வட மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸின் தோல்விக்குப் பிறகும் ராகுலை மோதிக்குப் போட்டியாகக் கருத முடியுமா?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

“காங்கிரஸின் பிரச்சனை எனக்கு புரிகிறது. பல ஆண்டுகளாக அதே தோல்வியடைந்த தயாரிப்பை மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி செய்வது. ஒவ்வொரு முறையும் அந்த முயற்சி தோல்வியடைகிறது. இப்போது அதன் விளைவு, வாக்காளர்கள் மீதான அவர்களது வெறுப்பும் கூட விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. "

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோதி இவ்வாறு கூறியிருந்தார்.

உண்மையில் இப்படிச் சொல்லப்படுவதற்கு காரணம், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்பதால். இது தவிர, பல மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், ஒன்று காங்கிரஸ் அரசு படுதோல்வி அடைந்தது அல்லது எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் அங்கு அவர்களால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை.

இந்த பட்டியலில் வட இந்தியாவின் பல மாநிலங்கள் உள்ளன. அங்கு காங்கிரஸிடம் இருந்து மக்களை வசீகரிக்கும் ஒரு உத்தி எதிர்பார்க்கப்பட்டது, ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரம் அதில் இடம் பெற்றிருந்தாலும் கூட, அது வேலை செய்யவில்லை.

ராகுல் காந்தி இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்படவில்லை, ஆனால் கட்சி காந்தி குடும்பத்தையே சுற்றி வருகிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மத்திய பிரதேசத்திலும் பாஜக-விடம் படுதோல்வி அடைந்துள்ளது. அதே சமயம் மிசோரமில் ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

இருப்பினும் தெலங்கானாவில் கேசிஆர்-ன் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது.

ஐந்தில் நான்கில் தோல்வி, இது காந்தி குடும்பத்தின் தோல்வியா அல்லது ராகுல் காந்தியின் தோல்வி என்று சொல்ல வேண்டுமா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

ராகுல் காந்தியின் தோல்வி எவ்வளவு பெரியது?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜக-வின் தேர்தல் பிரச்சாரம் குறித்துப் பார்த்தால், மாநிலத் தலைவர்கள் மற்றும் பிற மத்தியத் தலைவர்கள் பின்தங்கியிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதி பரப்புரையில் முன்னிலையில் இருந்தார்.

காங்கிரஸின் தேர்தல் பரப்புரையை எடுத்துக்கொண்டால், மாநில தலைவர்கள் முன்னிலையில் இருந்தனர். ஆனால் ராகுல் காந்தி பின்தங்கி இருந்தார். ராஜஸ்தானில் குறைவாகவே பரப்புரை செய்தவர், தெலங்கானாவில் முன்னணியில் இருந்தார்.

தெலங்கானாவைத் தவிர மற்ற மாநிலங்களில் ராகுல் காந்தியின் முகமும் அவர் முன்னெடுத்த கோஷங்களும் தீவிரமாகப் பயன்படுத்தப்படவில்லை. சத்தீஸ்கரைப் பற்றி நாம் பேசினால், அங்கு பூபேஷ் பாகேல் தனது அரசாங்கத்தின் சிறப்புகளை குறித்து பேசிக் கொண்டே இருந்தார். அதேபோல், ராஜஸ்தானிலும் அசோக் கெலாட் முன்னிலை வகித்தார்.

மத்திய பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், அங்கு தேர்தல் பொறுப்பை கமல்நாத் ஏற்றுக்கொண்டார். தெலுங்கானா தேர்தல் பொறுப்பு ரேவந்த் ரெட்டியின் கைகளில் இருந்தது.

இந்த வகையில் பார்த்தால், வெவ்வேறு மாநிலங்களில் காங்கிரசுக்கு வெவ்வேறு முகங்கள் இருந்தன, எனவே இந்தத் தோல்விகளுக்கு ராகுல் காந்தி தான் பொறுப்பேற்க வேண்டுமா?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் பற்றிய செய்திகளை சேகரிக்கும் ஒரு பத்திரிகையாளர் சொல்வது, (தனது பெயர் கூற அவர் விரும்பவில்லை) "காங்கிரஸ் தோல்வியடைந்தால், மக்கள் அதன் தலைமையின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றும், தலைமை என்பது காந்தி குடும்பம் என்றும் அர்த்தம்."

