மிக்ஜாம் புயல்: 'உதவிக்கு யாருமே வரல' சேற்றில் தவிக்கும் செட்டித்தோட்டம் மக்கள்

- எழுதியவர், சாரதா வி & அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
கரை புரண்டு ஓடும் அடையாற்றங்கரையோரம் அமைந்துள்ளது செட்டித்தோட்டம்.
சென்னை சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் இந்தப் பகுதி மிக்ஜாம் புயலால் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது.
கழிவு நீரால் வீடுகளும் வீதிகளும் அலங்கோலமாக காட்சியளித்தன.
அங்குள்ள நிலையை அறிய பிபிசி தமிழ் நேரடியாக கள ஆய்வு செய்தது.
வெறுங்கையால் கழிவுகளை அகற்றும் மக்கள்
மிக்ஜாம் புயலின்போது அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரத்தில் வெள்ள நீர் 10 அடி உயரம் வரை சென்றது.
கரையோரத்தில் இருக்கும் செட்டித்தோட்டத்தில் தரைதளத்தை மூழ்கடித்துச் சென்றது வெள்ளம். அப்போது பாதுகாப்பு கருதி நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள், புதன்கிழமை வெள்ளநீர் வடிந்ததையொட்டி தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பினர்.
உடைமைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. காலை பொழுதில், வெறுங்கைகளால் சேற்றையும் அடர்த்தியான கழிவுகளையும் அகற்றி, கழிவுநீர் தொட்டியையும் இப்பகுதி மக்கள் சீர் செய்து செய்தனர்.
பயன்படுத்த முடியாத பொருட்களை வீடுகளில் இருந்து அகற்றி தெரு முனையில் குவித்தனர். வீட்டுக்குள் தேங்கிய கழிவுநீரை பாத்திரத்தைக் கொண்டு வெளியேற்றிக் கொண்டிருந்த ரமேஷை சந்தித்துப் பேசினோம்.

"கட்டில், பீரோ, டிவி என வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது. 2 நாட்களாக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். இந்தப்பகுதியை பார்வையிட யாரும் வரவில்லை. கழிவுநீர் தொட்டியில் மண் அடைத்திருப்பதால் கழிவுநீர் செல்லவும் வழி இல்லை. வெள்ளம் வந்தபோது பள்ளிக்கூடத்தில் வந்து தங்குமாறு அழைத்தார்கள். கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் நாங்கள் அங்கு செல்லவில்லை. யாருக்கும் இடையூறாக இருக்க வேண்டாம் என்றெண்ணி இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் தங்கிக்கொண்டோம்," என்றார்.
"பாதி துணிமணிகளை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. மீதமுள்ள துணிகளை தொய்ந்து முடிந்தபாடில்லை. 4 நாளாகிவிட்டது. ஆட்டோவில் யாரேனும் வந்து 4 பொட்டலங்களை தந்து செல்கிறார்கள். பெரியளவில் இங்கு நிவாரண உதவிகள் இல்லை," என ரமேஷின் தாயார் பென்சிலம்மா கூறினார்.

மின் இணைப்பு இருந்தும் பயன்படுத்தாத மக்கள்
ஒரு அடி எடுத்து வைத்தால் கூட சேற்றில் வழுக்கி விழக்கூடிய பாதையை தான், குழந்தைகள் உட்பட அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர், சர்க்கரை நோயால் கால் பாதிக்கப்பட்ட கலைச்செல்வியும் விதிவிலக்கல்ல. காலில் புண் ஏற்பட்டு நடப்பதற்கு சற்று சிரமப்பட்டாலும் கலைச் செல்வி காலில் போடப்படட கட்டையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
"சுமார் 50 ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கிறோம். இதுவரை 5 - 6 பெருவெள்ளத்தை பார்த்திருக்கிறோம். கழிவுகளை நாங்களே அகற்றுகிறோம்," என்றார்.
கலைச்செல்வியைப் போலவே பலரும் உதவியை எதிர்பார்க்காது கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித உபகரணங்களுமின்றி வெறுங்கையால் சேற்றையும் கழிவுகளையும் அகற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.
சென்னையின் பல இடங்களில் மின் இணைப்பு கிடைக்கவில்லை என்பது புகாராக இருக்கிறது. ஆனால் செட்டித் தோட்டத்தில் மின் இணைப்பு வந்த பிறகும் அதைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மழை நீரில் முழுமையாக வடிவதற்கு முன்பே, எந்தவித அறிவிப்புமின்றி மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதால் பல வீடுகளில் எர்த் பிரச்னை இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதன் விளைவாக பலரும் மின்சாரம் இருந்தும் அதை உபயோகிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

