மதுரை மத்திய சிறையை இடமாற்ற மக்கள் எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி நியூஸ்
மதுரை மத்திய சிறை நூற்றாண்டை கடந்த சிறையாக இருந்து வருகிறது. மதுரையின் மையப்பகுதியில் இந்த சிறை அமைந்து உள்ளது. 2000க்கும் மேற்பட்ட ஆண், பெண் சிறை கைதிகள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச்சிறையை மதுரையின் புறநகர் பகுதிகளான இடையபட்டி, சிறுமலை அடிவாரத்தின் பகுதிக்கு இடமாற்றம் செய்யலாமா என அரசு ஆய்வு செய்தது. ஆனால் அதற்கு தொடக்கத்திலேயே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
மதுரை மத்திய சிறையை ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும்? பொது மக்கள் சிறை இடமாற்றத்தை எதிர்ப்பது ஏன்? தற்போதய சிறையில் கைதிகள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?
தமிழ்நாட்டில் சென்னை புழல், வேலூர், திருச்சி, சேலம், கோவை மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள், 5 பெண்களுக்கான சிறப்பு சிறைகள், 14 மாவட்ட சிறைகள் உட்பட 142 சிறைகள் உள்ளன.
இதில் சென்னை சிறை 77 ஏக்கர், வேலூர் சிறை 153 ஏக்கர், திருச்சி சிறை 289 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இதில் மதுரையில் உள்ள சிறைச்சாலை 35 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. மற்ற சிறைச்சாலைகள் அனைத்தும் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் உள்ளது.
மத்திய மதுரை சிறைச்சாலை 1865 ஆம் ஆண்டு முதல் 150 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. சிறையில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் மதுரை மத்திய சிறையை மாநகரப் பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு மாற்றலாம் என அரசு திட்டமிட்டது. ஆனால், அதில் தற்போது சிக்கல்கள் எழுந்து உள்ளன. மக்கள் புறநகர் பகுதியில் சிறையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இடையபட்டியில் மதுரை சிறை அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் புறநகர் பகுதியான இடையபட்டியில் 100 ஏக்கர் பரப்பளவில் மதுரை மத்திய சிறை அமைக்கப்பட இருப்பதாக அரசு அறிக்கை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள், இடையபட்டி அரிய வகை உயிரினங்கள் வாழும் பகுதி என்றும், அங்கு சிறை அமைந்தால் பல்லுயிர்ச் சூழல் தடைபடும் என்றும் புகார் தெரிவித்து சிறைச்சாலை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றையும் அளித்து உள்ளனர். இடையப்பட்டி ஒரு பல்லுயிர்ச் சூழல் பகுதி என்றும், இங்கு சிறைச்சாலையை அமைக்க கூடாது என்றும் மதுரை இயற்கை பண்பாட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன்.
பிபிசியிடம் பேசிய தமிழ்தாசன், “மதுரை இடையப்பட்டி பகுதி என்பது 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள கோவில் காடு( Sacred Groove) . இங்கு 300க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 100க்கும் மேற்பட்ட பறவை, பூச்சி வகைகள், புள்ளிமான்கள், அரிய வகை உயிரினங்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட முள் எலி, தேவாங்கு போன்றவை அதிகம் காணப்படுகிறது. மதுரை கடம்பம் என்று அழைக்கப்படும் கடம்பம் மரம் இங்கு இயற்கையாக வளர்கிறது. இதனால், இங்கு மதுரை மத்திய சிறையை இடமாற்றம் செய்யக்கூடாது. இடையப்பட்டியில் வசிக்கும் மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த காட்டை பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்."
"மேலும் அந்த பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தங்களில் ஒருவரை காட்டுப் பகுதியை பாதுகாக்க நியமனம் செய்து, இப்படி நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களுக்கு தங்களது நிலங்களில் விளையும் நெல்மணியின் ஒரு பகுதியைக் கொடுத்து வருகின்றனர். எனவே, இந்த இடையப்பட்டி காட்டை பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான அதனைத்து தரவுகளையும் நாங்கள் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்," என்கிறார்.
அதனைத் தொடர்ந்து சிறுமலை பகுதிக்கு மாற்றலாம் என அதிகாரிகள் முயன்ற பொழுது அங்கு வசிக்கக் கூடிய விவசாயிகளும் சிறை தங்கள் பகுதியில் அமைய எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.

