சென்னை வெள்ளம்: பாதுகாப்பாக இருக்க இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்!

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சில அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் முதல் தளம் வரை வெள்ளநீர் புகுந்தது கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சாலையில் ஒரு முதலை சென்ற காணொளி ஒன்று பகிரப்பட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
வெள்ள நீரில் சாக்கடை கலந்திருப்பதால் ஆற்று நீர், கடல் நீரை விட அது மிகவும் ஆபத்தானது. இதிலிருந்து தொற்றுகள் எளிதாகப் பரவும். அதுமட்டுமின்றி பல்வேறு தொழிற்சாலைகள் சுற்றி இருக்கும் சென்னையில் வெள்ளம் வந்துள்ளதால் அங்கு ரசாயன கலவைகள் நீரில் கலந்து அது பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தலாம்.
ஒரு சிலர் இந்த வெள்ளத்தில் நீரில் இழுத்துச் செல்லப்படும் போது காயமும் அடைந்திருக்கலாம். எனவே அத்தகைய வெள்ள நீர் பாதிப்பில் இருந்து மீள என்னென்ன செய்யவேண்டும்?
சென்னை மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பும் என நம்பிக்கை உள்ள நிலையில் வெள்ளத்துக்குப்பின் வெள்ள நீரால் பாதித்த உடல், உடமை, வீடு உள்ளிட்டவற்றை எப்படி சுத்தம் செய்வது?
வெள்ளத்துக்குப் பின்பான நோய்களில் இருந்து நம்மையும், குடும்பத்தினரையும் எப்படி பாதுகாப்பது?
மத்திய அரசின் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின், வெள்ளத்துக்குப் பின்பான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றைக் கீழே தொகுத்தளிக்கிறோம்.
ஆழம் குறைவு என கணிக்காதீர்கள்
வெள்ள நீரில் நடக்கும்போது நீளமான குச்சியை கையில் வைத்துக்கொண்டு அடுத்து கால் வைக்கும் இடத்தில் உள்ள ஆழத்தை சரிபார்க்க வேண்டும்.
நீருக்கடியில் இருக்கும் குழிகள், திறந்துகிடக்கும் சாக்கடை ஆகியவற்றுக்குள் விழாமல் இருக்க இது உதவும்.
ஆபத்தான சுரங்கப் பகுதிகளில் அல்லது தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் வண்டியை ஓட்டிச் சென்று சிக்கிக் கொள்ளக் கூடாது.
என்னதான் நீச்சல் தெரிந்திருந்தாலும் வெள்ளம் போல் பாய்ந்து வரும் நீரில் எத்தகைய பெரிய, சிறிய வாகனமாக இருந்தாலும் அது உங்களைக் காப்பாற்றாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாகனங்களோடு நீங்களும் எளிதில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு விடக்கூடும்.
வீட்டைச் சுத்தப்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
வெள்ளம் பாதித்த வீட்டுக்குள் செல்வதற்கு முன் சிலவற்றை கவனிக்க வேண்டும்.
- வீடுகளின் வெளிப்புறச் சுவற்றில் ஏதேனும் கண்ணுக்குத் தெரியும்படி பெரிய விரிசல் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
- இதை அடுத்து முதலில் ஜன்னல்களை திறக்க முயற்சிக்க வேண்டும்.
- கதவை அடித்து திறப்பது, அதிவேகமாக திறப்பது நல்லதல்ல. வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் ஆனது அடைத்து வைக்கப்பட்டிருக்கும். அதனை அதி வேகத்தோடு திறந்தால், வீட்டில் உள்ள பொருட்கள் நீரோடு அடித்துச் சென்று உங்களையும் அந்த அழுத்தத்தில் கீழே வீழ்த்த வாய்ப்புள்ளது. கதவானது வீட்டில் மொத்த கட்டமைப்பையும் ஒட்டி இருப்பதால் அதனை வேகமாக திறப்பது வெள்ளத்தில் ஊறிப்போன கட்டுமானத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
- வீட்டுக்குள் நுழைந்த உடன் ஸ்விட்ச், மின் சாதனங்களை தொட வேண்டாம். பேட்டரி அல்லது மொபைல் டார்ச் லைட் பயன்படுத்துவது நல்லது.
- மரத்தில் ஆன இன்டீரியர் பொருட்கள், ஷோகேஸ்களை சுத்தமாக துடைத்து சற்றும் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
- இரண்டு நாட்களுக்கு மேல் ஈரம் இருந்தால் நோய்த் தொற்று பரவுவதுடன், அதில் பூச்சி பிடித்து, அரித்து உதிரவும் வாய்ப்புள்ளது.