இது குறித்து மேலும் விளக்கி அவர் கூறியதாவது, தேர்தலின் போது, மாநில மற்றும் மத்திய காங்கிரஸ் தலைவர்கள் சமமாக பரப்புரை செய்ததால், இது பாகேல், கெலாட் மற்றும் கமல்நாத்தின் தோல்வி. மத்திய அளவில் இது காந்தி குடும்பத்துக்கும் ராகுல் காந்திக்கும் ஏற்பட்ட தோல்வி.

மூத்த அரசியல் ஆய்வாளர் நீரஜா சவுத்ரி கூறுகையில், இந்த சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியின் முகம் முன்னிலைப்படுத்தப்படவில்லை அல்லது அவர் மீது அதிக ஈர்ப்பு இல்லை.

அவர் மேலும் கூறியது, “எல்லா மாநிலங்களிலும் உள்ளூர் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். சத்தீஸ்கரில் வாக்காளர்கள் பலர் தங்கள் வேட்பாளர்கள் மீது கோபத்தில் இருந்தாலும் கூட பாகேலின் தலைமையால் காங்கிரசுக்கு வாக்களிப்பதாக என்னிடம் கூறினார்கள். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அங்கு முதல்வர் யார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

“ராஜஸ்தானில், மக்கள் வழக்கமாக கெலாட்டைப் பற்றி பேசுவார்கள், ஆனால் ராகுல் காந்தியைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை. ராகுல் தனது பெரும்பாலான பொதுக்கூட்டங்களை தெலங்கானாவில் நடத்தினார். இந்த வகையில், இது ராகுல் காந்தியின் தோல்வி அல்ல, மாநிலத் தலைவர்களின் தோல்வி, ஏனெனில் தேர்தலில் முன்வரிசையில் கூட அவர் இல்லை."

காங்கிரஸை அதிகமாக புரிந்து வைத்திருக்கும் மூத்த அரசியல் ஆய்வாளர் ரஷீத் கித்வாய் கூறுகையில், கட்சியின் பெரிய தலைவராக இருப்பவரிடம் மட்டுமே வெற்றிக்கான பொறுப்பு உள்ளது என்ற ஒரு பிம்பம் அரசியல் கட்சிகளால் உருவாக்கப்படுகிறது.

காங்கிரஸ் இந்த முறை சட்டசபை தேர்தலை மாநில தலைவர்கள் வசமே கொடுத்து விட்டதாகவும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரகர்களாக மட்டுமே இருந்ததாகவும், அதனால் தான் இது ராகுல் காந்தியை சுற்றி நடக்கும் தேர்தல் அல்ல என்று தான் உணர்வதாகவும் அவர் கூறுகிறார்.

பாரத் ஜோடோ யாத்ரா

பட மூலாதாரம், ANI

'பாரத் ஜோடோ யாத்ரா'-வின் தாக்கம் என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னிந்தியாவின் கன்னியாகுமரியில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை தொடங்கினார். ஏறக்குறைய 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரமும், 137 நாட்களும் தொடர்ந்த இந்தப் பயணத்தில், இந்தியாவின் தெற்கிலிருந்து வடக்கு வரை நடந்தார்.

இந்தப் பயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வழியாக தெலங்கானாவுக்கும் சென்றது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது, இந்த வெற்றிக்கான பெருமையும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவுக்கு வழங்கப்பட்டது.

பாரத் ஜோடோ யாத்திரை வட இந்தியாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா? இந்த கேள்விக்கு நீரஜா சவுத்ரி பதில் கூறுகையில், பாரத் ஜோடோ யாத்ரா காரணமாக ராகுல் காந்தியின் இமேஜ் மாறிவிட்டது, மக்கள் அவர் பேசுவதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள், அவர் நேர்மையானவர் என்று நம்புகிறார்கள், ஆனால் அவரை பிரதமர் மோதிக்கு போட்டியாக மக்கள் கருதவில்லை.