சிறுமலை விவசாய பகுதியில் சிறை கூடாது என்கிறார் பாரத் விவசாயிகள் கிஷான் சங்கத்தின் துணைத்தலைவர் பார்தசாரதி.
பிபிசியிடம் பேசிய அவர், "மதுரை வாடிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், செம்மினிபட்ட, கச்சைக்கட்டி, குட்லாடம்பட்டி, எல்லையூர் ஆகிய பகுதிகளில் 1,200 ஏக்கர் நிலத்தை மேம்படுத்திய பட்டா நிலமாக முன்னாள் மதுரை ஆட்சியர் பி.சி சிரியாக் 1980 ஆம் ஆண்டு கச்சைகட்டி வனப்பகுதியில் இருந்து பிரித்து நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு அவர்களின் மறுவாழ்வுக்காக வழங்க உத்தரவிட்டார்."
"அதற்கான கல்வெட்டுகள் இன்றும் அங்கே இருக்கின்றன. அந்த பகுதியில் உள்ள நிலத்திற்கான பட்டா முக்கால்வாசி விவசாயிகளுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டே வழங்கப்பட்டது. அதில் இரண்டு தலைமுறையாக விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னமும் கால்வாசி விவசாயிகள் தங்களுக்கான பட்டாவை பெற முயற்சிகள் செய்து வந்தனர்,” என்றார்.
விவசாயிகள் நிலத்தில் பொருட்கள் அகற்றமா?
“இந்நிலையில் கடந்த மாதம் திடீரென மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையிலான அதிகாரிகள் தெத்தூர் கிராமத்திற்கு வந்து நிலங்களை காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், அது அரசுக்குச் சொந்தமான நிலம் என குறிப்பிட்டு இருக்கின்றனர். ஆனால் விவசாயிகள் அரசு தங்களுக்கு பட்டா வழங்கியுள்ளது என்றும், எனவே, நிலத்தை திரும்பி விட்டுக் கொடுக்க முடியாது என்றும் கூறிவிட்டனர். ஆனால், இதனை அதிகாரிகள் ஏற்க மறுத்து பட்டா இல்லாத விளை நிலத்தில் இருந்த நிலத்தின் தடுப்புகள், சில கட்டடங்களை போலீசாரின் உதவியுடன் ஜே.சி.பி வைத்து இடித்து அகற்றினர்.”
“இந்தப் பகுதியில் சிறை அல்லது வேறு எந்த அரசு துறை சார்ந்த கட்டிடங்களும் அமைக்கக் கூடாது என விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி, அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்திலும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் மனுக்களாக அளித்து இருக்கிறோம். அரசாங்கம் இதற்கு விவசாயிகளின் நலனை பாதுகாக்க நிலத்தை ஆய்வு செய்து பட்டா பெறாத விவசாயிகளுக்கு பட்டா வேண்டும் சிறுமலை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதால் அங்கே சிறை அமைக்கக் கூடாது என அரசிற்கு வலியுறுத்துவோம்", என பார்தசாரதி கூறுகிறார்.

மதுரை மத்திய சிறையில் இட நெருக்கடியில் கைதிகள் இருப்பதாக கூறுகிறார் ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரி ஜெயராமன்.
"நான் மதுரை, சென்னை, புழல், கோவை, திருச்சி சிறைகளில் பணியாற்றி இருக்கிறேன். மதுரை மத்திய சிறை 1200 கைதிகளை அடைப்பதற்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கு 2000க்கும் அதிகமான சிறைக் கைதிகள் உள்ளனர்."
"இதனால், சிறை வளாகத்திற்குள் சிறை கைதிகளின் நடமாட்டம் சுருங்கி உள்ளது. சிறையில் பணியாற்றும் அலுவலர்கள், போலீசார் வசிக்க குடியிருப்பு பகுதிகள் கட்டுவதற்கு சிறையில் இட வசதிகள் இல்லை. மேலும் மதுரை சிறைக் காவலர்கள் அணிவகுப்பு நடத்துவதற்கான இட வசதியும் குறைவாக உள்ளது," என்றார்.

மழைக்காலங்களில் சிறை சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
தொடர்ந்து பேசிய அவர், "மதுரை மத்திய சிறை தற்போது நகரின் மத்தியில் உள்ளது. சிறைக்கு சொந்தமான பல பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆக்கிரமிப்புகளால் சுருங்கி விட்டது.
தற்போது சிறையை சுற்றி சாலைகள் அமைந்து இருப்பதால் சிறை பள்ளத்திற்குள் சென்றுவிட்டது. இதன் காரணமாக மழை காலங்களில் சிறை வளாகத்தில் மழை நீர் தேங்கி விடும். அதனை உறிஞ்சும் வாகனம் மற்றும், மின் மோட்டர் உதவியுடன் மழைநீர் அகற்ற வேண்டிய சூழல் உள்ளது."
மதுரை மத்திய சிறைச்சாலையைச் சுற்றிலும் சாலைகள் இருப்பதால் சிறைக்குள் ஏதாவது சிறு பிரச்னை என்றாலே சிறையில் இருக்கும் கைதிகள் மரத்தின் மீது ஏறி கற்கள், தட்டுக்களை தூக்கி சாலையில் எறிவது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்து இருக்கின்றன.
இது மாதிரியான விரும்பத் தகாத நிகழ்வுகளை தவிர்க்க மதுரை மத்திய சிறையின் இடமாற்றம் அவசியமாகிறது," என விளக்கினார்.
"சிறையில் அதிகாரிகள் அலுவலகம், அதிகாரிகள், காவலர்கள் குடியிருப்பு, புதிய கைதிகள் அறை, மருத்துவ வசதி, தூக்கு மேடை, தூக்குக் கைதிகள் அறைகள், உயர் பாதுகாப்புப் பிரிவு (High Security Block), மேம்படுத்தப்பட்ட சிறை, உயர்கோபுர அறைகள், மனநல கைதிகள் அறை, தொழிற்சாலைகள், உணவுப் பொருள் பாதுகாப்பு அறை, சமையலறைகள், தொழில்நுட்ப அறை, அடையாள அணிவகுப்பு பகுதி, காவலர்கள் அணிவகுப்பு மைதானம், ஆயுதங்கள் பாதுகாப்பு அறை என அனைத்தும் இருந்தால் மட்டுமே அது ஒரு முழுமையான சிறையாக இருக்கும்", என குறிப்பிடுகிறார் ஓய்வு பெற்ற சிறை அதிகாரி.

மதுரை மத்திய சிறைச் சாலையை இடம் மாற்றம் செய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது என்கிறார் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி.
"மதுரை மத்திய சிறையில் 2000 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். இங்கு இடப்பற்றாக் குறையால் சிறைச்சாலையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய சிறைத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
அதனடிப்படையில் மதுரை இடையப்பட்டி பகுதியில் சிறை வளாகம் அமைக்கப்படும் என அரசிடம் இருந்து அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது. மீண்டும் அதிகாரப்பூர்வமாக தகவல் அரசிமிருந்து வந்தவுடன் அதனை பகிர்கிறேன்", என்றார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