'அரசு சொன்னதை செய்யவில்லை'
செட்டித்தோட்டம் குடியிருப்புவாசிகள் நல சங்கத்தின் செயலாளர் ஜீ.வி. கிருஷ்ணராஜை சந்தித்துப் பேசினோம்.
"1962-இல் இருந்து இந்த பகுதியில் வசிக்கிறேன். பல வெள்ளங்களைப் பார்த்திருக்கிறேன். இது வெள்ளம் வரக்கூடிய பகுதிதான். இருந்தாலும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான வசதிகளை அரசு செய்துத்தர வேண்டும். மழை வெள்ளத்தால் 4 நாட்களாக அவதியடைந்து வருகிறோம். ஒரு அதிகாரி கூட வரவில்லை. எங்கள் குறைகளை கேட்கவில்லை. பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என அரசு சொன்னது. ஆனால் குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இப்பகுதி மக்கள் டிசம்பர் 3, 4-ஆம் தேதிகளில் பட்டினி கிடந்தார்கள்," என்றார்.

"வெள்ளம் வரும்போது முன்பு முறையான எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் இந்த முறை அப்படி எந்த எச்சரிக்கையும் அரசு தரப்பில் இருந்து விடுக்கப்படவில்லை. ஆற்றங்கரையோரைம் அரசு தடுப்புச் சுவரை எழுப்பி வருகிறது. ஆனால் இந்த பனி முழுமையாக நடைபெறவில்லை. சுமார் 300 மீட்டர் வரை தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். அதை செய்துவிடடால் இந்த பகுதி அதிகளவு பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்காது," என கிருஷ்ணராஜ் கூறினார்.
இதற்கு நடுவில் சொற்பமான மாநகராட்சி ஊழியர்களே துப்புரவு பணியில் ஈடுபட்டதை காண முடிந்தது. கழிவுநீர் அகற்றும் பணியை மேற்கொள்ளவும் பெரியளவில் ஊழியர்கள் பணியமர்த்தப்படவில்லை. துப்புரவு பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி ஓட்டுநர் யாகப்பன் கூறுகையில், "காலை 8.30 மணிக்கு இங்கு வந்தோம். 5 பேர் கொண்ட பணியாளர்கள் குழு இப்பகுதியை முழுமையாக தூய்மைப்படுத்தும் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 2 லோட் குப்பைகளை அகற்றியுள்ளோம்," என்றார்
'இயல்பு வாழ்க்கை திரும்புகிறது'

இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை அவரது வீட்டின் அருகே சந்தித்தோம். வீடுதோறும் சென்று பால் பாக்கெட் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார்.
செட்டித்தோட்டம் பாதிப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, "செம்பரம்பாக்கத்திலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர், அடையாற்றங்கரையோர பகுதி மக்களை அதிகம் பாதித்துள்ளது. தற்போது குறைவான நீரே திறந்து விடப்படுவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். ஏற்கனவே அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்கள் இன்று முதல் அப்பகுதியில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். வீடு தோறும் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க உள்ளேன்," என்றார்.
செட்டித்தோட்டத்தில் இருந்து திரும்பும்போது எங்கள் கால்கள் முற்றிலுமாக கழிவு நீரில் ஊறிப்போயிருந்தன. இயல்பு வாழ்க்கைகுத் திரும்ப இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்றே கள நிலவரம் உணர்த்தியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












