'ஃபயர் பான்' முதல் 'ஃபேண்டா மேகி' வரை - தெருவோரக் கடைகளில் டிரெண்ட் ஆகும் உணவுகள்

பட மூலாதாரம், GETTY IMAGES
இந்தியாவில் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகள் அதன் தனித்துவமான சுவைக்காக அறியப்படுபவை.
ஆனால், சமீப ஆண்டுகளில் தெருவோர உணவு விற்பனையாளர்கள் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான உணவு வகைகளை தயாரிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களும் (influencers) காணொளிப் பதிவர்களும் (vloggers) அந்தத் தருணங்களை வைரலாக்குகின்றனர். சுயாதீன ஊடகவியலாளர் ஓம் ரௌத்ரே இந்தப் போக்கு குறித்து இங்கு பதிவு செய்கிறார்.
டெல்லியின் மையப்பகுதியில் உள்ள ஓடியோன் ’ஷுக்லா பான் பேலஸ்’ எனும் கடையில் தங்களின் கண்களை பயத்தில் மூடிக்கொண்டும் வாயை நன்றாக திறந்துகொண்டும் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். அந்த கடையின் உரிமையாளர் விஜய் ஷுக்லா அவர்களின் வாயில் எரியும் பான்-ஐ (வெற்றிலைப்பாக்கு) வேகமாக திணிக்கிறார்.
பான் என்பது வெற்றிலையில் சுண்ணாம்பு, ரோஜா இதழ்களால் செய்யப்பட்ட ஜாம், வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள ஏலக்காய், கிராம்பு உள்ளிட்டவற்றை கலந்துசெய்யப்படுவது.
இந்தியத் தலைநகரில் இருக்கும் ஷுக்லாவின் கடையில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பான் விற்கப்பட்டு வருகின்றது. ஆனால், நொறுக்கப்பட்ட ஐஸ் துகள்கள் மற்றும் கற்பூரம் சேர்த்து நெருப்பு பற்ற வைத்து வழங்கப்படும் பான்-ஐ எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியதிலிருந்து இக்கடை மிகவும் பிரபலமானது.

பட மூலாதாரம், Getty Images
ஃபயர் பான், ஓரியோ பக்கோடா
இந்தத் தொழிலில் நான்காம் தலைமுறையாக இருக்கும் ஷுக்லா வெற்றிலையில் சாதுர்யமாக அனைத்துப் பொருட்களையும் வைத்து எரியும் வெற்றிலையை வாடிக்கையாளரின் வாயில் திணிக்கிறார்.
ஆரம்பத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதுகுறித்து நூற்றுக்கணக்கான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அவற்றில் இந்த பான்-ஐ சாப்பிட்டு உற்சாகம் அடையும் வாடிக்கையாளர்கள் கட்டை விரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்டினர். பல இதழ்களிலும் இந்த அனுபவம் குறித்தும் அதிலுள்ள ஆபத்துகள் குறித்தும் எழுதப்பட்டன.
அப்போது முதல் இந்திய வாடிக்கையாளர்கள் ஃபேண்டா மேகி (ஃபேண்டா எனும் ஆரஞ்சு சோடாவை கலந்து செய்யப்படும் உடனடி நூடுல்ஸ்), ஓரியோ பக்கோடா (ஓரியோ பிஸ்கெட்டுகளை வைத்து செய்யப்படும் பக்கோடா) முதல் மண்குவளையில் வைத்து ‘பேக்’ செய்யப்படும் பீட்சா என, வித்தியாசமான முடிவே இல்லாத வகையில், தெருவோர உணவு வகைகளின் சோதனை முயற்சிகளை கண்டனர்.

பட மூலாதாரம், OM ROUTRAY
தெருவோர கடைகளின் ‘சோதனை முயற்சி’
இந்திய உணவுகளில் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகள் எப்போதுமே பின்னிப்பிணைந்த ஒன்றாக உள்ளது. உள்ளூர்களில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் விலை மலிவாக இருக்கும். அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் உள்ள மதிய உணவுக் கடைகளில் மலிவான விலையில் பலதரப்பட்ட பணியாளர்களுக்கு போதுமான அளவில் உணவுகள் கிடைக்கும். மாலையில் இயங்கும் உணவுக்கடைகளில் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் விரும்பி உண்ணும் வகையிலான உணவுகள் விற்பனை செய்யப்படும்.
