தினசரி குளியல், ஹேர் டிரையர் பயன்பாட்டால் முடி உதிருமா? ஷாம்பூ தேர்வு செய்வது எப்படி?

தலைமுடி உதிர்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் குளிக்கும் போது மட்டும் அதிகமாக முடி உதிர்வதாக நினைக்கிறீர்களா? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ, எந்த தண்ணீரில் குளிக்கிறீர்கள்? உங்களது சருமத்தின் தன்மை உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன.

நீங்கள் குளிக்கும்போது மட்டும் அதிகமாக முடி கொட்டுவது ஏன்? அதற்கான காரணங்கள், தடுப்பது எப்படி? என, உங்களின் அடிப்படையான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், சென்னையை சேர்ந்த தோலியல் மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

தலைக்கு குளிக்கும் போது முடி அதிகமாக உதிருமா?

தலைக்கு குளித்தால் அதிகமாக முடி உதிரும் என்பதில் உண்மையில்லை. தலைக்கு குளிக்கும்போது நாம் பின்பற்றும் சில பழக்கவழக்கங்களால் தலைமுடி உதிருமே தவிர, தலைக்கு குளித்தால் முடி அதிகமாக உதிரும் என்பது கிடையாது.

தினசரி குளித்தால் முடி உதிருமா?

வாரத்திற்கு எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும் என்பது அதன் தன்மையை பொறுத்து ஒருவருக்கொருவர் வேறுபடும். தலைமுடியின் வேரில் என்ணெய் அதிகமாக சுரந்தாலோ அல்லது பொடுகு அதிகமாக இருந்தாலோ அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்கள் உட்பட அதிகமாக வியர்க்கும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் தினமும் தலைக்குக் குளித்தால் கூட பிரச்னையில்லை.

ஆண்கள் வாரத்தில் எத்தனை நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும்?

ஆண்களுக்கு சருமத்தில் உள்ள செபேஷியஸ் எனப்படும் சுரப்பிகள் அதிகமாக உயிர்ப்புடன் இருக்கும். அதனால் எண்ணெய் சுரப்பு அதிகமாக இருக்கும் என்பதால் ஆண்கள் தினமும் கூட தலைக்கு குளிக்கலாம்.

தலை முடி

பட மூலாதாரம், Getty Images

சூடான நீர் அல்லது குளிர்ந்த நீர், தலைக்கு குளிக்க சிறந்தது எது?

மிகவும் சூடான நீரிலோ அல்லது மிகவும் குளிர்ந்த நீரிலோ தலைக்கு குளிக்கக் கூடாது. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதே சிறந்தது.

உப்பு தண்ணீரில் தலைக்கு குளிக்கலாமா?

தண்ணீரின் தன்மையினால் அதிகமாக முடி உதிராது. உப்பு தண்ணீரில் தலைக்கு குளிக்கிறீர்கள் என்றால், தலைக்கு குளித்த பின்னர் குடிநீரை ஒரு பாட்டில் அளவுக்கு கடைசியாக முடியில் ஊற்றி அலசினால், ஏற்கனவே பயன்படுத்திய தண்ணீரில் ஏதேனும் அசுத்தமோ அல்லது உவர் தன்மையோ இருந்தாலும் அது போய்விடும்.

தினமும் ஷவரில் குளிப்பது முடி உதிர்தலை அதிகப்படுத்துமா?

ஷவருக்கு அடியில் நின்று அதிக நேரம் குளிக்கக் கூடாது. ஏனெனில், நம் தலைமுடியில் இயற்கையான எண்ணெய் சுரப்பு இருக்கிறது. ஷவரில் அதிக நேரம் குளித்தால் அது போய்விடும். ஷாம்பூ நுரை சுத்தமாக போகும்வரை தலை முடியை கழுவினாலே போதுமானது.

ஷாம்பூ தேர்வு செய்வது எப்படி?

நமது தோலின் பி.ஹெச் 5.5 (அமிலத்தன்மை). அதே அளவுக்கு நெருக்கமாக அமிலத்தன்மை கொண்ட ஷாம்பூவை பயன்படுத்துவது நல்லது. அதிக அமிலத்தன்மை கொண்டிருந்தால் தலைமுடி வறண்டுவிடும். ஷாம்பூவின் பாட்டில்களிலேயே அதன் பி.ஹெச். அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.

இப்போது பெரும்பாலானோர் சல்ஃபேட் மற்றும் பாரஃபின் இல்லாத ஷாம்பூ பயன்படுத்துகின்றனர். ஷாம்பூ பயன்படுத்தும்போது நுரை வருவதற்காக சல்ஃபேட் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் எண்ணெய் படிந்த, அழுக்கு கொண்ட தலை முடி சிலருக்கு இருக்கும். அவர்கள் கொஞ்சம் சல்ஃபேட் உள்ள ஷாம்பூ பயன்படுத்துவதில் தவறில்லை. அவர்கள் நல்ல பிராண்டுகள் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் ஷாம்பூ பயன்படுத்தலாம்.