- கழற்றும் படியான இன்டீரியர் அறைகலன்களை கழற்றி வெயிலில் வைத்து காய வைப்பது நல்லது.
- சாக்கடை கலந்த வெள்ள நீரில் ஊறிப்போன கால் மிதியடி, மெத்தை, தலையணையை மறுமுறை பயன்படுத்துவதை முடிந்த அளவுக்குத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் ட்ரை கிளீனிங் கொடுத்து பயன்படுத்தலாம்.

பட மூலாதாரம், Getty images
மின்சாதனங்களை மீண்டும் இயக்கும் முன் என்ன செய்ய வேண்டும்?
- மின் சாதனப் பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் முன், எலக்ட்ரீசியனை வைத்து அதை சோதிக்கவேண்டும். இல்லையேல் ஷாக் அடிக்கும் வாய்ப்பு உண்டு.
- வெள்ளத்தின் போது மின்கம்பிகள் கீழே தண்ணீரில் கிடக்கலாம். கவனம்.
- முக்கியமான புகைப்படம், ஆவணங்கள் நீரில் நனைந்திருந்தால் கவனத்துடன் கையாள வேண்டும். காய வைத்தபின் அதனை பிரித்துப் பார்க்கலாம்.
- வெள்ள நீரால் பாதித்த உணவுப் பொருட்களைக் களையவும். பாக்கெட் அல்லது டின்னில் அடைத்து வைக்கப்பட்டு பிரிக்கப்படாமல் இருந்தால் மட்டும் பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கலாம்.
- வீட்டுக்குள் விலங்குகள் அல்லது பறவைகள் இறந்து கிடந்தால், நகராட்சியிடம் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து ப்ளீச்சிங் பவுடர் அல்லது கிருமி நாசினி அடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்களே வீட்டில் பிளீச்சிங் அடிக்க வேண்டும் என நினைத்தால் 18 லிட்டர் தண்ணீரில் ஒரு கப் அளவு பிளீச்சிங் சேர்த்து தூய்மைப் படுத்தலாம்.
- வீட்டின் தரை மற்றும் சுவர்களை துடைத்து அதன் கிருமி நாசினி தெளிப்பது நல்லது.
- 25 கிலோ எடைக்கு மேல் உள்ள பொருட்களை ஒருவராகவே நகர்த்துவது தூக்குவது போன்ற பணிகளை ஈரமான நேரத்தில் செய்ய வேண்டாம். வழுக்கி விழ வாய்ப்பு அதிகம். யாரையேனும் உதவிக்கு அழைப்பது நல்லது
தண்ணீரை எப்படிப் பருக வேண்டும்?
- முதலில் அத்தியாவசியப் பொருட்களைச் சுத்தம் செய்தபின், மற்ற பொருட்களை சுத்தம் செய்யலாம்.
- வெள்ளம் பாதித்த சில நாட்களுக்குப் பிறகு, போர் தண்ணீர், பைப் தண்ணீர், கிணற்று நீர், ஆர்.ஓ என்ற சுத்திகரித்த நீராகவே இருந்தாலும், காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டி பருகுவது நல்லது. மனிதக் கழிவுகளும் கால்நடை கழிவுகளும் தண்ணீரில் கலந்து இருக்கலாம்.
- வீட்டு உபயோக பொருட்கள் மருத்துவம் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் ரேடியாலஜிக்கல் கழிவுகள் வெள்ளத்தில் இருக்கலாம். கொடிய நோய் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியேறிய கழிவுகள் கூட பயோ வேஸ்ட் ஆக குப்பையில் கிடந்து அது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம். எனவே நோய்களில் இருந்து காத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
- நிலக்கரி கழிவுகள் கார்சினோஜெனிக் தன்மை (புற்றுநோய் உண்டாக்கும் தன்மை) கொண்டவை. இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஆர்சீனிக் குரோமியம், மெர்குரி உள்ளிட்டவை உலோகங்கள் அதிகம் இருக்கும்.
- வெள்ள நீரில் அடித்து வரப்படும் வாகனங்கள், குப்பைகள் உள்ளிட்டவை உங்கள் உடலைக் கிழித்து காயத்தை ஏற்படுத்தலாம். எனவே கவனமக இருக்கவேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
விலங்குகள், பூச்சிகளை எப்படி கையாள வேண்டும்?
- காட்டு விலங்குகளும், தெருவிலங்குகளும், ஊர்வன மற்றும் பாம்பு வகைகளும் இந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் நடமாடலாம். வீடுகளுக்குள் கூட புகுந்து விட வாய்ப்பு உள்ளது. அதனால் கவனம் தேவை.