தெருவோரக் கடைகளில் இத்தகைய சோதனை முயற்சி என்பது புதிதல்ல. குஜராத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் உணவுத்தொடரான ’ஜாஸுபென் பீட்சா’ கடையில், 1975-ஆம் ஆண்டில் காரமான சாஸ் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து செய்யப்பட்ட பீட்சா அறிமுகப்படுத்தப்பட்டது என, ஆமதாபாத்தைச் சேர்ந்த உணவு விமர்சகரும் எழுத்தாளருமான அனில் முல்சந்தானி தெரிவித்தார்.
அதேகாலக்கட்டத்தில் கொல்கத்தாவில் தெருவோர உணவு விற்பனையாளர்கள் எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட ஆட்டு மூளைகள் மற்றும் பெரியளவிலான ரோல்-களை செய்து விற்றனர்.
தெருவோர உணவுக் கடைகள் தொடர்பான தொழில்களில் உள்ள ஆர்வம் மற்றும் புதிய உணவுகளை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் காரணமாக, ஆமதாபாத் போன்ற நகரம், இத்தகைய உணவுகளில் புதுமைகளை புகுத்தும் நகரங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது என முல்சந்தானி தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வைரல் மோகம்
இத்தகைய புதுமைகள் வெகுகாலமாக நாட்டின் சில பகுதிகளுக்குள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், வைரலான காணொளிகள் மற்றும் சமூக ஊடகங்களின் ட்ரெண்டுகள் காரணமாக, இத்தகைய சோதனை முயற்சிகள் பரவலானது. பலரும் தனித்து தெரியும் மிகத்தீவிரமான சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆச்சர்யமும் அதிசயமும் இந்த புதுமைகளில் பெரும் பங்கு வகிக்கிறது. உடனடியாக வைரலாக வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பெரும்பாலும் இப்படியான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
மிகவும் வழக்கத்திற்கு மாறான இத்தகைய உணவுகள் இணையத்தில் பிரபலமாக்கப்பட்டு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
சமீபத்தில் புகையிலையுடன் ஐஸ்கிரீம் கலந்து செய்யப்பட்ட காணொளி ஒன்று வைரலானது.
அந்த காணொளியை பதிவர்கள் பலரும் முதன்மையான செய்தி ஊடகங்களும் பகிர்ந்திருந்தன. ஆனால், அதை யார் செய்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
‘பாகுபலி’ சாண்ட்விச்
இத்தகைய உணவுகள் அனைத்தும் கேமராவுக்காக மட்டுமே செய்யப்படுவதில்லை. சில அதன் வித்தியாசமான பெயர்களுக்காகவும் பிரபலமடைகின்றன.
மும்பையில் உள்ள 'பிபின் பிக் சாண்ட்விச்’ கடையில் 50-க்கும் மேற்பட்ட சாண்ட்விச் வகைகள் உள்ளன. அதில் மிக பிரபலமான சாண்ட்விச் 'பாகுபலி’ சாண்ட்விச் என அழைக்கப்படுகிறது. 2015-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் வசூலில் சாதனை படைத்த பாகுபலி திரைப்படத்தின் பெயர் அதற்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்த சாண்ட்விச் பெரியளவிலான நான்கு பிரெட் துண்டுகளில் வெண்ணெய், பச்சை சட்னி, பேபிகார்ன் துண்டுகள், இஞ்சி-பூண்டு விழுது, பழ ஜாம், அன்னாசி துண்டுகள், ஜெலப்பினோ எனப்படும் மிளகாய், ஆலிவ், வெங்காயம், குடைமிளகாய், மயோனீஸ், துருவப்பட்ட சீஸ், தக்காளி, துருவப்பட்ட முட்டைகோஸ், பீட்ரூட் உடன் பல மசாலாக்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.
இதில் சேர்க்கப்படும் பொருட்களின் எண்ணிக்கைக்காக, அதன் விலை 400 ரூபாயாக உள்ளது. சாதாரண சாண்ட்விச் விலையை விட இது நான்கு மடங்கு அதிகம்.
அந்த கடையின் உரிமையாளர் பாவேஷ், அந்த சாண்ட்விச் பிரபலமடைந்ததற்கும் உணவுப்பொருட்கள் வைரலாகும் போக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறினார். அதன் வெற்றிக்கு தன்னுடைய 'முயற்சியும் கற்பனைத்திறனும்' தான் காரணம் என கூறினார்.