பொடுகுத்தொல்லை, சொரியாசிஸ், எக்ஸீமா உள்ளிட்ட பிரச்னை கொண்டவர்கள் சல்ஃபேட் மற்றும் பாரஃபின் இல்லாத ஷாம்பூ பயன்படுத்தலாம். ஏனெனில், இது தலைமுடியின் வேரை பாதிக்கும்.

தலைமுடி

பட மூலாதாரம், Google

ஷாம்பூ - சிகைக்காய் எது நல்லது?

ஷாம்பூ சிறந்தது. ஆனால், சிகைக்காய் நல்லது என பெரும்பாலானோர் நினைப்பார்கள். சிகைக்காய் தலைமுடியை வறட்சியாக்கிவிடும். மேலும், அதனை நன்றாக கழுவ வேண்டும். இல்லையென்றால் அதன் துகள்கள் தலையில் இருக்கும். இதனால் எரிச்சல் ஏற்படும்.

தலைமுடிக்கு எப்படிப்பட்ட கண்டீஷனரை பயன்படுத்த வேண்டும்?

வறண்ட முடி, எண்ணெய் பதம் கொண்ட முடி என ஒவ்வொருவரின் தன்மைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். முடி வலுவற்று இருக்கிறதென்றால், கண்டீஷனர் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. கண்டீஷனருக்கு பதிலாக சீரம் பயன்படுத்தலாம்.

தலைக்கு குளித்த பின்னர் ஒரே நாளிலேயே ‘பிசுபிசு’ என ஆகினால், உங்களது எண்ணெய் படிந்த தலைமுடி. தலைமுடி வறண்டிருந்தால் அது வறட்சியான முடி. அதற்கேற்ப ஷாம்பூ, கண்டீஷனரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தலைமுடியை எப்படி சுத்தம் செய்வது?

ஷாம்பூ என்பது தலைமுடி வேரில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். கன்டீஷனர் என்பது தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டும். அதனை வேருக்கு பயன்படுத்தக் கூடாது.

பொடுகை நீக்குவதற்கான ஷாம்பூ அல்லது மருத்துவர் பரிந்துரைத்த ஷாம்பூ பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதனை மருந்து போன்று பயன்படுத்த வேண்டும். அதனை முதலில் தேய்த்துவிட்டு 5-10 நிமிடங்கள் விட வேண்டும். கீட்டோ கோனசோல் அல்லது செலினியம் சல்பைடு என்ற பூஞ்சைக்கு எதிரான மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவை வேலை செய்ய வேண்டும் என்றால் 5-10 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். வழக்கமான ஷாம்பூ என்றால், நம் விரல்களை பயன்படுத்தி மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

தலை முடி

பட மூலாதாரம், Getty Images

தலை துவட்டும் துண்டு எப்படி இருக்க வேண்டும்?

நுண்ணிழை கொண்ட மிருதுவான துண்டுகளை பயன்படுத்தியே தலைமுடியை துடைக்க வேண்டும். மிகவும் கடுமையாக தலையை துவட்டக் கூடாது. நம் தலைமுடியை சுற்றி ‘க்யூட்டிக்கிள்’ எனும் படலம் இருக்கிறது. அது கீழ்நோக்கித்தான் இருக்க வேண்டும். மேல்நோக்கி இருக்கக் கூடாது. தலையை துவட்டும்போது ‘க்யூட்டிக்கிள்’ மேலே எழும்பிவிடும். இதனால் தலைமுடி மிகவும் கலைந்தது போன்று தோன்றும்.

தலைமுடியில் படிந்திருக்கும் தண்ணீரை ஒத்தி எடுத்தலே நல்லது. பெண்கள் சிலர் தலைமுடியை துவட்டுகிறோம் என அதனை அப்படியே முறுக்கி, ஆக்ரோஷமாக துடைப்பார்கள். இது, தலைமுடியை இழுத்து, வலுவற்ற முடிகள் கீழே உதிர்ந்துவிடும்.

‘ஹேர் டிரையர்’ பயன்படுத்தலாமா?

தலைமுடியை சாதாரணமாக காற்றிலேயே உலர வைக்க வேண்டும். முடியை உலர வைக்க ‘ஹேர் டிரையர்களை’ பயன்படுத்தும்போது அதில், குளிர்ந்த காற்றின் மூலம் காய வைப்பதற்கென அமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். இதனால் சூடான காற்று வராமல், குளிர்ந்த காற்று வருவது போல் மாற்றிக்கொள்ள வேண்டும். அதில் காய வைப்பதில் தவறில்லை. வெப்பமான காற்று வந்தால் முடியை கொஞ்சம் ’ஹேர் டிரையரிலிருந்து’ தள்ளி பயன்படுத்த வேண்டும்.