பிரதமர் பதவிக்கு, நரேந்திர மோதிக்கு ராகுல் காந்தி போட்டியா என்று எந்த இளைஞரையாவது பார்த்து கேட்டால், இந்தக் கேள்வியைக் கேட்டு சிரிப்பு வருகிறது என்ற பதில் உங்களுக்குக் கிடைக்கும். அவருடைய பாரத் ஜோடோ யாத்திரையை இளைஞர்கள் பாராட்டினாலும், அவர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை, ஒரு திறமையான தலைவராக ராகுல் காந்தியை அவர்கள் பார்க்கவில்லை என்று நீரஜா சவுத்ரி கூறுகிறார்.

இதனுடன், பாரத் ஜோடோ யாத்திரையின் வெற்றியையும் கட்சி பெரிதுபடுத்துகிறது என்றும், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது அங்குள்ள உள்ளூர் தலைவர்களால் தான் என்றும் நீர்ஜா கூறுகிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதியால் என்ன பலன்?

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராகுல் காந்தியின் பேச்சு கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாக இருந்தது, அதில் அவர் மாநில அரசை புகழ்ந்தார், ஆட்சி அமைத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார்.

அதேசமயம், மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து பேசி வந்தார்.

இதேபோல், தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தின் போது, கேசிஆர் மற்றும் பிரதமர் மோதியை கடுமையாக தாக்கி பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பல சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என அவர் வாக்குறுதி அளித்து வந்தார், ஆனால் உள்ளூர் தலைவர்கள் இந்த வாக்குறுதியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், INC/RAHUL GANDHI

உள்ளூர் தலைவர்கள் தங்கள் சாதி சமன்பாடுகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து வாக்கு சேகரித்தனர்.

இதனுடன், 'வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறக்க வந்தேன்' என்ற தனது பழைய முழக்கத்தையும் அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். ஜாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி எனும் மந்திரம் தேர்தலில் பலிக்கவில்லை என்பதை சட்டசபை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இதனுடன், இந்த சட்டமன்றத் தேர்தல்களில் வகுப்புவாத மற்றும் வெறுப்பு அரசியல் குறித்த பிரச்சனையையும் ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பினார். இதுகுறித்து ரஷித் கித்வாய் கூறுகையில், "சித்தாந்தப் போரில் ராகுல் காந்தி நிச்சயம் தோற்றுவிட்டார்.

“அன்பின் கடை நடத்துவதாக ராகுல் காந்தி கூறுகிறார் ஆனால் இந்த கடை மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாழாகிவிட்டது. இதற்கான காரணங்களை அவர்கள் கண்டறிய வேண்டும். கலாச்சார தேசியவாதம் என்று வரும்போது, காங்கிரஸில் உள்ள அனைத்து தலைவர்களும் வேறு மாதிரியாக பேசுகிறார்கள், அதே சமயம் பாஜகவும் நரேந்திர மோடியும் நேரடியாக விஷயத்தை பேசுகிறார்கள்"

“ராகுல் காந்தியின் தவறு என்னவென்றால், அவரால் தனது சித்தாந்தத்தை ஒருபோதும் விளக்க முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பில் அவரது கட்சியில் ஒருமித்த கருத்து இல்லை. 2019 லோக்சபா தேர்தலில், அவர் ‘சௌகிதார் சோர் ஹை’ என்ற முழக்கத்தைக் முன்னெடுத்தார், அதே நேரத்தில் அவரது சொந்தக் கட்சித் தலைவர்கள் இந்த முழக்கத்தைத் தவிர்த்தனர்.