“பல உணவுக்கடைகள் இதுபோன்ற சாண்ட்விச்களை விற்கின்றன. ஆனால், அதுகுறித்து நான் கவலைகொள்வதில்லை. ஒவ்வொருவருக்கும் தொழிலில் சொந்த அதிர்ஷ்டமும் திறமையும் தேவைப்படுகிறது,” என கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
வேண்டுமென்றே உருவாக்கப்படும் டிரெண்டுகள்
வேண்டுமென்றே உருவாக்கப்படும் இத்தகைய டிரெண்டுகள் தற்போது உணவுத்தொழிலின் ஒருங்கிணைந்த ஒன்றாகிவிட்டது என சிலர் கூறுகின்றனர்.
‘பாம்பே ஃபுட்டி டேல்ஸ்’ எனும் பெயரில் உணவு தொடர்பான காணொளிகளை பதிவிட்டுவரும் மும்பையை சேர்ந்த பதிவர் அபய் ஷர்மா, தங்களுக்காக வைரல் காணொளிகளை உருவாக்குமாறு தெருவோர கடை வைத்திருப்பவர்களிடமிருந்து தனக்கு அழைப்புகள் வருவதாக தெரிவித்தார்.
“அப்படி சேர்ந்து செய்வது அரிதானது அல்ல. முன்பு பதிவர்கள் தங்களுக்காக இத்தகைய அதிசயமான உணவுகளை செய்யுமாறு கடை உரிமையாளர்களிடம் கேட்ட காலம் உண்டு. கடை உரிமையாளர்களும் வைரலாகும் இத்தகைய காணொளிகளுக்கான யோசனைகளை தற்போது எங்களிடம் கேட்கின்றனர்,” என அவர் கூறுகிறார்.
'டெல்லி ஃபுட் வாக்ஸ்விச்’ எனும் டெல்லியைச் சேர்ந்த உணவுப் பயணக்குழுவின் நிறுவனர் அனுபவ் சப்ரா கூறுகையில், கடை உரிமையாளர்கள், கண்டென்ட்-ஐ உருவாக்குபவர்கள், வாடிக்கையாளர்கள் மூன்று தரப்புமே இத்தகைய போக்குகளுக்கு பங்களிக்கின்றன என தெரிவித்தார்.
“தெருவோர உணவு கடைகள் இனி வாழ்வாதாரம் பற்றியது அல்ல, இத்தகைய போக்குகளுக்காகத்தான் என கருதும் ஒரு குறிப்பிட்ட சமூக அடுக்கு உள்ளது,” என்கிறார் அவர்.
இப்படி வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான உறவு பெரிய உணவகங்களில் ஏற்கனவே உள்ளது, ஆனால், சாலையோர கடைகளில் இதற்கென விதிகள் ஏதும் இல்லை.
“ஆனால், தெருவோர கடை வைத்திருப்பவர்கள் உணவு கலைஞர்களாக மாறியுள்ளனர்,” என்கிறார் சப்ரா.

பட மூலாதாரம், Getty Images
எதிர்மறையான தாக்கம்
செய்தி இணையதளங்களும் சமூக ஊடகங்களும் அவர்களின் செல்வாக்கை அதிகப்படுத்தினாலும், சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கு இது எப்போதும் நேர்மறையாக இருந்ததில்லை.
கொல்கத்தாவில் உணவு விற்பனையாளர் ஒருவர் தயாரித்த புச்கா எனும் உணவு வகையில் ரம் கலந்து தயாரித்த காணொளியை பதிவர் ஒருவர் பகிர்ந்த நிலையில் அது சமூக ஊடகங்களில் டிரெண்டாகி அதனால் அவர் தன் கடையை மூடும் அளவுக்கு சென்றது. அதிகாரிகள் அவருடைய கடையை கண்டுபிடித்து, ஆல்கஹால் விற்பனைக்கான அனுமதி இல்லாததால் உரிமத்தை ரத்து செய்தனர்.
உணவை சுற்றிய வைரல் காணொளிகள் உணவு கலாசாரத்தை மாற்றினாலும், நம்பகமான தெருவோர உணவுகளில் இது மாற்றத்தை உருவாக்குமா என அதிசயிக்கின்றனர்.
“ஒரு பிராந்தியத்திற்கு மிகச்சிறந்ததாகக் கருதப்படும் தெருவோர உணவுகளுக்கு இனி என்ன நடக்கும்?” என சப்ரா வியக்கிறார்.
ஆனாலும் சில நிபுணர்கள் இத்தகைய வைரல் டிரெண்டுகளால் வளம்மிக்க பன்மைத்தன்மையும் கலாசாரமும் வாய்ந்த இந்திய தெருவோர உணவு வகைகள் மீது குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