தொடர்ந்து முடியில் வெப்பம் படும்படி பயன்படுத்தக் கூடாது. தலைமுடியை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கென சீரம், ஸ்பிரேக்கள் கிடைக்கின்றன. அதை, 80-90% தலைமுடி காய்ந்ததும் அதனை ஒரே திசையில் தேய்த்து பின்னர் டிரையரை பயன்படுத்தலாம். ஒரே திசையில் அதனை தேய்த்தால்தான் ’க்யூட்டிக்கிள்’ கீழ்நோக்கி இருக்கும். வேகமாக டிரையரை பயன்படுத்திவிட வேண்டும்.

தலை முடி

பட மூலாதாரம், Getty Images

தலைக்கு குளித்ததும் சீப்பு வைத்து தலையை சீவலாமா?

அது மிகவும் தவறு. ஏற்கெனவே சிலருக்கு முடி வலுவற்று இருக்கும். ஈரத்துடன் தலைமுடியை சீவினால் அந்த முடிகள் உதிர்ந்துவிடும். தலைமுடி இரண்டிரண்டாக பிரிந்திருப்பது (Split hair) ஏற்படும். கண்டிப்பாக அதனை தவிர்க்க வேண்டும். முழுவதும் காய்ந்த பின்னரே தலைமுடியை சீவ வேண்டும். கைவிரல்களை பயன்படுத்தியே முதலில் சிக்குகளை களைக்க வேண்டும்.

முடி உதிர்வதை எப்போது பிரச்னையாக கருதி மருத்துவரை பார்க்க வேண்டும்?

ஒரு சுழற்சியின் அடிப்படையில்தான் தலைமுடி வளரும். 90 நாட்கள் தலைமுடி வளரும் என்றால், 2 வாரங்களுக்கு ‘ஓய்வுகாலம்’ என்பது இருக்கும். அதன்பிறகு ஒரு மாதம், தலைமுடி உதிர்வதற்கான காலம். இந்த சுழற்சி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இதில், நம்முடைய முடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கும். இதில், ஒரு 100 முடிகளாவது ‘உதிரும்’ கட்டத்தில் இருக்கும். அதேபோன்று, நாளொன்றுக்கு சுமார் 100 முடி உதிர்வது சாதாரணமானது தான். அதுபற்றி கவலைகொள்ள தேவையில்லை. அதற்கு மேல் இருந்தால் தான் மருத்துவரை அணுகுதல், அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

பொடுகு இருந்தாலும் அதனை கையை வைத்து உரிக்கக் கூடாது. வேருடன் ஒட்டியிருந்தால் அது சொரியாசிஸாக இருக்கலாம். அதனை கைகள் மூலம் உரித்தால் அதிகமாகிவிடும். பொடுகுக்கு நிரந்தரமான தீர்வு இல்லை. முடியின் வேரில் எண்ணெய் அதிகமாக சுரந்தால் பூஞ்சைத்தொற்று அதிகமாகும். எண்ணெய் பயன்படுத்தினால் அது சரியாகிவிடும் என நினைப்போம். ஆனால், எண்ணெய் பயன்படுத்தினால் அதன் மூலம் எரிச்சல் அதிகமாகும். ஏனெனில், எண்ணெய் அதிகமாக இருப்பதனால் தான் பொடுகுத்தொல்லை ஏற்படும். எரிச்சல், கட்டிகள், பெரிய படலங்கள், அதிலிருந்து ரத்தம் வருவது இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

முடி உதிர்தலை தடுக்க எப்படிப்பட்ட உணவு சிறந்தது?

அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்பவர்கள், புகை பிடிப்பவர்கள், பால் சம்பந்தமான பொருட்களை உண்பவர்களுக்கும் அதிகமாக தலைமுடி உதிரும். பால் பொருட்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால் பொடுகு வரும், முடியின் அடர்த்தி குறையும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்பவர்கள் பயன்படுத்தும் ‘வே புரோட்டீன்’ (Whey Protein) எனப்படும் புரோட்டீன் பவுடராலும் தலைமுடி அடர்த்தி குறையும். அது மாட்டுப்பாலில் இருந்து எடுக்கப்படுவதால் அதனை பயன்படுத்தக் கூடாது.

பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம். ஹீமோகுளோபின் மட்டுமல்லாமல் ரத்தத்தில் இரும்புச்சத்து எப்படி இருக்கிறது என்பதையும் கண்டறிய வேண்டும். வைட்டமின் டி குறைவாலும் முடி உதிரும். தைராய்டு பிரச்னையும் காரணமாக இருக்கலாம். வைட்டமின் பி12 குறைவாலும் ஏற்படும். இந்த சத்துகளுக்கான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயோட்டின் மாத்திரைகள் மட்டும் முடி உதிர்தலை தடுக்காது. ஜிங்க், செலீனியம், மக்னீசியம் குறைபாடுகளும் காரணம் தான். நட்ஸ், விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பூசணி விதைகள், சியா விதைகள், ஆழி விதைகள், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் ஒரு புரத வகை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சோயா, பன்னீர் தயிர் வகைகளை சைவ உணவாளர்கள் எடுக்க வேண்டும். அசைவமாக இருந்தால் முட்டை நல்ல புரத உணவு. முட்டையின் மஞ்சள் கருவை தவிர்க்கக் கூடாது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)