ராகுல் காந்தியின் முழக்கத்தை உள்ளூர் தலைவர்களால் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கணிசமான அளவில் பிற்படுத்தப்பட்டோர் பாஜக பக்கம் உள்ளனர். ஜாதிவாரி கணக்கெடுப்பின் அர்த்தத்தை இந்த சமூகத்திற்கு காங்கிரஸால் விளக்க முடியவில்லை. காங்கிரஸால் நேரடியாக பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை." என ரஷித் கித்வாய் கூறுகிறார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

2024 தேர்தலில் ராகுல் காந்தி, மோதிக்கு ஒரு பெரும் சவாலாக இருப்பாரா?

காங்கிரசில் ராகுல் காந்தி தலைமைப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, கட்சி அதிக தோல்விகளை சந்தித்துள்ளது, வெற்றிகள் குறைவாகவே உள்ளன. இதற்கிடையில், 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது.

2024ல் பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கு ஒரு சவாலான போட்டியாளராக இருக்க ராகுல் காந்தியால் முடியுமா? இது குறித்து ரஷித் கித்வாய் கூறுகையில், மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் தலைவராகவும், ராகுல் காந்தி கட்சியின் எம்.பி.யாகவும் இருப்பதால், ராகுலின் பங்கை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

“2024ல், இந்திய கூட்டணியின் முகமாக அவர் இருப்பாரா அல்லது வெறும் பிரச்சாரகராக இருப்பாரா என்பதை ராகுல் காந்தி முடிவு செய்ய வேண்டும். நீங்கள் எதை அடைய முயற்சிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதைப் பற்றி எங்களிடம் தெளிவாக கூறுங்கள். 2019-ல் கூட ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளாரா இல்லையா என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தன. அவர் இந்திய கூட்டணிக்கு ஆதரவாக தான் உள்ளாரா?" என்று கேள்வி எழுப்புகிறார் ரஷித் கித்வாய்.

நீரஜா சவுத்ரி கூறுகையில், 'அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவின் கள நிலவரம் மிக வேகமாக மாறி வருகிறது, அதற்கான பதில் தான் நரேந்திர மோடி. 2024ல் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று எங்கும் கூறப்படவில்லை. ராகுல், ராகுல் என்று காங்கிரஸ் தொடர்ந்து பேசினால், மோடியின் முன் வந்து தான் நிற்பார்கள்.

இன்றைய நிலை குறித்து பேசினால், பிரதமர் நரேந்திர மோடியுடன் போட்டியிடும் தகுதி ராகுல் காந்திக்கு இல்லை. நாளை இருக்குமா இல்லையா என்று சொல்ல முடியாது. இந்த நான்கு மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வியை ராகுல் காந்தியின் தோல்வி என்று கூறக்கூடாது, அதேசமயம் தெலுங்கானாவில் காங்கிரஸின் வெற்றிக்குக் காரணம் கேசிஆரின் திமிர் தான். அங்கு காங்கிரஸின் அமைப்பு நன்றாக இருந்தது, மக்கள் மாற்றத்தை விரும்பியதால், அவர்கள் உடனடியாக காங்கிரசை தேர்ந்தெடுத்தனர்.

ராகுல் காந்தி குறித்த பிம்பத்தை உருவாக்குவதில் பாரத் ஜோடோ யாத்ரா மிக முக்கிய பங்கு வகித்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர், அவர் ஒரு கடின உழைப்பாளி மற்றும் தீவிர அரசியல்வாதி என அவரது பிம்பம் உருவாக்கப்பட்டது. அதானி முதல் சீனா வரையிலான பிரச்சினைகளில் மோடி அரசாங்கத்திற்கு அவரால் நெருக்கடிகளை கொடுக்க முடிந்தது.

இதற்கிடையில், இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்திய கூட்டணி உருவானது. அதன் கூட்டங்களில், எதிர்க்கட்சித் தலைவர்களும் ராகுல் காந்தி குறித்து தீவிரமாக பேசினர்.

இதன் காரணமாக ராகுல் காந்தியின் அரசியல் அந்தஸ்து தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் இந்தி பெல்ட்டின் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் அடைந்த மோசமான தோல்வி ராகுல் காந்தியின் வளர்ந்து வரும் அந்தஸ்துக்கு ஒரு பெரிய அடியாகும். இப்போது அவர்கள் புதிய யுக்திகளை உருவாக்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)