- காயங்கள் ஏதேனும் இருந்தால் அதில் இன்பெக்க்ஷன் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே ஒரு டிடி ஊசி போட்டுக் கொள்வது நல்லது.
- தோல் அரிப்பு, குடல் சார்ந்த நோய் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
- தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளதால், படை, சொறி போன்ற நோய்களும் வரலாம். எனவே அவசியம் இல்லாத நிலையில் வெள்ள நீருக்குள் இறங்க வேண்டாம்.
- வெள்ளம் பாதித்த நேரத்தில் விலங்குகள் பூச்சிகள் ஊர்வன உள்ளிட்டவை ஆங்காங்கே இடம்பெயர்ந்து விடும். எனவே தங்களை அறியாமல் ஏதேனும் பூச்சி கடித்திருந்தால் அதனை கவனிக்கவும்.பெரும்பாலும் கட்டுவிரியன் பாம்பு கடித்தால் வலி தெரியாது. என்ற போதும் அது விஷத்தன்மை உள்ள பாம்பு என்பதால் சற்று நேரத்தில் வாயில் நுரை தள்ளி, மயக்கம் ஏற்பட்டு, சுயநினைவு இழந்து, உடலில் நீலம் பூத்து விட வாய்ப்பு உள்ளது.
எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
- ஒருவேளை வெள்ள நீரைக் கடந்துதான் மீட்பு இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தால் சோப்பு நீரால் தூய்மையான நீரை கொண்டு பலமுறை நன்றாக உடலின் அனைத்து பாகங்களிலும் கிருமிகள் நீங்கும்படி கழுவ வேண்டும்.
- சோப்பு அல்லது நீர் இல்லாத இடத்தில் ஆல்கஹால் கொண்ட சானிடைசர் அல்லது துடைக்கும் வைப்-களை பயன்படுத்தலாம்.
- காயங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
- வெள்ள நீரிலும் சாக்கடை நீரிலும் பட்ட துணிகளை சுடுதண்ணீர் போட்டு டிடர்ஜென்டில் ஊறவைத்து இரண்டு முறை துவைத்த பின்பே மறுபடியும் பயன்படுத்த வேண்டும்.
- வெள்ளத்தில் நடக்க வேண்டும் என்ற சூழலில், ஒருவேளை உங்களிடம் ரப்பர் பூட்ஸ், ரப்பர் கிளவுஸ், காகிள்ஸ் இருந்தால் அணிந்து கொள்ளவும்.
கூரிய பொருட்களிடம் அதிக கவனம் தேவை
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நீரில் என்ன பொருள் எங்கு கிடக்கிறது என்று தெரியாது. எனவே கால் வைக்கும் இடங்களில் அல்லது நகரும்போது வெள்ள நீரில் அடித்து வரப்படும் கூர்மையான பொருட்கள் உடலில் குத்தி கிழித்து விட வாய்ப்பு உண்டு.
உதாரணத்துக்கு கண்ணாடி மற்றும் கண்ணாடி துண்டுகள், உலோகப் பொருட்கள் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். இது இன்பெக்ஷனுக்கு வழிவகுக்கும். அதுவும் துருப்பிடித்த இரும்பு துண்டு ஏதேனும் கிழித்திருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சிறிய புண்தான் என்று அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது எனவும் வெள்ளத்துக்குப் பின்பான பாதுகாப்பு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
காயங்களைப் பராமரிப்பது எப்படி?
- அதையும் மீறி உடலில் சற்று ஆழமான காயமாக இருந்தால் அதில், மலம் போன்ற கழிவுகள், மண், எச்சில் உள்ளிட்டவை பட்டால் அது வேறு பல விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவே திறந்த நிலையில் காயங்கள் ஏதேனும் இருந்தால் வெள்ள நீர் அதில் படாமல் தவிர்த்து விடுவது நல்லது.
- வெள்ள நீரைக் கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தால் வாட்டர் ப்ரூப் பேண்டேஜ் அணிந்து கொள்ளலாம். இது இன்பெக்ஷனுக்கான வாய்ப்பை குறைக்கும்.
- திறந்த நிலையில் உள்ள புண்கள் அல்லது காயங்களை முடிந்த அளவு சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.
- சிவத்தல், வீங்குதல், ரத்தம் வலிதல் உள்ளிட்ட அறிகுறிகள் காயங்களில் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
- ஏற்கனவே காய்ந்து போன காயங்கள் கூட இது போன்ற கடுமையான பொருட்கள் படும்போது மீண்டும் அதில் நோய் தொற்று ஏற்பட்டு காய்ச்சலை வரவழைக்க கூடும்.
