தமிழ்நாட்டில் பறிபோகும் மருத்துவ இடங்கள், அங்கீகாரத்தை இழந்த கல்லூரிகள் - யார் காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டிலுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளுக்கான இளங்கலை இடங்களுக்கான (MBBS) அங்கீகாரத்தை திரும்பப் பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
இதனால் இந்த கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் உருவாகக்கூடும் என்று கூறப்படும் நிலையில், இந்த முடிவை திரும்பப்பெற உரிய முயற்சிகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகள் தங்கள் இளநிலை படிப்புகளுக்கான அங்கீகாரத்தை இழக்க நேரிட்டது எப்படி? என்ன நடந்தது? தமிழ்நாடு அரசு என்ன செய்ய இருக்கிறது?
அங்கீகாரத்தை இழந்த கல்லூரிகள்
தமிழ்நாட்டில் மொத்தமாக 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அனுமதியுடன் இயங்கி வருகின்றன.
இந்த 38 அரசு கல்லூரிகளில் 5,225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அதன் இளநிலை அங்கீகாரத்தை இழக்கும் நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது.
இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தினுடைய முடிவின் அடிப்படையில் சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு கே.ஏ.பி விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவச் சேர்க்கை நடத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கல்லூரிகளிலும் சேர்த்து 500 இடங்கள் வரையுள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவால் இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
என்ன நடந்தது?

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த முடிவை தேசிய மருத்துவ ஆணையம் எடுத்துள்ளது.
கல்லூரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைரேகை வருகைப் பதிவில் உள்ள குறைபாடுகள், சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த 3 கல்லூரிகளுக்கும் இளங்கலை மருத்துவ வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
இதனால் இந்த கல்லூரிகளில் உள்ள 500 எம்பிபிஎஸ் இடங்களுக்கான சேர்க்கை இந்த ஆண்டு நடத்த அனுமதி வழங்கப்படாது.
இந்த 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழகத்தின் பழைமை வாய்ந்த மருத்துவக் கல்லூரிகள் என்பதால் மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘கூடுதல் அக்கறை தேவை’
தமிழ்நாட்டிலுள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகப் பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
“இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ஆனால் திமுக பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. அதேபோல புதிதாக இடங்களும் உருவாக்கப்படவில்லை,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிசிடிவியை கூட கண்காணிக்க முடியாத தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை எப்படி முறையாகக் கவனித்துக்கொள்ளும் என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, இடங்களை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
கைரேகை வருகைப் பதிவேடு, சிசிடிவி போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி அங்கீகாரத்தை ரத்து செய்து மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருப்பது நியாயமல்ல என்று பாமகவின் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
“தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அளித்த விளக்கத்திற்குப் பிறகும் இத்தகைய நடவடிக்கை தேவையற்றது. 500 இடங்களை ரத்து செய்வது தமிழ்நாட்டின் சுகாதாரத்தில் பாதிப்பை உருவாக்கும்.
தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் மெத்தனப்போக்கு

பட மூலாதாரம், Getty Images
தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்த மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், “சில தனியார் கல்லூரிகளில் பேராசிரியர்கள், நோயாளிகள்கூட இருப்பதில்லை.
ஆயினும் அது போன்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சிறிய காரணங்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது தவறானது. அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தன போக்குடன் செயல்படுகிறது,” என்று தெரிவித்தார்.
விளக்கம் அளித்த நிர்வாகம்
முறையான கைரேகை வருகைப்பதிவேடு தான் ஒரு மருத்துவமனையில் எத்தனை மருத்துவர்கள் உள்ளனர் என்பதற்கான சான்று. அதேபோல சிசிடிவி காட்சிகள் தான் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் வந்து செல்வதற்கான சான்றாகக் கருதப்படுகிறது. எனவே இது இரண்டையும் தேசிய மருத்துவ ஆணையம் கட்டாயம் ஆக்கியிருக்கிறது.
கைரேகை வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி பழுது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய நோட்டிஸுக்கு தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அனுப்பியிருந்தது.
ஆனால் அதை தேசிய மருத்துவ ஆணையம் ஏற்கவில்லை. இந்நிலையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் விளக்கம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் மருத்துவ கல்வி இயக்ககத்தின் மூத்த அதிகாரி, தமிழ்நாட்டில் இதுபோல நடைபெறுவது இதுவே முதல்முறை. ஆனால் இவை மிக எளிதாக சரிசெய்யக்கூடிய பிரச்னை என்றும், தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது என்றார்.
அரசு அறிவுறுத்தல்

பட மூலாதாரம், TN DIPR
இந்நிலையில், இந்த 3 மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அங்கீகாரத்தை ரத்து செய்யக் காரணமான வசதிகளை உடனடியாக ஏற்படுத்திய பிறகு அது தொடர்பான ஆவணங்களை இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்திற்குச் சமர்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது சிறிய பிரச்னை என்பதால், ஆவணங்களை சமர்பித்த பிறகு மாணவர் சேர்க்கைக்கு உடனடியாக அனுமதி கிடைத்துவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்லூரிகளின் அனுமதி தொடர்பாக மத்திய சுகாதரத்துறை அமைச்சரைச் சந்திக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
“சிசிடிவி, வருகைப் பதிவேடு போன்றவை சிறிய பிரச்னைகள். இதை விரைவாகச் சரிசெய்து கொடுப்போம். ஆனால் இதுபோன்ற சிறிய பிரச்னைகளுக்காக அங்கீகாரத்தை ரத்து செய்வது மாநிலங்கள் மீது மத்திய அரசு காட்டும் பாகுபாட்டைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் என்ன பிரச்னை இருக்கிறது என்று பூதக்கண்ணாடி போட்டு பார்க்கக்கூடாது,” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












