவருகிறது.

"வலுவான பொருளாதார காரணிகளே வரதட்சணையை தாங்கிப் பிடிக்கின்றன. மணமகளின் தரப்பில் வரதட்சணை மறுக்கப்படும் போது, எதிர்பார்க்கும் அளவுக்கான மணமகன்கள் கிடைப்பதில்லை. மணமகனின் குடும்பமும், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்களுக்காக வரதட்சணை அளிக்கும் நிலையில், அல்லது மணமகனின் கல்விக்காக ஏராளமான பொருட்செலவை அந்தக் குடும்பம் எதிர்கொள்ளும் நிலையில் அந்தக் குடும்பத்துக்கு வரும் வரதட்சணையைப் பெறவிரும்புகிறது," என வீவரும், சிப்லுங்கரும் எழுதுகின்றனர்.

செல்வமும் வரதட்சணையும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆக்ராவில் பெண்களின் உரிமைகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியம் ஒன்று வரதட்சணை என்பது பெண் இனத்தை இழிவுபடுத்தும் செயல் என எழுதப்பட்டுள்ளது

வரதட்சணை என்பது இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒன்றா?

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிவன் ஆண்டெர்சன் என்ற ஆய்வாளர் சமர்பித்துள்ள தனி ஆய்வில் ஐரோப்பா போன்ற நாடுகளில் வசதி வாய்ப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில் வரதட்சணை கொடுக்கப்படுவது குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியா போன்ற சாதிய அமைப்புகளைக் கொண்டுள்ள நாடுகளில் வரதட்சணை அளிப்பது அதிகரித்துள்ளதாக ஆண்டர்சன் வாதிடுகிறார்.

இதற்கிடையே, வரதட்சணை அளிப்பது அதிகரித்துள்ளது என்பதை விவரிக்க சிறிய அளவிலான ஆதாரங்களே கிடைத்துள்ளன என வீவரும், சிப்லுங்கரும் கூறுகின்றனர்.

ஒரு கோட்பாட்டின் படி, உயர் சாதியினரிடையில் மட்டுமே இருந்து வந்த வரதட்சனை பழக்கத்தை கீழ் சாதியினரும் ஒரு சமூக மாற்றத்தின் காரணமாக பின்பற்றத் தொடங்கினர் எனக்கருதப்படுகிறது.

ஆனால் இந்த கருத்தை மறுக்கும் புதிய ஆய்வுகள், உயர் சாதி மற்றும் கீழ் சாதி மக்களிடையே ஒரே காலகட்டத்தில் தான் இந்த வரதட்சணை பழக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கின்றன.

கீழ் சாதிப் பெண் ஒருவர் உயர் சாதி மணமகனை திருமணம் செய்ய விரும்பிய போது அதிக வரதட்சணை அளிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சில நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்தை வீவர் ஏற்கவில்லை. 94 சதவிகித குடும்பங்கள் தங்கள் சாதிக்குள்ளேயே பெண் கொடுப்பதும், எடுப்பதும் என்ற பழக்கத்தை பின்பற்றி வரும் போது இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்புகிறார் வீவர்.

செல்வமும் வரதட்சணையும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரதட்சணை, பணமாகவோ, பொருட்களாகவோ கொடுக்கப்படுகிறது

அதிக பெண்கள் தரமான கல்வி பெற்றால் வரதட்சணையின் நிலை என்ன?

கடந்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளாகவே ஆண்களைப் போலவே பெண்களும் தரமான கல்வியைப் பெற்று அதிக சம்பளத்துடன் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரதட்சணைக் கொடுமை குறைந்துள்ளதா என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்கிறார் வீவர்.

ஆனால் அதிக எண்ணிக்கையில் பெண்கள் கல்வி கற்பது வரதட்சணையின் அளவைக் குறைத்துள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

இருப்பினும், கல்வி கற்கும் பெண்கள் ஓராண்டில் உயரும் எண்ணிக்கையை விட அதே காலகட்டத்தில் கல்வி கற்கும் ஆண்களின் எண்ணிக்கைக வேகமாக அதிகரிக்கிறது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் பெரிய அளவில் படித்து வேலைக்குச் செல்ல விரும்புவதில்லை என்பதால் சாதாரண வேலைகளுக்குச் சென்று சம்பாதிக்கின்றனர்.

இன்னும் அதிக எண்ணிக்கையில் பெண்களைப் படிக்கவைத்து, அவர்களை பெரிய வேலைகளுக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டால் நிச்சயமாக வரதட்சணை என்ற கொடூரத்திலிருந்து அவர்கள் விடுபட முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: