தேர்வுகளை எழுதமுடியாமல் தவிப்பவர்களுக்காக உதவும் கர்நாடக பெண்

பட மூலாதாரம், புஷ்பா
- எழுதியவர், ஸ்வாமிநாதன் நடராஜன்
- பதவி, பிபிசி செய்திகள், பெங்களூரு
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் கடந்த 2007-ம் ஆண்டு பார்வையற்ற நபர் ஒருவர் சாலையைக் கடக்க உதவுமாறு புஷ்பாவிடம் கேட்டார். சாலையைக் கடந்த பின், புஷ்பாவிடம் அவர் கேட்ட மற்றொரு உதவி, அவருடைய வாழ்க்கையையே மாற்றியது.
"அவர் தனது நண்பருக்காக தேர்வெழுத முடியுமா என என்னிடம் உதவி கேட்டார்," என அப்போது அந்த பார்வையற்ற நபர் கேட்ட உதவியை புஷ்பா தற்போது நினைத்துப் பார்க்கிறார்.
மற்ற ஒருவருக்காகத் தேர்வெழுதத் தயாராக இருப்பதாக அப்போது தெரிவித்த புஷ்பா, பின்னர் தேர்வு எழுதும் நாள் வந்த போது கவலையில் மூழ்கினார். அதற்கு முன் அப்படி எந்தத் தேர்வையும் அவர் எழுதாத நிலையில், அந்த தேர்வை அவர் எப்படி எழுத முடியும் என்பது தான் அந்த கவலை.
தேர்வெழுத முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்காக மற்றொருவர் மூலம் தேர்வெழுதுவது வழக்கமான ஒன்றுதான். கேள்விகளுக்கான பதில்களை தேர்வெழுதுபவரிடம் மாற்றுத்திறனாளிகள் சொல்லும் போது, அவர்கள் அதை அப்படியே எழுதுகின்றனர். இது குறித்து அமலில் உள்ள சட்டங்களின் படி, ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்த நபர்கள், அவர்களுடைய பாடத்திலேயே இது போல் தேர்வெழுத அனுமதியில்லை. அரசு நடத்தும் தேர்வுகளில் இப்படி மாற்றுத்திறனாளிகளுக்காக தேர்வெழுதும் நபர்களுக்கு அரசு ஒரு தொகையை கட்டணமாக அளித்தாலும், பெரும்பாலும் இது போல் தேர்வெழுதுபவர்கள் கட்டணம் எதையும் பெறுவதில்லை. புஷ்பாவும் அது போல இப்படி தேர்வெழுதும் போது எந்த கட்டணமும் பெறுவதில்லை.
"அது ஒரு மூன்று மணிநேர பதற்றம். கேள்விக்கான பதில்களை அந்த மாற்றுத்திறனாளி மிக மெதுவாகவே சொன்னார். மேலும், கேள்வியை மீண்டும் ஒரு முறை படித்துச் சொல்லுமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தார்," என்கிறார், புஷ்பா.
ஆனால் 19 வயதான ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக புஷ்பா அந்த தேர்வை முழுமையாக எழுதிமுடித்தார்.
இது போல் அவர் தேர்வுகளை எழுதி வந்த போது, ஒரு தன்னார்வ அமைப்பு அவரை அணுகி, மேலும் ஏராளமான பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக இப்படி தேர்வெழுதி உதவக் கேட்டுக்கொண்டது. அதற்கு முழுமையான ஒப்புக்கொண்ட புஷ்பா, கடந்த 16 ஆண்டுகளில் கட்டணம் எதுவும் இல்லாமல் ஆயிரம் தேர்வுகளை எழுதியுள்ளார்.
பிபிசியிடம் பேசிய புஷ்பா, "தேர்வறைகள் என்பவை என்னுடைய இரண்டாவது வீடு போல் மாறிவிட்டன," என்கிறார்.
பள்ளி, கல்லூரித் தேர்வுகளை மட்டும் எழுதாமல், நுழைவுத் தேர்வுகள், மற்றும் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளையும் புஷ்பா எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், புஷ்பா
"இப்படி தேர்வுகளை எழுதுவது என்னுடைய முழு நேரப் பணியாகிவிட்டது. இது போல் தேர்வுகளை எழுதுவதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை," என்கிறார் அவர். மேலும், அவருக்கு தொடர்பில்லாத பாடங்களிலும்- வரலாறு முதல் புள்ளியியல் வரை ஏராளமான பாடங்களை அவர் தற்போது நன்கு கற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறுகிறார்.
பார்வை மாற்றுத்திறனாளிகள், பெருமூளை வாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்டிசம், விபத்துக்களில் சிக்கி கை-கால்களை இழந்தவர்கள் என பல்வேறு தரப்பு தேர்வர்களுக்காகவும் அவர் இது போல் தேர்வுகளை எழுதியுள்ளார்.
ஆனால் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தேர்வு எழுதுவது மிகவும் சவாலான செயலாக இருந்ததாக புஷ்பா கூறுகிறார். இது போல் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாது. "அவர்களுடைய உதடுகள் எப்படி அசைகின்றன என்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்தினால் தான் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது சரியாகப் புரியும்."
ஆனால் அதையும் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு புஷ்பா இப்பணியைத் தொடர்ந்து வருகிறார். கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தேர்வர் சக்கர நாற்காலியில் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில் அவருக்கு மட்டும் 47 முறை தேர்வுகளை புஷ்பா எழுதியுள்ளார்.
இதனாலேயே அவர்களுக்குள் நீண்ட கால நட்பு இருந்துவருகிறது. ஒரு முறை கார்த்திக் தேர்வில் பங்கேற்ற போது, அவருக்காக தேர்வு எழுதிய நபர் எதுவும் சொல்லாமல் பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால் கார்த்திக் அந்தத் தேர்வை எழுத புஷ்பா உதவினார். 25 வயது நிரம்பிய கார்த்திக், தேர்வுகளில் தான் பங்கேற்ற போதெல்லாம் புஷ்பா தொடர்ந்து அளப்பரிய உதவிகளைச் செய்துள்ளதாக பாராட்டுகிறார்.
"புஷ்பாவைப் போன்ற ஒரு தன்னார்வலர் எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். அவரைப் போன்ற தேர்வு எழுத உதவும் அனைவரும் என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களின் கடவுள் என்றே சொல்லவேண்டும்," என்கிறார் அவர்.
இருவரும் ஒன்றாக இணைந்து இது போல் மேற்கொண்ட பயணத்தின் மூலம், இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. தனது பட்டப்படிப்பை முடித்துவிட்ட கார்த்திக் தற்போது அரசுப் பணிக்கான தேர்வை எழுதும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
"நான் ஏராளமான மாணவர்களுக்காக தேர்வுகளை எழுதியுள்ளேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது," என்கிறார் புஷ்பா.

பட மூலாதாரம், புஷ்பா
மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில், பூமிகா வால்மீகி என்ற 19 வயது மாணவிக்காக ஒரு பட்டப்படிப்பு தேர்வை புஷ்பா எழுதினார்.
பார்வை மாற்றுத்திறனாளியான வால்மீகி, பாடங்களை ஒலிவடிவில் மாற்றி அளிக்கும் ஒரு செயலியைப் பயன்படுத்தி படித்து வந்துள்ளார். இருப்பினும், தேர்வறையில் அது போன்ற செயலிகளைப் பயன்படுத்த அனுமதியில்லை.
"எனக்கான தேர்வுகளை புஷ்பா எழுதினால் மட்டுமே எனது வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்," என்கிறார் பூமிகா வால்மீகி.
மேலும், "எப்போதும் மிகவும் பொறுமையாக, நான் தேர்வை எழுதி முடிக்கும் வரையில் நிதானமாக எனக்கு உதவுபவராக புஷ்பா இருந்து வருகிறார். என்னுடைய கவனத்தை அவர் எப்போதும் திசைதிருப்பியதில்லை," என்றும் அவர் கூறுகிறார்.
பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வுகளை புஷ்பாவின் உதவியுடன் எழுதிய ஏராளமானோர், அத்தேர்வுகளில் வெற்றி பெற பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இருப்பினும், அதனால் பட்சாதாபப்பட்டு தேவையற்ற உதவிகளை அளிப்பதில்லை.
"தேர்வர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ, அதை எழுதுவது மட்டுமே எனது பணி. தவறான பதில் ஒன்றை எழுதச் சொன்னாலும், அது தவறு என எனக்குத் தெரிந்தாலும், அந்த பதிலை எழுதுவதை விட வேறு எதுவும் நான் செய்ய முடியாது. இலக்கணப்பிழையுடன் ஒரு வாக்கியத்தை அவர்கள் எழுதச் சொன்னாலும், அதை அப்படியே எழுதுவதைத் தவிர, நான் அவர்களுக்குச் சொல்லித் தரக் கூடாது."
தேர்வு எழுதும் மாணவர்கள் எப்போதாவது ஆங்கிலச் சொற்களைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டால், அந்தச் சொற்களின் அர்த்தத்தை புஷ்பா சொல்லித் தருகிறார். "அது ஒன்று தான் நான் செய்யக்கூடிய உதவி," என்கிறார் புஷ்பா.

பட மூலாதாரம், புஷ்பா
புஷ்பா ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ஒரு விபத்தில் பாதிக்கப்பட்ட பின், புஷ்பாவையும், அவரது சகோதரரையும் வளர்க்க அவருடைய தாயார் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்.
"ஒரு கட்டத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாததால் நானும், எனது சகோதாரும் படிப்பை பாதியில் விடிவேண்டிய நிலை ஏற்பட்டது," என தனது இளமைப்பரும் பற்றி அவர் கூறுகிறார்.
இருப்பினும், யாரோ ஒருவர் செய்த உதவியால் அவர் கல்வி கற்றதாகவும், அந்த நன்றிக்கடனை சமூகத்துக்குச் செலுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
தனது வாழ்க்கையை ஓட்டுவதற்காக அவர் பல சிறிய வேலைகளுக்குச் சென்றிருந்தாலும், கடந்த சில ஆண்டுகள் மிகவும் கடினமான ஆண்டுகளாக அமைந்துவிட்டன.
2018-ம் ஆண்டு அவருடைய அப்பா இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து 2020-ல் அவருடைய சகோதரரும் இறந்துவிட்டார். அதற்குப் பின் ஓராண்டு கழித்து, வேலையில்லாமல் தவித்த புஷ்பாவுக்கு மேலும் பல மோசமான நிலைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
"2021 மே மாதம் எனது தாய் இறந்துவிட்டார். அதன் பின் சில மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நான் 32 தேர்வுகளை எழுதினேன். சில நாட்களில் ஒருநாளில் இரு தேர்வுகளை எழுதும் தேவையும் இருந்தது."
இப்படி பிறருக்காக தேர்வுகளை எழுதுவது, அவரது துயரங்களை மறக்க உதவியாக இருப்பதாகவும் அவர் நம்புகிறார்.

பட மூலாதாரம், புஷ்பா
அவருடைய சோர்வற்ற உழைப்பு யாராலும் கவனிக்கப்படவில்லை என்று சொல்ல முடியாது. மார்ச் 8, 2018 அன்று அவருடைய இடைவிடாத சமூகப் பணிக்காக அப்போதைய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந் புஷ்பாவுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோதியையும் புஷ்பா சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
புஷ்பா தற்போது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அந்நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஊக்குவிக்கும் உரைகளையும் நடத்திவருகிறார்.
ஆனால், இப்போதும் அவர், முடியாதவர்களுக்காக தேர்வுகளை எழுதி வருகிறார். ஐந்து மொழிகளில் அவரால் பேசவும், எழுதவும் முடியும். தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளை அவர் நன்றாக கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
"நான் என்னோட நேரத்தையும், ஆற்றலையும் பயன்படுத்தி பிறருக்கு உதவுகிறேன். பிறருக்காக நான் தேர்வுகளை எழுதினால், அது அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுகிறது," என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