நீந்தி விளையாட உகந்தது அல்ல
வெள்ள நீரானது சிறார்கள் நீந்தி விளையாடவோ, பல்துலக்கி, குளிக்கவோ உகந்தது அல்ல.
ஏதேனும் சாப்பிடும் முன்பு கண்டிப்பாக கையை சோப்பு நீரால் தான் கழுவ வேண்டும். குறிப்பாக குழந்தைகள் வெள்ள நீரைத் தொட்டுவிட்டு கை கழுவாமல் சாப்பிட்டால் பேதி வரலாம். நீரில் விளையாடும் போதும், பின்பு கைகழுவாமல் சாப்பிடும் போதும் அந்த தொற்றானது குழந்தைகளுக்கு பரவக்கூடும்.
அந்த மாதிரியான அசுத்தத் தண்ணீர் காதில் புகுந்தால் அதிக நோய் தொற்றை ஏற்படுத்தலாம்.
வெள்ள நீரில் மட்டுமல்ல வெள்ளநீர் கலந்த ஆறு குளம் ஏரி நீரிலும் கவனம் தேவை.

பட மூலாதாரம், Getty Images
கெமிக்கல் கலன்களைத் தொடாதீர்கள்
விஷத்தன்மை மிக்க கெமிக்கல் பயன்படுத்தப்படும் தொழிற்சாலையைச் சுற்றி வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ட்ரம், பேரல் உள்ளிட்டவை ஏதேனும் தென்பட்டால் அதை நகர்த்தவோ அல்லது அதில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்கவோ முயற்சிக்க வேண்டாம்.
ஒருவேளை அது ரசாயனப் பொடி, வாயு, அல்லது ரசாயன திரவம் நிரம்பி இருந்தால் அது வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது.
அப்படி ஏதேனும் பார்த்தால் காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவற்றுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
கார் பேட்டரிகளைக் கழற்றுவதில் கவனம்
வீட்டில் மின்சாரம் இல்லை. காரில் இருந்து பேட்டரிக்களை இணைத்து வீட்டுத் தேவைக்கு பயன்படுத்தலாம் என ஒரு சிலர் முயற்சிக்கலாம்.
அப்படி கார்களில் இருந்து பேட்டரிகளை அகற்றும் போது மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும்.
என்னதான் வெள்ள நீரில் காரின் பேட்டரிகள் இருந்திருந்தாலும் அவற்றில் எலக்ட்ரிக் சார்ஜ் இருக்கக்கூடும்.
அதுமட்டுமின்றி கார் பேட்டரிகளில் இருந்து கசியும் ஏதேனும் ஒரு ஆசிட்டை, கையில் தொட்டாலும் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே இன்சுலேட்டட் கிளவுஸ் என்ற பிரத்யேக கையுறை அணியாமல் கார் பேட்டரிகளை கையாள்வது மழை மட்டுமல்ல, எந்த காலத்திலும் உகந்தது அல்ல என அரசின் வழிகாட்டுதலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சாரத்தில் கவனம் தேவை
வீட்டில் உள்ள மின் சாதனங்களை அனைத்து வைப்பது நல்லது.
அதேபோல எரிவாயு சிலிண்டல், எரிவாயு பைப் லைன் ஆகியவற்றையும் அணைத்து வைப்பது மிகவும் நல்லது.
எங்கேனும் மின் கம்பிகள் அருந்து தொங்குவதைக் கண்டால் நமக்கு ஏன் வம்பு என நாம் மட்டும் விலகிச் செல்லாமல் மின்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். குழந்தைகளும் அவ்வழியே நடமாட வாய்ப்புண்டு.
வீட்டையோ வெளியிலயோ சுத்தம் செய்யும்போது தலைக்கு மேல் தொங்கும் மின் கம்பிகள் மீது ஒட்டடைக்குட்சி, துடைப்பம், துணி உள்ளிட்டவை படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
ஒருவேளை யாருக்கேனும் மின்சாரம் தாக்கினால், அவசரத்தில் மறந்துபோய் தாங்களாக ஓடி சென்று கையில் பிடித்து அவரை காப்பாற்ற முயலாமல் பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்டவற்றை வைத்து அவர்களை தள்ளி விடுவது நல்லது என மத்திய அரசின் நோய் தடுப்பு பாதுகாப்புத்துறையின் வெள்ளத்துக்குப் பின்பான பாதுகாப்பு வழிமுறைகளில் கூறியுள்ளது. அதேபோல் மனஅழுத்தத்த்தைத் தவிர்க்கவும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டது என்று கவலைப்பட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பொருட்களை எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் ஆரோக்கியத்தை வாங்குவது சற்றே சிரமம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












